Mark 3
3:1 இயேசு மறுபடியும் ஜெபஆலயத்திற்குள் சென்றார். அங்கு ஊனமுற்ற கையுடைய ஒருவன் இருந்தான்.
3:2 இயேசுவைக் குற்றம் சாட்டுவதற்கான ஒரு ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருந்த சிலர், ஓய்வுநாளிலே அவர் அவனைக் குணமாக்குவாரோ என்று அவரைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
3:3 இயேசு ஊனமுற்ற கையுடைய அந்த மனிதனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார்.
3:4 பின்பு இயேசு அவர்களிடம், “நீதிச்சட்டத்தின்படி ஓய்வுநாளில் செய்யத் தகுந்தது எது? நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒரு உயிரைக் காப்பாற்றுவதா அல்லது உயிரை அழிப்பதா?” என்று கேட்டார். அவர்களோ, ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.
3:5 அவர்களை அவர் கோபத்துடன் பார்த்து, அவர்களுடைய கடின இருதயத்தின் காரணமாக மனம் வருந்தினார். பின்பு அந்த மனிதனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” என்றார். அவனும் தன் கையை நீட்டினான். அது முற்றிலும் குணமாகியது.
3:6 அப்போது பரிசேயர்கள் வெளியே போய், அவரைக் கொலை செய்வதற்கு, ஏரோதியர்களுடனே சதித் திட்டம் தீட்டத் தொடங்கினார்கள்.
3:7 இயேசு தம்முடைய சீடர்களுடனே புறப்பட்டு, கடலோரமாகச் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
3:8 அவர் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டு, அநேக மக்கள் யூதேயா, எருசலேம், இதுமேயா ஆகிய இடங்களிலிருந்தும், யோர்தான் ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்திலிருந்தும், தீரு, சீதோன் பட்டணங்களின் சுற்றுப்புறங்களிலிருந்தும் அவரிடம் வந்தார்கள்.
3:9 மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்தபடியால், அவர்கள் தம்மை நெருக்காதபடி தமக்கென்று ஒரு படகை ஆயத்தம் செய்யும்படி, அவர் தமது சீடருக்குச் சொன்னார்.
3:10 அநேகரை அவர் குணமாக்கியபடியால், வியாதிப்பட்டிருந்தவர்கள் அவரைத் தொடுவதற்காக, முன்னே நெருக்கிக்கொண்டு வந்தார்கள்.
3:11 தீய ஆவி பிடித்திருந்தவர்கள் அவரைக் கண்டபோது அவருக்கு முன்பாகக் கீழே விழுந்து, “நீர் இறைவனின் மகன்” என்று சத்தமிட்டார்கள்.
3:12 ஆனால் அவரோ தான் யார் என்பதைச் சொல்லாதிருக்கும்படி அவைகளுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.
3:13 பின்பு இயேசு ஒரு மலையின்மேல் ஏறிப் போய், தாம் விரும்பியவர்களை தம்மிடம் வரும்படி அழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள்.
3:14 இயேசு பன்னிரண்டு பேரை நியமித்து, அவர்களை அப்போஸ்தலர்கள் என அழைத்தார்; தம்முடனேகூட அவர்கள் இருப்பதற்காகவும், நற்செய்தி அறிவிக்கும்படி தாம் அவர்களை அனுப்புவதற்காகவும்,
3:15 பேய்களைத் துரத்தும் அதிகாரத்தை அவர்கள் கொண்டிருப்பதற்காகவும் அவர்களை நியமித்தார்.
3:16 அவர் நியமித்த பன்னிரண்டு பேர்களும் இவர்களே: சீமோன், இவனுக்கு அவர் பேதுரு எனப் பெயரிட்டார்;
3:17 செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான் இவர்கள் இருவருக்கும் பொவனெர்கேஸ் என்று பெயரிட்டார், “இடிமுழக்கத்தின் மகன்கள்” என்பதே அதனுடைய அர்த்தமாகும்,
3:18 அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
3:19 மற்றும் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஸ்காரியோத்து.
3:20 பின்பு இயேசு, ஒரு வீட்டுக்குள் போனார்; மக்கள் திரும்பவும் பெருங்கூட்டமாய் அங்கு வந்தார்கள். அதனால் அவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உண்பதற்குக்கூட முடியாதிருந்தது.
3:21 அவருடைய குடும்பத்தார் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, “அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொல்லி, அவரைப் பிடித்துக் கொண்டுவர அங்கே போனார்கள்.
3:22 எருசலேமிலிருந்து வந்த நீதிச்சட்ட ஆசிரியர்கள், “இவனைப் பெயெல்செபூல் பிடித்திருக்கிறது, பேய்களின் தலைவனாலேயே இவன் பேய்களைத் துரத்துகிறான்” என்றார்கள்.
3:23 எனவே இயேசு அவர்களை அழைத்து, அவர்களோடு உவமைகள் மூலமாய் பேசினார்: “சாத்தானால் எப்படி சாத்தானை துரத்த முடியும்?
3:24 ஒரு அரசு தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்த அரசு நிலைபெறாது.
3:25 ஒரு குடும்பம் தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால் அந்தக் குடும்பம் நிலைபெறாது.
3:26 எனவே சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழுந்து பிளவுபட்டால், அவனால் நிலைத்துநிற்க முடியாது; அவனது முடிவு வந்து விடும்.
3:27 முதலில் பலமுள்ள ஒருவனைக் கட்டிப் போடாமல் அந்த பலமுள்ளவனுடைய வீட்டிற்குள் புகுந்து அவனுடைய உடைமைகளை எவராலும் கொள்ளையிட முடியாது. அவனைக் கட்டிப் போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.
3:28 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், மனிதர்களுடைய எல்லாப் பாவங்களும், அவர்கள் பேசும் எல்லா இறை நிந்தனைகளும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
3:29 ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசப்படுகின்ற இறை நிந்தனைக்கோ ஒருபோதும் மன்னிப்பு கிடையாது. அவன் நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறான்.”
3:30 “தீய ஆவி அவரைப் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் சொன்னதனாலேயே, அவர் இப்படிச் சொன்னார்.
3:31 அப்போது இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் அங்கு வந்தார்கள். அவர்கள் வெளியே நின்று, அவரை அழைத்து வர ஆளனுப்பினார்கள்.
3:32 மக்கள் பெருங்கூட்டமாய் அவரைச் சுற்றியிருந்தார்கள். போனவர்கள் அவரிடம், “உம்முடைய தாயும், உம்முடைய சகோதரர்களும் உம்மைக் காண வெளியே நிற்கிறார்கள்” என்றார்கள்.
3:33 அதற்கு இயேசு அவர்களிடம், “யார் என்னுடைய தாய், யார் என்னுடைய சகோதரர்கள்?” என்று கேட்டார்.
3:34 பின்பு, அவர் தம்மைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து, “இதோ! என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே!
3:35 இறைவனுடைய விருப்பத்தைச் செய்கின்றவர்களே என் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கின்றார்கள்” என்றார்.