Mark 9
9:1 பின்பு இயேசு அவர்களிடம், “உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் இறைவனுடைய அரசு வல்லமையுடன் வருவதைக் காணுமுன் மரணமடைய மாட்டார்கள்” என்றார்.
9:2 ஆறு நாட்களுக்குப் பின் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் தம்முடன் அழைத்துக்கொண்டு, இயேசு ஒரு உயரமான மலைக்குச் சென்றார். அங்கே அவர்கள் மாத்திரமே இருக்கையில், அவர்களுக்கு முன்பாக அவருடைய தோற்றம் மாறியது.
9:3 அப்போது, அவருடைய உடைகள் இந்தப் பூமியிலுள்ள எவராலும் வெளுக்க முடியாதளவு மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன.
9:4 அத்துடன் எலியாவும் மோசேயும் அங்கே அவர்களுக்குத் தென்பட்டு, இயேசுவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
9:5 உடனே பேதுரு இயேசுவிடம், “போதகரே, நாம் இங்கே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான்.
9:6 அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால் அவனுக்குத் தான் சொல்வது என்னவென்றே தெரியவில்லை.
9:7 அப்போது ஒரு மேகம் தோன்றி அவர்களை மூடிக்கொண்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல், “இவர்தான் என் அன்பு மகன், இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்றது.
9:8 உடனே அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை.
9:9 அவர்கள் மலையிலிருந்து இறங்கி வருகின்றபோது இயேசு அவர்களிடம் மனுமகன் இறந்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் கண்டதை வேறு எவருக்கும் சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டார்.
9:10 அவர்கள் இந்தக் காரியத்தைத் தங்களுக்குள்ளேயே வைத்து, “இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
9:11 அவர்கள் அவரிடம், “அப்படியானால் முதலாவது எலியா வர வேண்டும் என்று நீதிச்சட்ட ஆசிரியர்கள் சொல்வது ஏன்?” என்று கேட்டார்கள்.
9:12 அதற்கு இயேசு, “உண்மையாக எலியாவே முதலாவதாய் வந்து எல்லாவற்றையும் முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவருவான். அப்படியானால் மனுமகன் அதிகமாகத் துன்பப்பட்டு, புறக்கணிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பது ஏன்?
9:13 நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எலியா வந்துவிட்டான். அவனைக் குறித்து எழுதியிருக்கின்றபடியே அவர்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார்.
9:14 அவர்கள் மற்றச் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு பெருங் கூட்டம் கூடியிருப்பதையும், நீதிச்சட்ட ஆசிரியர்கள் சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.
9:15 மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்டவுடன் வியப்பு மேலிட்டவர்களாய் ஓடிப் போய் அவருக்கு ஆசி கூறினார்கள்.
9:16 இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி இவர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
9:17 மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன், “போதகரே, நான் என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அவனை ஒரு தீய ஆவி பீடித்திருப்பதால், அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான்.
9:18 அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அது அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக் கடித்துக்கொண்டு, விறைப்படைந்து போகின்றான். அந்த தீய ஆவியைத் துரத்தும்படி நான் உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான்.
9:19 அப்போது இயேசு, “விசுவாசமில்லாத தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருப்பேன்? எவ்வளவு காலம் நான் உங்களைச் சகித்துக் கொண்டிருப்பேன்? அந்தச் சிறுவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.
9:20 அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்தத் தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனுக்கு வலிப்பு உண்டாக்கியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை தள்ளியது.
9:21 இயேசு அவனுடைய தகப்பனிடம், “எவ்வளவு காலமாக இவனுக்கு இப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவன், “இவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, இப்படி இருக்கின்றது” என்று சொல்லிவிட்டு,
9:22 “இந்த தீய ஆவி இவனைக் கொல்லும்படி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் பல முறை தள்ளி வீழ்த்தியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்ய முடிந்தால் எங்கள்மேல் இரக்கம் கொண்டு, எங்களுக்கு உதவி செய்யும்” என்றான்.
9:23 அதற்கு இயேசு, “உங்களால் முடியுமா, என்று கேட்கின்றாயா? விசுவாசிக்கின்றவனுக்கு எல்லாம் சாத்தியமே” என்றார்.
9:24 உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கின்றேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவி செய்யும்” என்றான்.
9:25 அப்போது மக்கள் திரண்டு, அவ்விடத்திற்கு ஓடி வருவதை இயேசு கண்டபோது, அவர் அந்த தீய ஆவியைப் பார்த்து, “கேட்கவும் பேசவும் முடியாத ஆவியே, இவனைவிட்டு வெளியே போ; இனி ஒருபோதும் இவனுக்குள் நுழையாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார்.
