Matthew 13
13:1 அதே நாளில், இயேசு வீட்டை விட்டு வெளியே போய், கடலோரமாக உட்கார்ந்திருந்தார்.
13:2 அப்போது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடி வந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள்.
13:3 அவர் அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகளாகச் சொன்னார்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான்.
13:4 அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதை ஓரத்தில் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.
13:5 சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும்,
13:6 வெயில் அதிகமான போதோ, பயிர்கள் வாடிப் போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்து போயின.
13:7 வேறு சில விதைகள் முட்செடிகளின் நடுவிலே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை மூடி நெருக்கிப் போட்டன.
13:8 ஆனால் வேறு சில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.
13:9 காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார்.
13:10 அப்போது சீடர்கள் அவரிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலமாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள்.
13:11 அவர் அதற்கு, “பரலோக அரசின் இரகசியங்களைப் பற்றிய அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கோ, அது கொடுக்கப்படவில்லை.
13:12 இருக்கின்றவனுக்கு மேலும் கொடுக்கப்படும். அவன் நிரம்பி வழியுமளவுக்கு பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடமிருந்து அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
13:13 இதனாலேயே, அவர்களுடன் நான் உவமைகள் மூலமாகப் பேசுகின்றேன்: “ ‘அவர்கள் கண்டும் அதை அறியாதவர்களாகவும் கேட்டும் அதை புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.’
13:14 ஏசாயா கூறிய இறைவாக்கு அவர்களில் நிறைவேறுகிறது: “ ‘நீங்கள் எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்; நீங்கள் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டீர்கள்.
13:15 ஏனெனில் இந்த மக்களின் இருதயம் சுரணையற்றுப் போயிற்று; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கின்றார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கின்றார்கள். இல்லாவிட்டால், அவர்கள் தங்கள் கண்களால் பார்த்திருப்பார்கள். காதுகளால் கேட்டிருப்பார்கள். இருதயத்தால் அறிந்து உணர்ந்திருப்பார்கள். அவர்கள் என்னிடமாய் திரும்பியிருப்பார்கள். நான் அவர்களைக் குணமாக்கியிருப்பேன்.’
13:16 உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை காண்கின்றன; உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை கேட்கின்றன.
13:17 நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், பல இறைவாக்கினர்களும், நீதிமான்களும் நீங்கள் பார்ப்பதைக் காண ஆவலாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பதை அவர்கள் கேட்கவும் ஆவலாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.
13:18 “ஆகையால் இப்போது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்:
13:19 எவராவது இறைவனின் அரசைப் பற்றிய செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவனுடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதையருகே விதைகள் விழுந்ததைக் குறிக்கும்.
13:20 கற்பாறையின் மீது விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பாயிருக்கும் மற்றவர்களோ, வார்த்தையைக் கேட்டு, அதை உடனே மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்கள்.
13:21 ஆயினும் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக் காலம் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள். வார்த்தையின் பொருட்டு கஷ்டங்களும் துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாக விழுந்து போகின்றார்கள்.
13:22 முட்செடிகளுக்குள் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்கிறார்கள், ஆனாலும் உலக வாழ்வின் கவலைகளும் செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும் அவர்கள் கேட்ட அந்த வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. அதனால் அது பலனற்றுப் போகின்றது.
13:23 விதை விதைக்கப்பட்ட நல்ல நிலத்திற்கு ஒப்பான மற்றவர்களோ, வார்த்தையைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்கின்றவர்கள். இவர்கள் முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுக்கின்றார்கள்.”
13:24 இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கின்றது.
13:25 எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுச் சென்றான்.
13:26 கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்போது களைகளும் காணப்பட்டன.
13:27 “வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.
13:28 “அதற்கு அவன், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான். “வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள்.
13:29 “அதற்கு அவன், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கி விடக் கூடும்.
13:30 அறுவடை வரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்போது நான் அறுவடை செய்கின்றவர்களிடம், முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதன்பின் கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்’ என்றான்.”
13:31 அவர் அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒரு மனிதன் தனது நிலத்தில் நட்ட கடுகு விதையைப் போன்றது.
13:32 அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார்.
13:33 அவர் அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, புளிப்பூட்டும் பதார்த்தத்திற்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் மிகவும் அதிகளவான மாவிலே புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் கலந்து வைத்தாள். அது மாவு முழுவதற்கும் புளிப்பூட்டியது” என்றார்.
13:34 இயேசு இந்தக் காரியங்களையெல்லாம், கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர் அவர்களுடன் எதையுமே பேசவில்லை.
13:35 இறைவாக்கினன் மூலமாகக் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: “நான் உவமைகளால் என் வாயைத் திறப்பேன். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.”
13:36 அதன்பின் அவர், மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச் சொல்லும்” என்று கேட்டார்கள்.
13:37 அவர் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மனுமகன்.
13:38 வயல் என்பது உலகம். நல்ல விதை, இறையரசின் பிள்ளைகள். களைகள், தீயவனின் பிள்ளைகள்.
13:39 அவற்றை விதைக்கிற பகைவன், பிசாசு. அறுவடை என்பது, உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள், இறைதூதர்கள்.
13:40 “களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுவது போல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும்.
13:41 மனுமகன் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் போய் அவரது அரசில் இருக்கின்ற பாவத்திற்குக் காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கின்ற எல்லோரையும் ஒன்றுசேர்த்து,
13:42 எரியும் சூளைக்குள் எறிந்து விடுவார்கள். அங்கே அழுகையும், வேதனையான பற்கடிப்பும் இருக்கும்.
13:43 அப்போது நீதிமான்களோ, தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப் போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
13:44 “பரலோக அரசு, ஒருவன் ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலைக் கண்டுபிடித்து, அதைத் திரும்பவும் மறைத்து வைத்ததற்கு ஒப்பாய் இருக்கின்றது. எனவே அவன் போய் தனது மனமகிழ்ச்சியின் பொருட்டு, தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, புதையல் உள்ள அந்த வயலை வாங்குகிறான்.
13:45 “மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் சிறந்த முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கின்றது.
13:46 பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
13:47 “மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லாவிதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது.
13:48 வலை நிரம்பியபோது, மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் உட்கார்ந்து, நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள். மோசமானவற்றையோ எறிந்துவிட்டார்கள்.
13:49 இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைதூதர்கள் வந்து நீதிமான்களிலிருந்து தீமையானவர்களைப் பிரித்தெடுத்து,
13:50 அவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்து விடுவார்கள். அங்கே அழுகையும், வேதனையான பற்கடிப்பும் இருக்கும்.
13:51 “இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக் கொண்டீர்களா?” என்று இயேசு கேட்டார். அவர்கள், “ஆம்” என பதிலளித்தார்கள்.
13:52 “ஆகவே, பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு நீதிச்சட்ட ஆசிரியனும், தனது களஞ்சிய அறையிலிருந்து, புதியவைகளையும் பழையவைகளையும் வெளியே கொண்டுவருகின்ற, ஒரு வீட்டுச் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்றார்.
13:53 இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்த பின், அங்கிருந்து சென்றார்.
13:54 அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர்கள் வியப்புற்று, “இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும், அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?” என்று கேட்டார்கள்.
13:55 அவர்கள், “இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா?
13:56 இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கின்றார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி,
13:57 அவரை ஏற்றுக்கொள்ளாது எரிச்சலும் கோபமும் அடைந்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினனுக்கு அவனது சொந்த ஊரிலும், அவனது சொந்த வீட்டிலும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மதிப்புக் கிடைக்கிறது” என்றார்.
13:58 அவர்களுடைய விசுவாசக் குறைவின் காரணமாக, அவர் அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.