Library · ta

Mark 10

10:1 பின்பு இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, யூதேயாவுக்கும் யோர்தானுக்கு அப்பாலுள்ள பகுதிகளுக்கும் சென்றார். திரும்பவும் மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். வழக்கம் போல் அவர் அவர்களுக்குப் போதித்தார். 10:2 சில பரிசேயர்கள் வந்து அவரைச் சோதிக்கும் நோக்கில், “ஒருவன் தனது மனைவியை விவாகரத்துச் செய்வது, நீதிச்சட்டத்தின்படி சரியா?” என்று கேட்டார்கள். 10:3 அதற்கு இயேசு, “மோசே உங்களுக்கு என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார். 10:4 அதற்கு அவர்கள், “ஒருவன் விவாகரத்துப் பத்திரத்தை எழுதி, அவளை விவாகரத்துச் செய்ய மோசே அனுமதி கொடுத்திருக்கிறார்” என்றார்கள். 10:5 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே மோசே இந்த நீதிச்சட்டத்தை உங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். 10:6 ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார். 10:7 ‘இந்தக் காரணத்தினால், ஒருவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டு தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; 10:8 அவர்கள் இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’ எனவே அவர்கள் இனி இருவராய் இல்லாமல், இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள். 10:9 ஆகையால், இறைவன் ஒன்றிணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். 10:10 அவர்கள் மறுபடியும் வீட்டில் இருந்தபோது, சீடர்கள் இதைப்பற்றி இயேசுவிடம் கேட்டார்கள். 10:11 அதற்கு அவர், “தனது மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கின்ற ஒருவன் அவளுக்கு விரோதமாக தகாத உறவுகொள்கின்றான். 10:12 ஒரு பெண் தனது கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு இன்னொருவனைத் திருமணம் செய்தால் அவள் தகாத உறவுகொள்கிறாள்” என்றார். 10:13 அதன்பின்பு சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டும் என்பதற்காக மக்கள் அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ அவர்களைக் கண்டித்தார்கள். 10:14 இயேசு இதைக் கண்டபோது கோபமடைந்து அவர்களிடம், “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது. 10:15 நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கின்றேன், ஒரு சிறு பிள்ளையைப் போல இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன் ஒருபோதும் அதற்குள் செல்ல மாட்டான்” என்றார். 10:16 அத்துடன் அவர் அந்தப் பிள்ளைகளைத் தமது கைகளால் அணைத்துக்கொண்டு தமது கைகளை அவர்கள்மீது வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். 10:17 இயேசு அங்கிருந்து போய்க் கொண்டிருக்கையில் ஒருவன் அவரிடம் ஓடி வந்து அவருக்கு முன்பாக முழந்தாழிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். 10:18 அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கின்றாய்? இறைவனைத் தவிர நல்லவர் எவருமில்லையே. 10:19 ‘கொலை செய்யாதே, தகாத உறவுகொள்ளாதே, களவு செய்யாதே, பொய்ச் சாட்சி சொல்லாதே, மோசடி செய்யாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார். 10:20 அதற்கு அவன், “போதகரே, இவற்றையெல்லாம் நான் சிறுவனாயிருந்த காலம் முதல் கைக்கொண்டு வருகின்றேன்” என்றான். 10:21 இயேசு அவனை நோக்கிப் பார்த்து அவன்மீது அன்புகொண்டு, “ஒரு காரியம் மட்டும் உன்னிடம் குறைவுபடுகிறது. நீ போய் உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்போது, உனக்கு பரலோகத்தில் செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார். 10:22 அவனிடம் பெருமளவு செல்வம் இருந்தபடியால் அதைக் கேட்டு முகம் வாடியவனாய் துக்கத்துடன் திரும்பிச் சென்றான். 10:23 இயேசு சுற்றிப் பார்த்து தமது சீடர்களிடம், “ஒரு செல்வந்தன், இறைவனுடைய அரசுக்குள் செல்வது எவ்வளவு கடினமானது!” என்றார். 10:24 அவருடைய வார்த்தைகளைக் குறித்து சீடர்கள் வியப்படைந்தார்கள். ஆனால் இயேசு திரும்பவும் அவர்களிடம், “பிள்ளைகளே, செல்வந்தர்கள் இறைவனுடைய அரசிற்குள் செல்வது எவ்வளவு கடினமானது! 10:25 ஒரு செல்வந்தன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைவிட ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள்ளாக நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார். 10:26 சீடர்களோ இன்னும் அதிக வியப்படைந்தவர்களாய், “அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 10:27 இயேசு அவர்களை நோக்கிப் பார்த்து, “மனிதனால் இது முடியாததுதான்; ஆனால் இறைவனால் இது முடியாதது அல்ல. இறைவனால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்றார். 10:28 அப்போது பேதுரு அவரிடம், “நாங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு உம்மைப் பின்பற்றி வந்தோமே” என்றான். 