Library · ta

Mark 7

7:1 ஒரு நாள் எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், நீதிச்சட்ட ஆசிரியரில் சிலரும் இயேசுவைச் சுற்றி கூடி நின்றார்கள். 7:2 இயேசுவின் சீடர்களில் சிலர் கைகழுவாமல் அசுத்தமான கைகளினால் உணவு உண்பதை அவர்கள் கண்டார்கள். 7:3 பரிசேயரும், யூதர் அனைவரும் முன்னோரின் சம்பிரதாய முறைப்படி கைகளைக் கழுவினாலன்றி உணவு உண்ண மாட்டார்கள். 7:4 சந்தை கூடும் இடங்களிலிருந்து வரும்போது தங்களைக் கழுவிக்கொள்ளாமல் அவர்கள் உணவு உண்பதில்லை. அதைவிட செம்புகள், கிண்ணங்கள், வெண்கலப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவுவது போன்ற அநேக சம்பிரதாய முறைகளையும் கைக்கொண்டார்கள். 7:5 எனவே பரிசேயரும், நீதிச்சட்ட ஆசிரியரும் இயேசுவிடம், “உமது சீடர்கள் முன்னோரின் சம்பிரதாய முறைப்படி நடந்துகொள்ளாதிருப்பது ஏன்? அவர்கள் அசுத்தமான கைகளினால் உணவு உண்கிறார்களே” என்றார்கள். 7:6 அதற்கு அவர், “வெளிவேடக்காரராகிய உங்களைக் குறித்து ஏசாயா சரியாகத்தான் இறைவாக்கு உரைத்திருக்கிறார். அதென்னவெனில்: “ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது. 7:7 அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கின்றார்கள்; அவர்களுடைய போதனைகளோ மனிதரால் போதிக்கப்பட்ட விதிமுறைகளாகவே இருக்கின்றன’ என்பதாக எழுதப்பட்டுள்ளது. 7:8 நீங்களோ, இறைவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதரின் சம்பிரதாய முறைகளையே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார். 7:9 மேலும், அவர் அவர்களிடம், “நீங்கள் உங்கள் சம்பிரதாய முறைகளைக் கைக்கொள்வதற்காக இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் திறமைசாலிகள். 7:10 ஏனெனில் மோசே, ‘உனது தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ என்றும், ‘தனது தகப்பனையாவது தாயையாவது சபிக்கிறவன் கொல்லப்பட வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கின்றார். 7:11 ஆனால் நீங்களோ ஒருவன் தன் தகப்பனையோ தாயையோ பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய உதவியை இறைவனுக்கு காணிக்கையாக அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அதுபோதும் என்கிறீர்கள். 7:12 அதன் பிறகு தன் தகப்பனுக்கோ, தாய்க்கோ எதையும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. 7:13 இவ்விதமாய் நீங்கள் கைக்கொண்டுவரும் சம்பிரதாய முறையினால் இறைவனுடைய வார்த்தையை செல்லுபடியற்றதாக்குகிறீர்கள். அத்துடன் நீங்கள் இதுபோன்று வேறு அநேக காரியங்களையும் செய்கின்றீர்கள்” என்றார். 7:14 மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்துச் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் கவனித்துக் கேட்டு, நான் சொல்வதை விளங்கிக்கொள்ளுங்கள். 7:15 மனிதனுக்கு வெளியே இருப்பது எதுவும் அவனுக்குள்ளே போவதனால் அவன் அசுத்தமாவதில்லை. ஆனால் மனிதனுக்குள்ளேயிருந்து வெளியே வருகின்றவைகளே அவனை அசுத்தப்படுத்துகின்றன. 7:16 காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்று கூறினார். 7:17 பின்பு மக்கள் கூட்டத்தைவிட்டு அவர் புறப்பட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது அவருடைய சீடர்கள், அவர் சொன்ன இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடம் கேட்டார்கள். 7:18 அவர் அவர்களிடம், “நீங்களும் புரிந்துகொள்வதில் மந்தமானவர்களா? ஒரு மனிதனுக்கு வெளியே இருந்து அவனுக்கு உள்ளே போகின்றவை அவனை அசுத்தப்படுத்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? 