Mark 15
15:1 அதிகாலையிலேயே தலைமை மதகுருக்கள், மூப்பர்களுடனும் நீதிச்சட்ட ஆசிரியர்களுடனும் முழு நியாயசபையினருடனும் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி அவர்கள் இயேசுவை பிணைத்துக் கட்டி பிலாத்துவிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்கள்.
15:2 பிலாத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கின்றபடியேதான்” என்றார்.
15:3 தலைமை மதகுருக்கள் அநேக குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தினார்கள்.
15:4 எனவே பிலாத்து திரும்பவும் அவரிடம், “நீ பதில் சொல்ல மாட்டாயோ? பார், எத்தனை குற்றச்சாட்டுக்களை அவர்கள் உன்மேல் சுமத்துகிறார்கள்” என்றான்.
15:5 இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை. அதனால் பிலாத்து வியப்படைந்தான்.
15:6 பண்டிகையின்போது, மக்கள் விடுதலை செய்யும்படி கேட்கும் ஒரு கைதியை ஆளுநர்கள் விடுதலை செய்வது வழக்கமாயிருந்தது.
15:7 அந்நாட்களில் கிளர்ச்சியில் ஈடுபட்டு கொலை செய்ததற்காக சில கிளர்ச்சிக்காரர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பரபாஸ் என்ற ஒருவனும் இருந்தான்.
15:8 மக்கள் கூட்டமாக வந்து, வழக்கமாக செய்துவந்தது போல் இம்முறையும் தங்களுக்காக ஒருவனை விடுவிக்கும்படி பிலாத்துவிடம் கேட்டுக்கொண்டார்கள்.
15:9 அப்போது பிலாத்து அவர்களைப் பார்த்து, “யூதருடைய அரசனை நான் விடுதலை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
15:10 தலைமை மதகுருக்கள் பொறாமையின் காரணமாகவே இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான்.
15:11 ஆனால் தலைமை மதகுருக்களோ பரபாசையே விடுதலை செய்ய வேண்டும் என்று பிலாத்துவிடம் கேட்கச் சொல்லி கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
15:12 எனவே பிலாத்து அவர்களிடம், “அப்படியானால், நீங்கள் யூதருடைய அரசன் என்று சொல்கின்ற இவனுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
15:13 அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
15:14 பிலாத்து, அவர்களைப் பார்த்து, “ஏன், அவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டார்கள்.
15:15 பிலாத்து, கூடியிருந்த மக்களை திருப்திப்படுத்த விரும்பி பரபாஸை அவர்களுக்காக விடுதலை செய்தான். இயேசுவையோ அவன் சாட்டையால் அடித்து சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்படைத்தான்.
15:16 இராணுவ வீரர்கள் இயேசுவை அரண்மனை முற்றத்திலுள்ள ஆளுநர் தலைமையகத்திற்குக் கொண்டு சென்று மற்ற எல்லா இராணுவ வீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள்.
15:17 அவர்கள் அவருக்கு கருஞ்சிவப்பு மேலாடையை உடுத்தி, முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள்.
15:18 பின்பு அவர்கள், “யூதரின் அரசனே வாழ்க!” என்று அவரை ஏளனம் செய்தார்கள்.
15:19 அத்துடன் ஒரு தடியினால் திரும்பத் திரும்ப அவரின் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, அவர் முன்பாக முழந்தாழிட்டு, அவரை வணங்கினார்கள்.
15:20 இவ்வாறு அவரை ஏளனம் செய்த பின்பு அந்த கருஞ்சிவப்பு மேலாடையைக் கழற்றி, மீண்டும் அவருடைய உடையையே அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறைவதற்காக கொண்டுபோனார்கள்.
15:21 அப்போது நாட்டுப் புறத்திலிருந்து அவ்வழியாய் வந்து கொண்டிருந்த சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்னும் ஒரு மனிதனைக் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமந்து வரும்படி இராணுவ வீரர்கள் அவனை வற்புறுத்தினார்கள்; அவன் அலெக்சாந்தர் மற்றும் ரூபு என்பவர்களின் தகப்பன்.
15:22 அவர்கள் இயேசுவை மண்டையோட்டின் இடம் என்று அர்த்தமுள்ள கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்து,
15:23 வெள்ளை கற்றாழைச் சாறு கலந்த திராட்சை ரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவரோ அதைக் குடிக்க மறுத்தார்.
