Library · ta

Psalms 35

35:1 தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி, என்னோடு போராடுகிறவர்களுடன் நீர் போராடும். 35:2 கேடயத்தையும் கவசத்தையும் எடுத்துக்கொள்ளும்; எனக்கு உதவிசெய்ய எழுந்து வாரும். 35:3 என்னைத் துரத்துகிறவர்களுக்கு எதிராக ஈட்டியையும் எறிவேலையும் நீட்டி இப்படி சொல்லும்: நீர் என் ஆத்துமாவுக்கு, “நானே உனது இரட்சிப்பு.” 35:4 எனது உயிரை வாங்கத் தேடுகிறவர்கள் அவமானம் அடைந்து வெட்கப்படுவார்களாக; என்னை அழிக்கச் சதிசெய்கிறவர்கள் மனம் தளர்ந்து பின்வாங்கிப் போவார்களாக. 35:5 யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால் காற்றிலே பறந்து போகிற பதரைப்போல் இருப்பார்களாக; 35:6 யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால், அவர்களுடைய பாதை இருளாகவும், சறுக்குகிறதாகவும் இருப்பதாக. 35:7 காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும், காரணமின்றி அவர்கள் எனக்காக குழிதோண்டி இருப்பதனாலும், 35:8 அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக; அவர்கள் மறைத்துவைத்த வலை அவர்களையே சிக்கவைப்பதாக; அந்தக் குழிக்குள் அவர்களே விழுந்து அழிந்துபோவார்களாக. 35:9 அப்பொழுது என் ஆத்துமா யெகோவாவிடம் சந்தோஷப்பட்டு, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ச்சியடையும். 35:10 “யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? நீர் ஏழைகளை ஒடுக்குகிற வலிமையானவர்களிடம் இருந்தும், ஏழைகளையும் குறைவுள்ளோரையும் கொள்ளையிடுகிறவர்களிடம் இருந்தும் விடுவிக்கிறீர்” என்று என் முழு உள்ளமும் வியப்புடன் சொல்லும். 35:11 இரக்கமற்ற சாட்சிகள் முன்வருகிறார்கள்; எனக்குத் தெரியாதவைகளை அவர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள். 35:12 நன்மைக்குப் பதிலாய் அவர்கள் எனக்குத் தீமை செய்து, என்னை உதவியின்றி விட்டுவிடுகிறார்கள். 35:13 ஆனாலும் அவர்கள் வியாதியாய் இருந்தபோதோ, நான் துக்கவுடை உடுத்தி உபவாசத்துடன் என்னைத் தாழ்த்தினேன். எனது மன்றாட்டுகள் பதிலளிக்கப்படாமல் என்னிடமே திரும்பிவந்தபோது, 35:14 எனது நண்பர்களைப்போலவும் சகோதரரைப் போலவும் நான் அவர்களுக்காக துக்கித்தேன்; என் தாய்க்காக அழுகிறது போல, துக்கத்தில் என் தலையை குனிந்து கொண்டேன். 35:15 ஆனால் நான் இடறியபோதோ, அவர்கள் ஒன்றுகூடி மகிழ்கிறார்கள்; நான் எதிர்பாராத வேளையில் தாக்குகிறவர்கள், எனக்கெதிராய் ஒன்றுகூடி, ஓய்வின்றி என்னை நிந்தித்தார்கள். 35:16 அவர்கள் இறை பக்தியற்றவர்களோடு சேர்ந்து பரியாசம் செய்து, என்னைப் பார்த்து பற்களைக் கடித்தார்கள். 35:17 யெகோவாவே, எதுவரையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்? அவர்கள் செய்யும் அழிவுகளிலிருந்து என்னையும் சிங்கங்களிடமிருந்து விலையுயர்ந்த என் உயிரையும் தப்புவியும். 35:18 அப்பொழுது மகா சபையிலே நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; மக்கள் கூட்டங்களின் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன். 35:19 காரணமின்றி என்னைப் பகைக்கிறவர்கள் என்னைப் பழித்து மகிழாமலும், காரணமின்றி என்னை வெறுக்கிறவர்கள் தவறான நோக்கத்தோடு கண் சிமிட்டாமலும் இருக்கட்டும். 35:20 அவர்கள் சமாதானமாய்ப் பேசுவதில்லை; நாட்டில் அமைதியாய் வாழ்கிறவர்களுக்கு எதிராய் வஞ்சகமாய்த் திட்டமிடுகிறார்கள். 35:21 அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது: “ஆ! ஆ! எங்கள் கண்களாலேயே நாங்கள் இதைக் கண்டிருக்கிறோம்.” 35:22 யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும். யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாயிராதேயும். 35:23 விழித்தெழும், எழுந்து எனக்காக வழக்காடும்; என் இறைவனே, யெகோவாவே, எனக்காகப் போராடும். 35:24 என் இறைவனாகிய யெகோவாவே, உமது நீதியின் நிமித்தம் என்னை நியாயம் விசாரியும்; அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும். 35:25 “ஆ! நாங்கள் விரும்பியதே நடந்துவிட்டது!” என்று அவர்கள் சிந்திக்க விடாதேயும் அல்லது “நாங்கள் அவனை விழுங்கிவிட்டோம்” என்று அவர்கள் சொல்லவிடாதேயும். 35:26 என் துன்பத்தைக் குறித்து என்னைப் பழித்து மகிழ்கிறவர்கள் எல்லோரும் வெட்கமடைந்து கலங்குவார்களாக; எனக்கு மேலாகத் தங்களை உயர்த்துகிறவர்கள் எல்லோரும் வெட்கத்தாலும் அவமானத்தாலும் மூடப்படுவார்களாக. 35:27 என் நீதி நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறவர்கள், சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் ஆர்ப்பரிப்பார்களாக. “தனது பணியாளனின் நலனை விரும்புகிற யெகோவா உயர்த்தப்படுவாராக” என்று அவர்கள் எப்பொழுதும் சொல்லட்டும். 35:28 எனது நாவு உமது நீதியை அறிவிக்கும், நாள்முழுவதும் உம்மைத் துதிக்கும்.