Library · ta

Numbers 7

7:1 மோசே பரிசுத்தக் கூடாரத்தை அமைத்து முடித்தான். அந்நாளிலேயே அதனை கர்த்தருக்கு அர்ப்பணித்தான். மோசே கூடாரத்தையும் அதிலுள்ள பொருட்களையும், பலிபீடத்தையும் அதற்குரிய அனைத்து பொருட்களையும் அபிஷேகம் செய்தான். இவையனைத்துப் பொருட்களும் கர்த்தரை தொழுதுகொள்வதற்கு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று இது காட்டியது. 7:2 பிறகு இஸ்ரவேலின் அனைத்து தலைவர்களும் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தினார்கள். இவர்கள் அவர்களது குடும்பத்தின் தலைவர்களும் கோத்திரங்களின் தலைவர்களும் ஆவார்கள். இவர்களே இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிடும் பொறுப்புடையவர்கள். 7:3 இத்தலைவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் மூடப்பட்ட ஆறு வண்டிகளையும் அதை இழுக்க பன்னிரெண்டு மாடுகளையும் கொண்டு வந்தனர். (ஒவ்வொரு தலைவர்களும் ஆளுக்கொரு மாட்டையும் இரு தலைவர்கள் சேர்ந்து ஒரு வண்டியையும் கொடுத்தனர்.) பரிசுத்தக் கூடாரத்தில் தலைவர்கள் இவற்றை கர்த்தருக்குக் கொடுத்தனர். 7:4 கர்த்தர் மோசேயிடம், 7:5 “தலைவர்களிடமிருந்து இந்த அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள். ஆசாரிப்புக் கூடாரத்திற்கான வேலைகளுக்கு இக்காணிக்கைகள் உதவியாயிருக்கும்படி இவற்றை லேவியர்களிடம் கொடு” என்று கூறினார். 7:6 எனவே, மோசே வண்டிகளையும், அவற்றை இழுத்து வந்த மாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை லேவியர்களிடம் கொடுத்தான். 7:7 அவன் அவற்றில் இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் குழுவினருக்குக் கொடுத்தான். அவர்களின் வேலைக்கு அந்த வண்டிகளும், மாடுகளும் தேவையாய் இருந்தன. 7:8 பிறகு நான்கு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் மெராரி குழுவினருக்குக் கொடுத்தான். அவர்களின் வேலைக்கு இந்த வண்டிகளும் மாடுகளும் தேவையாய் இருந்தன. ஆசாரியனான ஆரோனின் குமாரனான இத்தாமார் இவர்களின் வேலைக்கான பொறுப்பினை ஏற்றிருந்தான். 7:9 மோசே கோகாத் குழுவினருக்கு எந்த வண்டியையும், மாடுகளையும் கொடுக்கவில்லை. ஏனென்றால், அவர்களின் வேலை, பரிசுத்தமான பொருட்களைத் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்வதாகும். 7:10 மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்தான். அதே நாளில், தலைவர்கள் தங்கள் காணிக்கைகளை, அந்தப் பலிபீடத்தை அர்பணிப்பதற்காகக் கொண்டு வந்தனர், அவர்கள் தங்கள் காணிக்கைகளை கர்த்தருக்காகப் பலிபீடத்தின் மேல் வைத்தனர். 7:11 கர்த்தர் மோசேயிடம், “ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைவனும் தன் அன்பளிப்பைக் கொண்டு வந்து பலிபீடத்தில் அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.