7:19 ஏனெனில் அது அவனுடைய இருதயத்திற்குள் போகாமல் அவனுடைய வயிற்றுக்குள் போய் அவனது உடலைவிட்டு வெளியேறி விடுகிறது அல்லவா?” என்றார். (இப்படிச் சொல்லி, இயேசு எல்லா உணவுப் பொருட்களுமே தீட்டற்றவை என்று அறிவித்தார்.) 7:20 அவர் தொடர்ந்து: “ஒரு மனிதனுக்குள்ளிருந்து வெளியே வருவதே அவனை அசுத்தப்படுத்தும். 7:21 ஏனெனில், மனிதருடைய இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், முறைகேடான பாலுறவு, களவு, கொலை, 7:22 தகாத உறவு, பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்றவை வருகின்றன. 7:23 தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதனை அசுத்தப்படுத்துகின்றன” என்றார். 7:24 இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு பட்டணத்தின் சுற்றுப்புறத்திற்குச் சென்றார். அவர் ஒரு வீட்டிற்குள் போய், தான் அங்கு இருப்பதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டும் என்று விரும்பினார்; ஆயினும், அவரால் மறைவாய் இருக்க முடியவில்லை. 7:25 அவரைக் குறித்து கேள்விப்பட்ட ஒரு பெண் உடனே அவரிடம் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவளது சிறிய மகளை ஒரு தீய ஆவி பிடித்திருந்தது. 7:26 சீரோபேனிக்கியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்த கிரேக்கப் பெண் தனது மகளிடத்திலிருக்கும் அந்தப் பேயைத் துரத்திவிடும்படி, இயேசுவைக் கெஞ்சிக் கேட்டாள். 7:27 அவர் அவளிடம், “முதலில் பிள்ளைகள், அவர்களுக்கு வேண்டியதைச் சாப்பிடட்டும். ஏனெனில் பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார். 7:28 அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆயினும் மேசையின் கீழ் இருக்கும் நாய்க்குட்டிகள், பிள்ளைகள் சிந்தும் அப்பத் துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தாள். 7:29 அப்போது அவர் அவளிடம், “உனது இந்தப் பதிலே போதும், நீ போகலாம்; அந்தப் பேய் உன் மகளைவிட்டுச் சென்றுவிட்டது” என்றார். 7:30 அப்படியே அவள் வீட்டிற்குப் போய் தனது பிள்ளை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். அந்தப் பேய் அவளைவிட்டுப் போயிருந்தது. 7:31 அதற்குப் பின்பு இயேசு, தீருவின் சுற்றுப்புறத்தைவிட்டுப் புறப்பட்டு சீதோன் வழியாகப் போய் தெக்கப்போலி பிரதேசத்திலுள்ள கலிலேயாக் கடல் பகுதியை அடைந்தார். 7:32 அங்கே காது கேளாதவனும் பேச்சுக் குறைபாடு உள்ளவனுமாயிருந்த ஒருவனை சிலர் அவரிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள். அவன்மீது இயேசு தமது கைகளை வைக்க வேண்டுமென்று அவர்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். 7:33 அப்போது அவர் மக்கள் கூட்டத்திலிருந்து அவனைத் தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்துப் போய், அவனுடைய காதுகளுக்குள் தமது விரல்களை வைத்தார். பின்பு அவர் துப்பி அவனது நாவைத் தொட்டார். 7:34 அவர் ஆழ்ந்த பெருமூச்சுடன் வானத்தை நோக்கிப் பார்த்து, “எப்பத்தா!” என்றார். அதன் அர்த்தம் “திறக்கப்படுவாயாக” என்பதாகும். 7:35 உடனே, அவனுடைய காதுகள் திறவுண்டன. அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் தெளிவாகப் பேசத் தொடங்கினான். 7:36 இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவர் சொல்ல வேண்டாம் என்று எவ்வளவு அதிகமாய்ச் சொன்னாரோ, அவ்வளவு அதிகமாய் அந்தச் செய்தியை அவர்கள் பரப்பினார்கள். 7:37 மக்களோ வியப்படைந்து மலைத்துப் போனவர்களாக, “அவர் எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார். அவர் செவிப்புலனற்றவர்களைக் கேட்கவும், பேச முடியாதவர்களைப் பேசவும் வைக்கிறாரே” என்றார்கள்.