9:26 அந்த தீய ஆவி கூச்சலிட்டு, அவனுக்கு அதிகமாய் வலிப்பு உண்டாக்கி, அவனைவிட்டு வெளியேறியது. பலர் அவனைப் பார்த்து, “இவன் இறந்துவிட்டான்” எனச் சொல்லுமளவுக்கு அவன் இறந்தவனைப் போல கிடந்தான்.
9:27 ஆனால் இயேசுவோ அவனது கையைப் பிடித்து, அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் எழுந்து நின்றான்.
9:28 பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் அவரிடம் தனியாக வந்து, “ஏன் அதை எங்களால் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
9:29 அதற்கு அவர், “இவ்வகையான தீய ஆவி மன்றாடலினாலும் உபவாசத்தினாலும் மட்டுமே வெளியேறும்” என்றார்.
9:30 அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாங்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதை எவரும் அறிவதை இயேசு விரும்பவில்லை.
9:31 ஏனெனில் இயேசு தமது சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “மனுமகன் காட்டிக் கொடுக்கப்பட்டு மனிதருடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார், அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள், மூன்று நாட்களுக்கு பின் அவர் உயிருடன் எழுந்திருப்பார்” என்றும் சொன்னார்.
9:32 ஆனால் அவர்களோ அவர் சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக் குறித்து அவரிடம் கேட்கவும் பயப்பட்டார்கள்.
9:33 அவர்கள் கப்பர்நகூமை வந்தடைந்து வீட்டில் இருந்தபோது, “வழியிலே நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்.
9:34 அவர்கள் ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார்கள்; ஏனெனில், தங்களில் யார் பெரியவன் என்று வழியிலே அவர்கள் விவாதித்துக்கொண்டு வந்தார்கள்.
9:35 இயேசு உட்கார்ந்து, பன்னிருவரையும் தம்மிடம் வரும்படி அழைத்து, “யாராவது முதன்மையானவனாக இருக்க விரும்பினால் அவனே எல்லோரிலும் கடைசியானவனாக இருக்க வேண்டும். அவன் எல்லோருக்கும் பணியாளனாகவும் இருக்க வேண்டும்” என்றார்.
9:36 அவர் ஒரு சிறு பிள்ளையைத் தூக்கியெடுத்து அவர்கள் நடுவில் நிறுத்தி தமது கைகளால் அணைத்தபடி, அவர்களிடம்:
9:37 “இப்படிப்பட்ட ஒரு சிறு பிள்ளையை எனது பெயரில் ஏற்றுக்கொள்கின்றவன் என்னை ஏற்றுக்கொள்கின்றான்; என்னை ஏற்றுக்கொள்கின்றவன் என்னை அல்ல, என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கின்றான்” என்றார்.
9:38 அப்போது யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உமது பெயரில் பேய்களைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவன் அல்லாதபடியினால் நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான்.
9:39 இயேசு அவர்களிடம், “அவனைத் தடுக்க வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கின்றவன், விரைவாக என்னைக் குறித்து தீமையாய்ப் பேச மாட்டான்.
9:40 ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன் நமக்குச் சார்பாகவே இருக்கின்றான்.
9:41 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற காரணத்தால் யாராவது என் பெயரில் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால், அவன் நிச்சயமாக தனக்குரிய வெகுமதியைப் பெறாமல் போக மாட்டான்” என்றார்.
9:42 என்னில் விசுவாசம் வைத்துள்ள இந்தச் சிறியவர்களில் ஒருவரை எவராவது பாவம் செய்யப் பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டப்பட்டு கடலிலே தள்ளப்படுவது அவர்களுக்கு நலமாய் இருக்கும்.
9:43 உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால் அதை வெட்டிப் போடு. நீ இரண்டு கைகளுடன் ஒருபோதும் அணையாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும் ஊனமுற்றவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது.
9:44 நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை.
9:45 உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால் அதை வெட்டிப் போடு. நீ இரண்டு கால்களுடன் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும் கால் ஊனமுற்றவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது.
9:46 நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை.
9:47 உனது கண் உன்னைப் பாவம் செய்யப் பண்ணினால் அதைத் தோண்டி எடுத்து விடு. நீ இரண்டு கண்களுடன் நரகத்திற்குள் எறியப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் இறையரசுக்குள் போவது உனக்குச் சிறந்தது.
9:48 நரகத்தில், அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.
9:49 உப்பிட்டு பதனிடுவது போல ஒவ்வொருவரும் நெருப்பினால் பதனிடப்படுவார்கள்.
9:50 “உப்பு நல்லதுதான், ஆனால் அது தனது சாரத்தை இழந்து போனால் திரும்பவும் அதை எப்படி சாரமுடையதாக்க முடியும்? நீங்கள் உங்களுக்குள்ளே உப்பின் சாரம் உள்ளவர்களாக இருந்து, ஒருவரோடொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.