15:24 பின்பு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய உடையில் யார் எதை எடுத்துக்கொள்வது என்று சீட்டுப் போட்டு அவற்றைப் பங்கிட்டுக் கொண்டார்கள்.
15:25 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி.
15:26 அத்தோடு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டாக சிலுவையில் இப்படியாக எழுதப்பட்டிருந்தது: “யூதருடைய அரசன்.”
15:27 அவர்கள் அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும், இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்வர்களையும் அவருடனே சிலுவைகளில் அறைந்தார்கள்.
15:28 இதன் மூலமாய், “குற்றவாளிகளில் ஒருவராக அவர் கருதப்பட்டார்” என்ற வேதவசனம் நிறைவேறியது.
15:29 அவ்வழியாய் கடந்து சென்றவர்கள் அவரைப் பழித்துரைக்கும் விதமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே,
15:30 சிலுவையிலிருந்து இறங்கி வந்து உன்னை நீயே காப்பாற்றிக்கொள்!” என்றார்கள்.
15:31 அவ்விதமாகவே தலைமை மதகுருக்களும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் அவரைக் குறித்து ஒருவரோடொருவர் ஏளனமாய்ப் பேசி, “இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னையோ காப்பாற்றிக்கொள்ள முடியாதிருக்கிறான்!
15:32 இஸ்ரயேலின் அரசனான இந்த மேசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்போது அதைக் கண்டு நாங்கள் விசுவாசிப்போம்” என்றார்கள். அப்படியே அவருடனே சிலுவையில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
15:33 பகல் பன்னிரண்டு மணியானபோது, பூமியெங்கும் இருள் சூழ ஆரம்பித்து பிற்பகல் மூன்று மணி வரை நீடித்திருந்தது.
15:34 பிற்பகல் மூன்று மணியானபோது இயேசு உரத்த குரலில், “ஏலோயி, ஏலோயி, லாமா சபக்தானி” என்று கதறினார். அதன் அர்த்தம், “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும்.
15:35 அருகே நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டபோது, “இதோ, இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள்.
15:36 அப்போது ஒருவன் ஓடிப் போய் கடற் பஞ்சை எடுத்து புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து ஒரு தடியில் கட்டி அதை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்து, “இப்போது அவனை அப்படியே விடுங்கள். அவனைக் கீழே இறக்குவதற்கு எலியா வருகின்றானோ பார்ப்போம்” என்றான்.
15:37 அப்போது இயேசு சத்தமிட்டுக் கதறி தமது இறுதி மூச்சை விட்டார்.
15:38 அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
15:39 இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்று கொண்டிருந்த நூற்றுக்குத் தளபதி அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டு, “நிச்சயமாகவே இவர் இறைவனுடைய மகனே தான்” என்றான்.
15:40 சில பெண்கள் தூரத்தில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபு, யோசே என்பவர்களின் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள்.
15:41 அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரைப் பின்பற்றி, அவருடைய தேவைகளைக் கவனித்தவர்கள் இவர்கள்தான். அத்தோடு, அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த வேறு அநேக பெண்களும் அங்கே இருந்தார்கள்.
15:42 அது ஓய்வுநாளுக்கு முந்திய நாளான ஆயத்த நாளாயிருந்தது. மாலை வேளையானபோது,
15:43 அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்தவனும், நியாயசபையின் முக்கிய அங்கத்தவனும், இறைவனின் அரசுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன், துணிச்சலுடன் பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான்.
15:44 இயேசு அதற்குள் இறந்துவிட்டார் என்பதைக் கேள்விப்பட்ட பிலாத்து வியப்படைந்து நூற்றுக்குத் தளபதியை அழைத்து, “இயேசு அதற்குள் இறந்துவிட்டாரா?” என்று கேட்டான்.
15:45 அவன் நூற்றுக்குத் தளபதியிடமிருந்து, அதை உறுதி செய்துகொண்ட பின், இயேசுவின் உடலை யோசேப்பிடம் கையளித்தான்.
15:46 எனவே யோசேப்பு விலையுயர்ந்த மெல்லிய துணியைக் கொண்டுவந்து அவரது உடலைக் கீழே இறக்கி துணியினால் சுற்றி, கற்பாறையில் வெட்டப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்து அதன் வாசலில் ஒரு கல்லை உருட்டி மூடினான்.
15:47 மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் அவரை வைத்த இடத்தைப் பார்த்தார்கள்.