Mark 6
6:1 இயேசு அங்கிருந்து புறப்பட்டு தமது சொந்த பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் அவருடன் போனார்கள்.
6:2 ஓய்வுநாளிலே அவர் அவர்களுக்கு ஜெபஆலயத்தில் போதிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட அநேகர் வியப்படைந்தவர்களாய், “இந்தக் காரியங்களை இவன் எங்கிருந்து பெற்றான்? இவனுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ஞானம் எப்படிப்பட்டது? இவனால் எப்படி இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய முடிகின்றது?
6:3 இவன் மரியாளின் மகனான தச்சன் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, யூதா, சீமோன் ஆகியோரின் சகோதரன் அல்லவா? இவனுடைய சகோதரிகளும் நம்முடன் இருக்கின்றார்களே” என்று சொல்லி அவரை ஏற்றுக்கொள்ளாமல் எரிச்சலும் கோபமும் அடைந்தார்கள்.
6:4 இயேசு அவர்களிடம், “ஒரு இறைவாக்கினருக்கு அவரது சொந்த ஊரிலும், அவரது உறவினர் மத்தியிலும், அவரது குடும்பத்தவருக்குள்ளும் தவிர மற்ற இடங்களிலெல்லாம் மதிப்புண்டு” என்றார்.
6:5 நோயுற்ற ஒரு சிலர் மேல் தமது கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர அங்கு அவரால் வேறு அற்புதங்களை செய்ய முடியவில்லை.
6:6 அவர்கள் விசுவாசத்தில் குறைவாயிருப்பதைக் கண்டு அவர் வியப்படைந்தார். பின்பு இயேசு கிராமம் கிராமமாகச் சென்று போதித்தார்.
6:7 அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பி அவர்களுக்கு தீய ஆவிகளுக்கு மேலாக அதிகாரத்தையும் கொடுத்தார்.
6:8 அவர் அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “ஒரு கைத்தடியைத் தவிர பயணத்திற்கென்று எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம். உணவோ, பயணப்பையோ, மடிப்பையில் பணமோ கொண்டுபோக வேண்டாம்.
6:9 காலணிகளை அணிந்துகொள்ளுங்கள், ஆனால் மாற்று உடையையோ கொண்டுபோக வேண்டாம்.”
6:10 மேலும் அவர் அவர்களிடம், “நீங்கள் போகும் பட்டணங்களில் ஒரு வீட்டிற்குள் போனால் அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும் வரை அங்கேயே தங்கியிருங்கள்.
6:11 எதாவது ஒரு இடத்திலுள்ளவர்கள் உங்களை வரவேற்காமலோ, நீங்கள் செல்வதைக் கேட்பதற்கு மனதற்றவர்களாகவோ இருந்தால், நீங்கள் அங்கிருந்து புறப்படும்போது உங்கள் கால் தூசியை அங்கே உதறிவிட்டுப் போங்கள். அது அவர்களுக்கு எதிரான சாட்சியாய் இருக்கும்” என்றார்.
6:12 அவர்கள் புறப்பட்டுப் போய் மனிதர்கள் மனந்திரும்ப வேண்டும் என்று பிரசங்கித்தார்கள்.
6:13 அத்துடன் அவர்கள் அநேக பேய்களைத் துரத்தி, நோயாளிகள் பலருக்கு எண்ணெய் பூசி, அவர்களைக் குணமாக்கினார்கள்.
6:14 இயேசுவின் பெயர் பிரபல்யம் அடைந்திருந்தபடியால் ஏரோது அரசனும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டான். சிலரோ, “யோவான் ஸ்நானகன் திரும்பவும் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறான், அதனால்தான் இவனால் வல்லமையான அற்புதங்களைச் செய்ய முடிகின்றது” என்றார்கள்.
6:15 மற்றவர்களோ, “இவன் எலியா” என்றார்கள். இன்னும் சிலரோ, “இவன் முற்காலத்தில் இருந்த இறைவாக்கினரைப் போன்ற ஒரு இறைவாக்கினன்” என்றார்கள்.
6:16 ஆனால் ஏரோது இதைக் கேள்விப்பட்டபோது, “நான் சிரச்சேதம் செய்த யோவானே இறந்தோரிலிருந்து எழுப்பப்பட்டிருக்கிறான்!” என்றான்.
6:17 ஏனெனில், ஏரோதுவே யோவானைக் கைது செய்ய உத்தரவிட்டு, அவனைக் கட்டி சிறையில் அடைத்திருந்தான். தான் திருமணம் செய்திருந்திருந்த தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு அவன் இதைச் செய்திருந்தான்.
6:18 யோவான் ஏரோதுவிடம், “உன் சகோதரனின் மனைவியை நீ வைத்திருப்பது நீதிச்சட்டத்திற்கு மாறானது” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.
6:19 இதனால் ஏரோதியாள், யோவானுக்கு விரோதமாய் பகையுணர்வு கொண்டு அவனைக் கொலை செய்ய விரும்பினாள். ஆனால் அவளால் அதைச் செய்ய முடியவில்லை.
6:20 ஏனெனில் யோவான் நீதிமான் என்பதையும் பரிசுத்தம் உள்ளவன் என்பதையும் ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து அவனைப் பாதுகாத்து வந்தான். யோவான் பேசுவதை கேட்ட போதெல்லாம் ஏரோது மிகவும் குழப்பமடைந்தான்; இருப்பினும், யோவான் பேசுவதை விருப்பத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
6:21 கடைசியாக, ஏரோதியாளுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. ஏரோது தனது பிறந்த நாளிலே தனது உயர் அதிகாரிகளுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயாவிலுள்ள பிரமுகர்களுக்கும் ஒரு விருந்து கொடுத்தான்.
