Matthew 8
8:1 இயேசு மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
8:2 அப்போது, தொழுநோயுள்ள ஒரு மனிதன் வந்து, அவர் முன் முழந்தாழிட்டு, “ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைக் குணமாக்கிச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான்.
8:3 இயேசு தன் கையை நீட்டி, அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் உண்டு, நீ சுத்தமடைவாயாக” என்று சொன்னார். உடனே, அவன் தனது தொழுநோயிலிருந்து குணமாகி சுத்தமானான்.
8:4 அப்போது இயேசு அவனிடம், “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் மதகுருவுக்கு உன்னைக் காண்பித்து, நீ குணமடைந்ததற்கான ஒரு அத்தாட்சியாய் மோசே கட்டளையிட்ட காணிக்கைப் பலிகளைச் செலுத்து” என்றார்.
8:5 இயேசு கப்பர்நகூமிற்குப் போனபோது, ஒரு நூற்றுக்குத் தளபதி உதவி கேட்டு அவரிடம் வந்து,
8:6 “ஆண்டவரே! வீட்டில் எனது வேலைக்காரன் முடக்குவாதமுடையவனாய், கடும் வேதனையுடன் படுத்திருக்கிறான்” என்றான்.
8:7 இயேசு அவனிடம், “நான் அங்கே வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.
8:8 நூற்றுக்குத் தளபதி அதற்குப் பதிலாக, “ஆண்டவரே! நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியுடையவன் அல்ல. ஒரு வார்த்தை கட்டளையிடும், அப்போது என் வேலைக்காரன் குணமடைவான்.
8:9 ஏனெனில், நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட ஒருவனாய் இருக்கின்றேன்; எனக்குக் கீழேயும் இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள். நான் இவனைப் பார்த்து ‘போ’ என்றால் இவன் போகின்றான்; அவனைப் பார்த்து ‘வா’ என்றால் அவன் வருகின்றான். எனது வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால் அவன் செய்கின்றான்” என்றான்.
8:10 இயேசு இதைக் கேட்டபோது வியப்படைந்தவராய், தம்மைப் பின்தொடர்கிறவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் கண்டதில்லை.
8:11 நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அநேகர் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வந்து, பரலோக அரசில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விருந்து வைபவத்தில் பங்கு பெறுவார்கள்.
8:12 ஆனால் அந்த அரசுக்கு உரிய குடிமக்களோ, வெளியே இருளுக்குள்ளே எறியப்படுவார்கள். அங்கே அழுகையும் வேதனையான பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றார்.
8:13 அதன்பின் இயேசு நூற்றுக்குத் தளபதியிடம், “நீ போ, நீ விசுவாசித்தபடியே, உனக்கு நடக்கட்டும்” என்றார். உடனடியாக அவனது வேலைக்காரன் குணமடைந்தான்.
8:14 இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்தபோது, பேதுருவின் மாமி காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருப்பதை கண்டார்.
8:15 அவர் அவளுடைய கையைத் தொட்டவுடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று. அவள் எழுந்து, அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
8:16 பொழுது சாயும் வேளையானபோது, பேய் பிடித்திருந்த பலரை அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவர் வார்த்தையினாலே கட்டளையிட்டு அந்த ஆவிகளைத் துரத்தி, எல்லா நோயாளிகளையும் குணமாக்கினார்.
8:17 “அவர் நம்மை பலவீனப்படுத்தும் வியாதிகளை ஏற்றுக்கொண்டு, நமது நோய்களைச் சுமந்தார்” என்று இறைவாக்கினன் ஏசாயாவினால் கூறப்பட்டவை நிறைவேறும்படி இப்படி நடந்தது.
8:18 தன்னைச் சுற்றி நின்ற கூட்டத்தை இயேசு கண்டபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், மறுகரைக்குப் போகும்படி கட்டளையிட்டார்.
8:19 அப்போது நீதிச்சட்ட ஆசிரியன் ஒருவன் அவரிடம் வந்து, “போதகரே, நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.
8:20 இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை” என்றார்.
8:21 இன்னொரு சீடன் அவரிடம், “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை முடித்து வர அனுமதி தாரும்” என்றான்.
8:22 அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைப் பின்பற்று. இறந்தவர்களை அடக்கம் செய்ய, இறந்தவர்கள் இருக்கின்றார்கள்” என்றார்.
8:23 அதற்குப் பின்பு இயேசு படகில் ஏறினார். அவரைப் பின்தொடர்ந்து அவரது சீடர்களும் ஏறினார்கள்.
8:24 அப்போது திடீரென கடும் புயல் காற்று கடலின் மீது வீசியது; அலைகள் படகிற்கு மேலாக மோதின. இயேசுவோ தூங்கிக் கொண்டிருந்தார்.
8:25 சீடர்கள் அவரிடம் சென்று, அவரை எழுப்பி, “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் மூழ்கி அழியப் போகின்றோம்!” என்று சொன்னார்கள்.
8:26 அதற்கு அவர், “விசுவாசம் குறைந்தவர்களே! நீங்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்து கொண்டார். அப்போது மிகுந்த அமைதி உண்டாயிற்று.
8:27 அவர்கள் வியப்படைந்து, “காற்றும் கடலும்கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எப்படிப்பட்டவரோ?” என்று பேசிக்கொண்டார்கள்.
8:28 அவர் மறுபக்கத்திலுள்ள கதரேனருடைய பிரதேசத்திற்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வந்து அவரைச் சந்தித்தனர். ஒருவரும் அந்த வழியாய் போக முடியாதபடி, அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாய் இருந்தார்கள்.
8:29 அவர்கள் இருவரும் இயேசுவை நோக்கி, “இறைவனின் மகனே! எங்களிடமிருந்து உமக்கு என்ன வேண்டும்? நியமிக்கப்பட்ட காலம் வருமுன், எங்களைத் துன்புறுத்தவா நீர் இங்கே வந்தீர்?” என உரத்த சத்தமிட்டார்கள்.
8:30 அவர்களுக்கு சற்று தூரத்தில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.
8:31 அந்த பேய்கள் இயேசுவிடம், “நீர் எங்களை வெளியே விரட்டுவதாக இருந்தால், பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்பி விடும்” என கெஞ்சிக் கேட்டன.
8:32 அவர் அவைகளிடம், “போங்கள்” என்றார். எனவே அவைகள் வெளியே வந்து, பன்றிகளுக்குள் புகுந்து கொண்டன. அந்தப் பன்றிகள், மலைச்சரிவினூடாக, கீழே விரைந்து ஓடி, ஏரியில் விழுந்து மூழ்கின.
8:33 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டணத்திற்குள் விரைந்து ஓடிப் போய், பேய் பிடித்தவர்களுக்கு நிகழ்ந்ததையும், நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.
8:34 அப்போது பட்டணத்திலுள்ள எல்லோரும் இயேசுவைச் சந்திக்க புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் இயேசுவைக் கண்டபோது, தங்களுடைய பிரதேசத்தைவிட்டு போய்விடும்படி, வேண்டிக் கொண்டார்கள்.