Library · ta

Proverbs 3

3:1 என் மகனே, என் போதனைகளை மறவாதே, என் கட்டளைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள். 3:2 அவை உனக்கு நீண்ட ஆயுளையும், சமாதான வாழ்வையும் கொண்டுவரும். 3:3 அன்பும் உண்மையும் உன்னைவிட்டு ஒருபோதும் விலகாதிருப்பதாக; அவற்றை உன் கழுத்திலே அணிந்து, உன் இருதயத்தில் எழுதி வைத்துக்கொள். 3:4 அப்பொழுது நீ இறைவனின் பார்வையிலும் மனிதனின் பார்வையிலும் தயவையும் நற்பெயரையும் பெறுவாய். 3:5 உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை, உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே. 3:6 நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு, அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார். 3:7 உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே; யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு. 3:8 அது உன் உடலுக்கு சுகத்தையும், உனது எலும்புகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும். 3:9 நீ உன் செல்வத்தினாலும், உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு. 3:10 அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்; திராட்சை இரசத்தினால் உன் தொட்டிகள் நிரம்பிவழியும். 3:11 என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே; அவர் கடிந்துகொள்ளும்போது கோபங்கொள்ளாதே. 3:12 ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல், யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார். 3:13 ஞானத்தை அடைகிறவர்களும், புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 3:14 ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது, தங்கத்தைவிடப் பயனுள்ளது. 3:15 அது பவளங்களைவிட பெருமதிப்புள்ளது; நீ விரும்புகிற எதற்கும் அது நிகரல்ல. 3:16 அதின் வலதுகையில் நீண்ட ஆயுளும் இருக்கிறது; அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கின்றன. 3:17 அதின் வழிகள் இன்பமானது; அதின் பாதைகள் எல்லாம் சமாதானமானவை. 3:18 அதை அணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது வாழ்வு கொடுக்கும் மரம், அதனைப் பற்றிக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். 3:19 யெகோவா ஞானத்தினால் பூமிக்கு அஸ்திபாரமிட்டார், அவருடைய புரிந்துகொள்ளுதலினால் வானங்களை அமைத்தார்; 3:20 அவருடைய அறிவினால் ஆழங்கள் பிரிக்கப்பட்டன, மேகங்கள் பனித்துளியை விழப்பண்ணின. 3:21 என் மகனே, ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, சரியான நிதானிப்பையும் அறிவுடைமையையும் காத்துக்கொள். 3:22 அவை உனக்கு வாழ்வாகவும், உன் கழுத்துக்கு அலங்காரமாகவும் இருக்கும். 3:23 அப்பொழுது நீ உன் வழியில் பாதுகாப்புடன் போவாய்; உன் கால்களும் இடறாது. 3:24 நீ படுத்திருக்கும்போது பயப்படமாட்டாய்; நீ படுக்கும்போது உன் நித்திரை இன்பமாக இருக்கும். 3:25 திடீரென வரும் பேராபத்திற்கும் கொடியவர்கள்மேல் வரும் அழிவுக்கும் நீ பயப்படவேண்டாம். 3:26 யெகோவா உனது நம்பிக்கையாயிருப்பார்; அவர் உன் கால் இடறாமல் காப்பார். 3:27 நன்மைசெய்ய உன்னால் இயலும்போது, அதை பெறத்தக்கவர்களுக்கு கொடுக்காமல் விடாதே. 3:28 உன்னிடம் இருக்கும்போதே, உன் அயலவனிடம், “போய்வா; நாளைக்கு உனக்குத் தருவேன்” எனச் சொல்லாதே. 3:29 உன் அருகே நம்பிக்கையுடன் வாழும் அயலவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யாதே. 3:30 ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது காரணம் இல்லாமல் அவர்கள்மேல் குற்றம் சாட்டாதே. 3:31 வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய வழிகளில் எதையும் தெரிந்தெடுக்காதே. 3:32 ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்; ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார். 3:33 கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும், ஆனால் நீதிமான்களுடைய வீட்டிலோ, அவருடைய ஆசீர்வாதம் இருக்கும். 3:34 பெருமைகொண்ட பரியாசக்காரர்களை யெகோவா ஏளனம் செய்கிறார்; ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கோ, கிருபையைக் கொடுக்கிறார். 3:35 ஞானிகள் மதிப்பைப் பெறுவார்கள்; மூடர்கள் வெட்கப்படுவார்கள்.