Library · ta

Psalms 115

115:1 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது அன்பின் நிமித்தமும், உமது சத்தியத்தின் நிமித்தமும் உமது பெயருக்கே மகிமை உண்டாகட்டும். 115:2 பிற நாடுகளோ, “அவர்களுடைய இறைவன் எங்கே?” என்று ஏன் கேட்கிறார்கள். 115:3 நம்முடைய இறைவன் பரலோகத்தில் இருக்கிறார்; அவர் தமக்கு விருப்பமானதையே செய்கிறார். 115:4 ஆனால் பிற மக்களின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது. 115:5 அவைகளுக்கு வாய்கள் உண்டு, ஆனாலும் அவைகளால் பேசமுடியாது; கண்கள் உண்டு, அவைகளால் பார்க்க முடியாது. 115:6 அவைகளுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவைகளால் கேட்கமுடியாது; மூக்கிருந்தும், அவைகளால் முகரமுடியாது. 115:7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொட்டுப் பார்க்க முடியாது; கால்கள் உண்டு, ஆனால் அவைகளால் நடக்க முடியாது; தங்கள் தொண்டைகளால் சத்தமிடக்கூட அவைகளால் முடியாது. 115:8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள். 115:9 இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார். 115:10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார். 115:11 அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார். 115:12 யெகோவா நம்மை நினைவில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்; அவர் இஸ்ரயேலின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்; அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். 115:13 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற பெரியோரையும், சிறியோரையும் அவர் ஆசீர்வதிப்பார். 115:14 யெகோவா உங்களைப் பெருகப்பண்ணுவாராக, உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பெருகப்பண்ணுவாராக. 115:15 வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய யெகோவாவினால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக. 115:16 மிக உயர்ந்த வானங்கள் யெகோவாவினுடையவை; பூமியையோ அவர் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறார். 115:17 இறந்தவர்கள் யெகோவாவைத் துதிப்பதில்லை, மரணத்தின் மவுனத்தில் இறங்குகிறவர்களும் துதியார்கள். 115:18 இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.