Library · ta

Matthew 7

7:1 “நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்புச் செய்யாதிருங்கள்; 7:2 நீங்கள் மற்றவர்களை குற்றவாளிகளாகத் தீர்ப்பது போலவே, நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். 7:3 “நீ உனது கண்ணிலுள்ள மரக்கட்டையைக் கவனிக்கத் தவறி, உனது சகோதரனின் கண்ணிலுள்ள சிறு துரும்பைப் பார்ப்பது ஏன்? 7:4 உன் கண்ணில் மரக்கட்டை இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள சிறு துரும்பை எடுத்துப் போடுகிறேன்’ என எப்படிச் சொல்லலாம்? 7:5 வெளிவேடக்காரனே! முதலில் உனது கண்ணிலுள்ள மரக்கட்டையை எடுத்துப் போடு; அப்போது உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக உன்னால் தெளிவாகப் பார்க்க முடியும். 7:6 “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம்; உங்கள் முத்துக்களைப் பன்றிகளுக்கு முன் வீச வேண்டாம். அப்படிச் செய்தால், அவைகளை மிதித்துவிட்டு, திரும்பி வந்து உங்களைக் குதறிவிடும். 7:7 “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டுகொள்வீர்கள்; கதவைத் தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். 7:8 ஏனெனில், கேட்கின்ற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கின்றான்; தேடுகிறவன், கண்டுகொள்கின்றான்; கதவைத் தட்டுகிறவனுக்குத் திறக்கப்படுகிறது. 7:9 “உங்களில் யார் அப்பம் கேட்கும் தன் மகனுக்கு கல்லைக் கொடுப்பான்? 7:10 அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு பாம்பைக் கொடுப்பான்? 7:11 நீங்கள் தீயவர்களாய் இருந்தும், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால், பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, நல்ல அன்பளிப்புகளைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்! 7:12 ஆகவே மற்றவர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்; ஏனென்றால் இவையே நீதிச்சட்டத்தினதும் இறைவாக்கினர்களினதும் கருப்பொருள். 7:13 “ஒடுக்கமான வாசல் வழியாக உள்ளே நுழையுங்கள். ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாசல் அகலமானது, வழியும் விரிவானது. அநேகர் அதன் வழியாகவே உள்ளே நுழைகிறார்கள். 7:14 ஆனால் ஒடுக்கமான வாசலும், குறுகலான வழியுமே வாழ்வுக்கு வழிநடத்துகின்றன. ஒரு சிலர் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கிறார்கள். 7:15 “போலி இறைவாக்கினரைக் குறித்து விழிப்பாயிருங்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ஆனால் உள்ளத்திலோ அவர்கள் கடித்துக் குதறுகிற ஓநாய்கள். 7:16 அவர்களது செயல்களின் விளைவினால் நீங்கள் அவர்களை அறிந்துகொள்வீர்கள். மக்கள் முட்புதர்களில் இருந்து திராட்சைப் பழங்களையும், முட்செடிகளிலிருந்து அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா? இல்லையே, 7:17 அதேபோல், ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனியைக் கொடுக்கும். ஆனால் பழுதான மரமோ, பழுதான கனியையே கொடுக்கும். 7:18 நல்ல மரம் பழுதான கனிகளைக் கொடுக்க மாட்டாது, பழுதான மரம் நல்ல கனிகளைக் கொடுப்பதில்லை. 7:19 நல்ல கனி கொடாத ஒவ்வொரு மரமும், வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பினுள் எறியப்படும். 7:20 இப்படியே அவர்களின் செயல்களின் விளைவினால் அவர்களை இனங்கண்டுகொள்வீர்கள். 7:21 “என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று அழைக்கின்றவர்கள் எல்லோரும் பரலோக அரசிற்குள் செல்வதில்லை. மாறாக பரலோகத்தில் இருக்கின்ற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கின்றவர்கள் மட்டுமே அதன் உள்ளே செல்வார்கள். 7:22 அந்நாளில் அநேகர் என்னிடம், ‘ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரில் இறைவாக்கு சொல்லவில்லையா? உமது பெயரில் பேய்களைத் துரத்தவில்லையா? உமது பெயரில் பல அற்புதங்களைச் செய்யவில்லையா?’ என்று சொல்வார்கள். 7:23 அப்போது நான் அவர்களிடம், ‘இறைவனின் கட்டளைகளை மீறுகிறவர்களே! நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை, என்னைவிட்டு அகன்று அப்பாலே போங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்வேன். 7:24 “எனவே நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செய்கின்ற ஒவ்வொருவனும், கற்பாறையின் மீது தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனிதனைப் போலிருப்பான். 7:25 மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது; இருந்தும், அது விழுந்து போகவில்லை. ஏனெனில் அதன் அத்திவாரம் கற்பாறையின் மீது போடப்பட்டிருந்தது. 7:26 ஆனால் எனது இவ்வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாத ஒவ்வொருவனும், மணலின் மீது தன் வீட்டைக் கட்டிய மூடனைப் போலிருப்பான். 7:27 மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது, வீடோ பலத்த சேதத்துடன் இடிந்து விழுந்தது.” 7:28 இவற்றை இயேசு சொல்லி முடித்தபோது, அவரது போதனையைக் கேட்டு, மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். 7:29 ஏனெனில் அவர் அவர்களது நீதிச்சட்ட ஆசிரியர்களைப் போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் போதித்தார்.