Library · ta

Mark 4

4:1 திரும்பவும் இயேசு கடலோரத்திலிருந்து போதிக்கத் தொடங்கினார். அவரிடத்தில் மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டிருந்தபடியால், அவர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகொன்றில் ஏறி அதில் உட்கார்ந்தார். மக்களோ கடலோரமாய் நின்றார்கள். 4:2 அவர் பல காரியங்களை அவர்களுக்கு உவமைகள் மூலமாக போதித்தார். அவர் கற்பித்தபோது அவர்களுக்குச் சொன்னதாவது: 4:3 “கேளுங்கள்! ஒரு விவசாயி விதைகளை விதைப்பதற்குச் சென்றான். 4:4 அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. 4:5 சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இராததால் அவை விரைவாக முளைத்தன. 4:6 ஆனால் வெயில் அதிகமானபோது பயிர்கள் வாடிப் போயின; வேர் இல்லாததனாலே, அவை காய்ந்து போயின. 4:7 வேறு சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன, முட்செடிகள் வளர்ந்து பயிர்களை நெருக்கிப் போட்டன. அதனால், அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. 4:8 வேறு சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன; அவை முளைவிட்டு வளர்ந்து, முப்பது மடங்காகவும் அறுபது மடங்காகவும் நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன” என்றார். 4:9 பின்பு இயேசு, “காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்று கூறினார். 4:10 அவர் தனிமையாய் இருந்தபோது, அந்த பன்னிரண்டு பேரும் அவருடன் இருந்த மற்றவர்களும் அந்த உவமையைக் குறித்த விளக்கத்தைக் கேட்டார்கள். 4:11 அவர் அவர்களிடம், “இறைவனுடைய அரசின் இரகசியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வெளியில் இருக்கின்றவர்களுக்கோ எல்லா காரியங்களும் உவமைகளாகவே சொல்லப்படுகின்றன. 4:12 இதனால், “ ‘அவர்கள் எப்போதும் காண்பார்கள், ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டார்கள்; அவர்கள் எப்போதும் கேட்பார்கள், ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்; இல்லாவிட்டால் அவர்கள் இறைவனிடம் திரும்பி மன்னிப்பைப் பெறுவார்களே’ ” என்றார். 4:13 பின்பு இயேசு அவர்களிடம், “இந்த உவமை உங்களுக்கு விளங்கவில்லையா? அப்படியானால், மற்ற உவமைகளையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வீர்கள்?” என்று கேட்டார். 4:14 “விவசாயி வார்த்தையை விதைக்கிறவர். 4:15 சில மக்கள் பாதையருகே விதைகள் விழுந்ததைப் போன்றவர்கள். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களில் விதைக்கப்பட்ட வார்த்தைகளை எடுத்துப் போடுகிறான். 4:16 கற்பாறையின் மேல் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பாயிருக்கும் மற்றவர்களோ வார்த்தையைக் கேட்டு அதை உடனே மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றார்கள். 4:17 ஆனால் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக் காலம் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள். வார்த்தையின் பொருட்டு கஷ்டமும் துன்பமும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்து போகின்றார்கள். 4:18 முட்செடிகளுக்குள் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்கின்றார்கள். 4:19 ஆயினும் இந்த உலகத்திற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும் இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் அது பலனற்றுப் போய் விடுகிறது. 4:20 விதை விதைக்கப்பட்ட நல்ல நிலத்திற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொள்கின்றவர்கள்; அவர்கள் முப்பது மடங்காகவும் அறுபது மடங்காகவும் நூறு மடங்காகவும் விளைச்சலை கொடுக்கின்றார்கள்” என்றார். 