Library · ta

Matthew 14

14:1 அக்காலத்திலே சிற்றரசனான ஏரோது, இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். 14:2 ஏரோது தனது ஏவலாட்களிடம், “இவன் யோவான் ஸ்நானகனே; இவன் திரும்பவும் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறான். அதனாலேயே, இவனிடத்தில் அற்புத வல்லமைகள் செயல்படுகின்றன” என்று சொன்னான். 14:3 தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு, ஏரோது ஏற்கெனவே யோவானைக் கைது செய்து, அவனை விலங்குகளால் கட்டி, சிறையில் அடைத்திருந்தான். 14:4 ஏனெனில் யோவான் அவனிடம், “அவளை நீ வைத்திருப்பது நீதிச்சட்டத்திற்கு முரணானது” என்று சொல்லியிருந்தான். 14:5 ஏரோது யோவானைக் கொலை செய்ய விரும்பினான், ஆயினும் மக்களுக்குப் பயந்திருந்தான். ஏனெனில் மக்கள் யோவானை இறைவாக்கினன் என்று எண்ணினார்கள். 14:6 ஏரோதின் பிறந்த நாள் அன்று, ஏரோதியாளின் மகள் அவர்களுக்காக நடனமாடி, ஏரோதை மிகவும் மகிழ்வித்தாள். 14:7 அதனால் அவள் எதைக் கேட்டாலும் அதை அவளுக்குத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான். 14:8 அவள் தனது தாயின் தூண்டுதலினால், “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள்” என்று கேட்டாள். 14:9 அரசன் மிகவும் துக்கமடைந்தான். ஆனாலும் தனது ஆணையின் பொருட்டும், தனது விருந்தினர்களின் பொருட்டும், அவள் கேட்டதைக் கொடுக்கும்படி அவன் உத்தரவிட்டான். 14:10 அவ்வாறே அரசனின் உத்தரவை நிறைவேற்றி, யோவானை சிறையில் வைத்து சிரச்சேதம் செய்தார்கள். 14:11 அவனுடைய தலை ஒரு தட்டில் வைக்கப்பட்டு, அந்தச் சிறு பெண்ணிடம் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அவள் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள். 14:12 யோவானின் சீடர்கள் வந்து, அவனது உடலை எடுத்து அடக்கம் பண்ணினார்கள். அதன்பின்பு அவர்கள், இயேசுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள். 14:13 இப்படி நடந்ததைக் கேள்விப்பட்டதும், இயேசு யாருக்கும் தெரியாமல் தனிமையான ஒரு இடத்திற்குப் படகில் ஏறிச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள், பட்டணத்திலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். 14:14 இயேசு கரையில் இறங்கியவுடன், அங்கே பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டு, அவர்கள்மீது இரக்கம் கொண்டு, அவர்களில் நோயுற்று இருந்தோரைக் குணமாக்கினார். 14:15 மாலை வேளையானபோது, சீடர்கள் அவரிடம் வந்து, “இது ஒரு ஒதுக்குப்புறமான இடம். நேரமாகிவிட்டதால், கூடியிருப்பவர்களை அனுப்பி விடும். அவர்கள் கிராமங்களுக்குப் போய், அங்கே தங்களுக்கு வேண்டிய உணவை வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள். 14:16 அதற்கு இயேசு, “அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்றார். 14:17 “இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன” என அவர்கள் சொன்னார்கள். 14:18 “அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். 14:19 அதன்பின்பு, மக்களை புற்தரையில் உட்காரும்படி செய்து, அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைத் துண்டு துண்டுகளாக்கிச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள். 14:20 அவர்கள் எல்லோரும் உணவு உண்டு திருப்தியடைந்தார்கள். அவர்கள் உண்ட பின்னர் மீதியான துண்டுகளை, சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். 14:21 உணவு உண்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. இவர்களைத் தவிர, பெண்களும் பிள்ளைகளும்கூட இருந்தார்கள். 14:22 பின்பு அவர் மக்கள் கூட்டத்தை அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கையில், தனக்கு முன்பாகவே சீடர்களை படகில் ஏறி மறுகரைக்குப் போகும்படி செய்தார். 14:23 அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, இயேசு தனிமையாக மன்றாடுவதற்கென ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபோது, அவர் அங்கே தனிமையாய் இருந்தார். 14:24 ஆனால் சீடர்கள் சென்ற படகு, கரையைவிட்டு வெகு தூரம் போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால், படகு அலைகளினால் அலைக்கழிக்கப்பட்டது. 14:25 அதிகாலை மூன்று மணியளவில் இயேசு கடலின் மேல் நடந்து அவர்களிடம் சென்றார். 14:26 அவர் கடலின் மேல் நடந்து வருவதை சீடர்கள் கண்டபோது, அவர்கள் திகிலடைந்து, “பேய்!” என்று பயத்தில் அலறினார்கள். 14:27 உடனே இயேசு அவர்களிடம்: “தைரியமாய் இருங்கள்! நான்தான், பயப்பட வேண்டாம்” என்றார். 14:28 அதற்கு பேதுரு, “ஆண்டவரே, நீர்தான் என்றால், நானும் தண்ணீர் மேல் நடந்து உம்மிடம் வரும்படி சொல்லும்” என்றான். 14:29 அதற்கு அவர், “வா” என்றார். அப்போது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின் மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான். 14:30 ஆனால் அவன் காற்றைக் கண்டபோது, பயமடைந்து அமிழத் தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான். 14:31 உடனே இயேசு தமது கையை நீட்டி, அவனைப் பிடித்து, “விசுவாசம் குறைந்தவனே! நீ ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார். 14:32 அவர்கள் படகில் ஏறியபோது காற்று தணிந்தது. 14:33 படகில் இருந்தவர்கள் அவரை வழிபட்டு, “உண்மையாகவே, நீர் இறைவனின் மகன்” என்றார்கள். 14:34 அவர்கள் மறுகரைக்குப் போய், கெனேசரேத்து என்னும் இடத்தில் கரை இறங்கினார்கள். 14:35 அந்த இடத்து மக்கள், இயேசுவை அடையாளம் கண்டுகொண்டதும், சுற்றுப்புறங்களுக்கு எல்லாம் செய்தி அனுப்பினார்கள். மக்களோ, தங்களில் நோயுற்றிருந்தவர்களையெல்லாம் அவரிடம் கொண்டுவந்தார்கள். 14:36 நோயாளிகள் அவரது மேலாடையின் ஓரத்தையேனும் தொடுவதற்கு, அவர் அனுமதிக்க வேண்டுமென, அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.