Library · ta

Mark 16

16:1 சபத் ஓய்வுநாள் முடிவடைந்தபோது மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமியும் இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருட்களை பூசுவதற்காக அவற்றை வாங்கி, 16:2 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே பொழுது விடிகையில் கல்லறையை நோக்கிப் போனார்கள். 16:3 அவர்கள் போகும் வழியில், “கல்லறையின் வாயிலில் இருக்கும் கல்லை யார் நமக்காகப் புரட்டித் தள்ளுவான்?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 16:4 ஆனால் அவர்கள் வந்து பார்த்த போதோ, மிகவும் பெரிதான அந்தக் கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். 16:5 அவர்கள் கல்லறைக்குள்ளே போனபோது, வெள்ளை உடை உடுத்திய ஒரு இளைஞன் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதை அவர்கள் கண்டு பயந்தார்கள். 16:6 அப்போது அவன் அவர்களிடம், “பயப்பட வேண்டாம், சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை நீங்கள் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் இங்கு இல்லை. அவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள். 16:7 நீங்கள் போய் அவருடைய சீடர்களுக்கும், பேதுருவுக்கும் ‘அவர் உங்களுக்குச் சொன்னது போலவே, உங்களுக்கு முன்பாகவே கலிலேயாவுக்குப் போகின்றார். எனவே, அவரை அங்கே காண்பீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றான். 16:8 அவர்கள் நடுக்கத்துடனும், திகைப்புடனும் வெளியே வந்து கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் பயந்ததனால் ஒருவருக்குமே ஒன்றும் சொல்லவில்லை. 16:9 வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் முதலில் மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவளிடமிருந்து ஏழு பேய்களை அவர் துரத்தியிருந்தார். 16:10 அவள் போய் அவரோடிருந்தவர்களுக்கும், அழுது புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கும் அதைச் சொன்னாள். 16:11 இயேசு உயிரோடிருக்கிறார் என்றும், அவரை அவள் கண்டாள் என்றும் அவள் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. 16:12 இதன்பின்பு நாட்டுப் புறமாய் நடந்து போய்க் கொண்டிருந்த அவர்களில் இருவருக்கு, இயேசு தம்மை மாறுபட்ட ஒரு தோற்றத்தில் வெளிப்படுத்தினார். 16:13 இவர்கள் போய் அதை மற்றவர்களுக்கும் அறிவித்தார்கள். ஆனால் அவர்களோ இவர்கள் சொன்னதையும் நம்பவில்லை. 16:14 பின்பு சீடர்கள் பதினொரு பேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, இயேசு அவர்களுக்குக் காட்சியளித்தார். அவர் அவர்களுடைய விசுவாசக் குறைவைக் குறித்தும், தாம் உயிர்த்தெழுந்த பின்பு தம்மைக் கண்டவர்கள் சொன்னதைப் பிடிவாதமாய் நம்ப மறுத்ததைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார். 16:15 அவர் அவர்களிடம், “நீங்கள் உலகம் எங்கும் போய் எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். 16:16 யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள். யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் குற்றவாளியாய்த் தீர்க்கப்படுவார்கள். 16:17 விசுவாசிக்கின்றவர்கள் மத்தியில் காணப்படும் அடையாளங்களாவன: எனது பெயரில் அவர்கள் பேய்களைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளில் பேசுவார்கள்; 16:18 பாம்புகளைக்கூட தங்கள் கைகளினால் பிடித்துத் தூக்குவார்கள்; மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குக் கேடு விளைவிக்காது; நோயாளிகளின் மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அப்போது அவர்கள் குணமடைவார்கள்” என்றார். 16:19 ஆண்டவர் இயேசு அவர்களுடன் பேசி முடித்த பின்பு, அவர் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இறைவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார். 16:20 அதன்பின்பு அவருடைய சீடர்கள் புறப்பட்டுப் போய் எல்லா இடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். கர்த்தர் அவர்களுடன் செயலாற்றி தமது வார்த்தையை அற்புத அடையாளங்களினால் உறுதிப்படுத்தினார்.