4:21 மேலும் அவர் அவர்களிடம், “ஒரு விளக்கைக் கொண்டுவந்து, அதை ஒரு பாத்திரத்தினால் மூடியோ அல்லது ஒரு கட்டிலின் கீழ் மறைத்தோ வைப்பார்களா? இல்லையே, அதை விளக்குத் தண்டின் மேல்தானே வைப்பார்கள்? 4:22 ஒளித்து வைக்கப்பட்டவை யாவும் வெளியில் தெரிய வரும், மறைத்து வைக்கப்பட்டவை அனைத்தும் பகிரங்கமாகும். 4:23 காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார். 4:24 அவர் தொடர்ந்தும்: “நீங்கள் கேட்கும் காரியங்களை கவனமாய் யோசியுங்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். அப்போது கேட்கின்ற உங்களுக்கு அதிகமாகவும் கொடுக்கப்படும். 4:25 இருக்கின்றவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார். 4:26 மேலும் அவர் சொன்னதாவது: “இறைவனுடைய அரசானது ஒருவர் நிலத்தில் விதைகளை விதைப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. 4:27 அவன் இரவு வேளைகளில் நித்திரைகொண்டு பகல் வேளைகளில் விழித்தெழும்பும்போது, அவனுக்கே தெரியாமல் அந்த விதை முளைவிட்டு வளருகிறது. 4:28 மண் தானாகவே பலன் கொடுத்து, முதலில் பயிரையும் பின்பு கதிரையும், அதன்பின் கதிரிலே நிறைந்த தானியத்தையும் கொடுக்கின்றது. 4:29 பயிர் விளைந்து அறுவடைக் காலம் வந்தவுடன், விதைத்தவன் அதன்மீது அரிவாளை வைக்கிறான்.” 4:30 திரும்பவும் அவர்: “இறைவனுடைய அரசை நாம் எதற்கு ஒப்பிட்டுச் சொல்வோம், எந்த உவமையினால் அதை விபரித்துக் கூறுவோம்? 4:31 அது கடுகு விதையைப் போன்றது. அது பூமியிலுள்ள எல்லா விதைகளிலும் சிறியதாக இருக்கின்றது. 4:32 இருந்தாலும், அது விதைக்கப்பட்டு, முளைத்து, தோட்டத்திலுள்ள மற்ற எல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்கிறது. அதனால், ஆகாயத்துப் பறவைகள் அதன் நிழலில் வந்து தங்கக் கூடிய அளவுக்குப் பெரியதான கிளைகளையும் விடுகிறது” என்றார். 4:33 அவர்கள் கேட்டு விளங்கக் கூடிய அளவுக்கு இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலமாக அவர்களுக்கு வார்த்தையைப் போதித்தார். 4:34 உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர் அவர்களுடன் எதையுமே பேசவில்லை. ஆனால் அவர் தம்முடைய சீடர்களுடன் தனித்திருந்தபோது அவர்களுக்கு எல்லாவற்றையும் தெளிவுபடுத்தினார். 4:35 அன்று மாலை வேளையானபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், “நாம் மறுகரைக்குப் போவோம்” என்றார். 4:36 அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு அவர் இருந்த படகில் இருந்தவண்ணமாகவே அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போனார்கள். அவருடன் வேறு சில படகுகளும் சென்றன. 4:37 அப்போது பலத்த புயல் காற்று உண்டாகி, அலைகள் படகின் மேல் மோதின. அதனால் படகு மூழ்கத் தொடங்கியது. 4:38 இயேசுவோ படகின் பின்பகுதியில் ஒரு தலையணையை வைத்து நித்திரை செய்து கொண்டிருந்தார். சீடர்கள் அவரை எழுப்பி அவரிடம், “போதகரே! நாங்கள் மூழ்கப் போகின்றோம், அதைப்பற்றி உமக்குக் கவலையில்லையா?” என்றார்கள். 4:39 அவர் விழித்தெழுந்து, காற்றைக் கடிந்து கொண்டார். கடலைப் பார்த்து, “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று. 4:40 அவர் தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இந்தளவு பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார். 4:41 அப்போது அவர்கள் பயமடைந்து, “இவர் யாரோ? காற்றும் கடலும்கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே?” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள்.