10:29 அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எனக்காகவும் நற்செய்திக்காகவும் யாராவது தனது வீட்டையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தகப்பனையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால், 10:30 அவன் இந்த வாழ்வில் வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்மார்களையும், வயல்களையும் நூறு மடங்காகப் பெற்றுக்கொள்வதோடு அவனுக்குத் துன்புறுத்தல்களும் ஏற்படும். அத்தோடு, வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். 10:31 ஆனாலும், கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார். 10:32 அவர்கள் எருசலேமுக்குப் போய்க் கொண்டிருக்கும் வழியில் இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தார்; அதைக் கண்ட சீடர்கள் வியப்படைய, அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்தார்கள். மீண்டும் அவர் பன்னிருவரையும் ஒரு பக்கமாய் அழைத்துச் சென்று தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார். 10:33 “இதோ, நாம் எருசலேமுக்குப் போகின்றோம். அங்கே மனுமகன் தலைமை மதகுருக்களிடமும் நீதிச்சட்ட ஆசிரியர்களிடமும் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரணதண்டனை விதித்து யூதரல்லாதவர்களிடம் அவரை ஒப்புக்கொடுப்பார்கள். 10:34 அவர்களோ அவரை ஏளனம் செய்து, அவர்மீது துப்பி, அவரைச் சாட்டையினால் அடித்து, அவரைக் கொலை செய்வார்கள். ஆனாலும் மூன்று நாட்களின் பின், அவர் உயிருடன் எழுந்திருப்பார்” என்றார். 10:35 அப்போது செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும் இயேசுவினிடம் வந்து, “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள். 10:36 அதற்கு அவர், “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். 10:37 அதற்கு அவர்கள், “நீர் உமது மகிமைப் பிரகாசத்தில் அமரும்போது எங்களில் ஒருவன் உமது வலது பக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலுமாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்கள். 10:38 அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் அருந்தும் கிண்ணத்திலிருந்து உங்களால் அருந்த முடியுமா அல்லது எனக்கிருக்கும் ஞானஸ்நானத்தில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார். 10:39 அதற்கு அவர்கள், “எங்களாலும் முடியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் அருந்தும் கிண்ணத்திலிருந்து நீங்கள் அருந்துவீர்கள், நான் பெற்ற ஞானஸ்நானத்தை நீங்களும் பெறுவீர்கள். 10:40 ஆனால் எனது வலது பக்கத்தில் அமருவதையோ இடது பக்கத்தில் அமருவதையோ அனுமதிப்பது என்னுடைய செயலல்ல. இந்த இடங்கள் யாருக்கென ஆயத்தமாக்கப்பட்டு இருக்கின்றனவோ அவர்களுக்கே அவை உரியவை” என்றார். 10:41 இதைக் கேட்டபோது மற்ற பத்துப் பேரும், யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் கோபமடைந்தார்கள். 10:42 இயேசு அவர்களை ஒன்றாக அழைத்து, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்களாய் கருதப்படுகிறவர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களின் உயர் அதிகாரிகள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 10:43 ஆனால் உங்களுள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்குப் பணியாளனாய் இருக்க வேண்டும். 10:44 முதன்மையாயிருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும். 10:45 ஏனென்றால், மனுமகனும்கூட பணிவிடையைப் பெறுவதற்கு அல்ல, மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவும், அநேகரை மீட்கும் பொருட்டாகத் தமது உயிரைக் கொடுக்கவுமே வந்தார்” என்றார். 10:46 அதன்பின் அவர்கள் எரிகோவுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசுவும், அவருடைய சீடர்களும் பெருங்கூட்டமான மக்களோடு அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் பார்வையற்ற ஒருவன் வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். 10:47 அவன், நாசரேத்தைச் சேர்ந்த இயேசு போகின்றார் என கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான். 10:48 பலர் அவனைக் கண்டித்து அமைதியாய் இருக்கும்படி சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டு அழைத்தான். 10:49 இயேசு அவ்விடத்தில் நின்று, “அவனைக் கூப்பிடுங்கள்” என்றார். அவர்கள் பார்வையற்ற அந்த மனிதனை அழைத்து, “தைரியமாய் இரு! எழுந்து நில்! அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். 10:50 அவன் தனது மேலாடையை எறிந்துவிட்டு துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான். 10:51 இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு பார்வையற்ற அந்த மனிதன், “ஆண்டவரே, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான். 10:52 அப்போது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையடைந்து அந்த வீதி வழியே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான்.