Psalms 33
33:1 நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்; அவரைத் துதிப்பது நேர்மையுள்ளவர்களுக்குத் தகுதியானது.
33:2 யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்; பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள்.
33:3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; திறமையாக இசைத்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்.
33:4 யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது.
33:5 யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது.
33:6 யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன.
33:7 அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்; ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார்.
33:8 பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக.
33:9 ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது.
33:10 யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்; அவர் மக்களின் நோக்கங்களைத் தடுக்கிறார்.
33:11 ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும், அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும்.
33:12 எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ, எந்த மக்களை அவர் தமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டாரோ அவர்கள் பாக்கியவான்கள்.
33:13 யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்;
33:14 தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் அனைவரையும் கவனிக்கிறார்.
33:15 அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.
33:16 எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை; எந்த ஒரு போர்வீரனும் தனது மிகுந்த வலிமையினால் தப்புவதுமில்லை.
33:17 விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்; அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது.
33:18 யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல் அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து,
33:19 மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார், பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார்.
33:20 நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார்.
33:21 நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால் எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன.
33:22 யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.