6:22 ஏரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் அவனுடைய விருந்தினர்களையும் மகிழ்ச்சிப்படுத்தினாள். எனவே அரசன் அந்தச் சிறுமியிடம், “உனக்கு விருப்பமான எதையும் கேள். அதை நான் உனக்குத் தருவேன்” என்றான்.
6:23 மேலும், “நீ எதைக் கேட்டாலும், அது எனது அரசில் பாதியாய் இருந்தாலும், நான் தருவேன்” என்று ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான்.
6:24 அவள் வெளியே போய் தனது தாயிடம் இதைச் சொல்லி, “நான் எதைக் கேட்க வேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு அவள், “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என்றாள்.
6:25 உடனே அந்தச் சிறுமி வேகமாய் அரசனிடம் வந்து, “இப்பொழுதே யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து, நீர் எனக்குத் தர வேண்டும்” என்று கேட்டாள்.
6:26 அரசனோ மிகவும் துக்கமடைந்தான். ஆயினும், அவன் தான் கொடுத்த ஆணையின் பொருட்டும், தனது விருந்தினர்களின் பொருட்டும் அதை அவளுக்கு மறுக்க விரும்பவில்லை.
6:27 எனவே உடனடியாக யோவானின் தலையைக் கொண்டுவரும்படி அரசன் உத்தரவிட்டு, ஒரு காவலனை அனுப்பினான். அவன் போய் சிறையிலிருந்த யோவானைச் சிரச்சேதம் செய்து,
6:28 அவனுடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்து அதை அந்தச் சிறுமிக்குக் கொடுத்தான்; அவள் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
6:29 யோவானின் சீடர்கள் இதைக் கேள்விப்பட்டபோது, அவர்கள் வந்து அவனது உடலை எடுத்து அதை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
6:30 அப்போஸ்தலர்கள் இயேசுவினிடம் திரும்பி வந்து, தாங்கள் செய்தவற்றையும், போதித்தவற்றையும் அறிவித்தார்கள்.
6:31 அங்கே அநேகர் வருவதும் போவதுமாய் இருந்தபடியால் அவர்களுக்குச் சாப்பிடக்கூட நேரமில்லாதிருந்தது. எனவே அவர் அவர்களிடம், “நாம் போய் அமைதியான இடத்தில் இளைப்பாறுவோம்” என்றார்.
6:32 எனவே அவர்கள் ஒரு படகில் ஏறி ஒரு தனிமையான இடத்திற்குப் போனார்கள்.
6:33 அவர்கள் புறப்பட்டுப் போவதை அநேகர் கண்டு, அவர்களை யாரென்று தெரிந்து கொண்டார்கள். எனவே, எல்லாப் பட்டணங்களிலிருந்தும் வந்திருந்த அந்த மக்கள் நடையாக விரைந்தோடிச் சென்று அவர்களுக்கு முன்னால் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
6:34 அவர் கரை இறங்கியபோது திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டார். அவர்கள் மேய்ப்பன் இல்லாத செம்மறியாடுகளைப் போல் இருந்ததால், அவர்கள்மீது அவர் அனுதாபம்கொண்டு அவர்களுக்கு அநேக காரியங்களைப் போதிக்கத் தொடங்கினார்.
6:35 இப்படியாக அதிக நேரம் கடந்துவிட்டதால் அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இது ஒதுக்குப்புறமான ஒரு இடம், வெகு நேரமுமாகிவிட்டது.
6:36 ஆகவே இந்த மக்களை அனுப்பி விடும். இவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய் தங்களுக்கு உண்பதற்கு எதையாவது வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள்.
6:37 அதற்கு அவர், “நீங்களே இவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்றார். சீடர்கள் அவரிடம், “நாங்கள் போய் இருநூறு தினாரி பணத்துக்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க முடியுமா?” என்றார்கள்.
6:38 அப்போது அவர், “உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன என்று போய்ப் பாருங்கள்” என்றார். அவர்கள் பார்த்துவிட்டு, “ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கின்றன” என்றார்கள்.
6:39 அப்போது இயேசு, எல்லா மக்களையும் புற்தரையில் கூட்டம் கூட்டமாக உட்காரும்படி சொன்னார்.
6:40 அப்படியே அவர்கள் நூறுநூறு பேராகவும் ஐம்பதைம்பது பேராகவும் உட்கார்ந்தார்கள்.
6:41 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி அப்பங்களைத் துண்டுகளாக்கினார். பின்பு அவர் அந்த அப்பங்களை மக்களுக்குக் கொடுக்கும்படி சீடர்களிடம் கொடுத்தார். அத்துடன் அந்த இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.
6:42 அவர்கள் எல்லோரும் உணவு உண்டு திருப்தியடைந்தார்கள்.
6:43 சீடர்கள் மீதியான அப்பத் துண்டுகளையும் மீன்களையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
6:44 உணவு உண்ட ஆண்களின் எண்ணிக்கை மாத்திரம் ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
6:45 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில், தமக்கு முன்னதாக சீடர்களைப் படகில் ஏறி பெத்சாயிதாவுக்கு உடனே போகும்படி செய்தார்.
6:46 அவர் அவர்களைவிட்டுப் புறப்பட்ட பின்பு மன்றாடும்படி மலையின்மேல் ஏறினார்.
6:47 மாலை வேளையானபோது சீடர்கள் ஏறிச் சென்ற படகு நடுக்கடலில் போய்க் கொண்டிருந்தது. அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
6:48 எதிர்க்காற்று வீசியதால் அவர்கள் படகைச் செலுத்தக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததை அவர் கண்டார்; அதிகாலை சுமார் மூன்று மணியளவில் இயேசு கடலின் மேல் நடந்து அவர்களிடம் சென்றார். அவர் அவர்களைக் கடந்து போகும்போது,
6:49 அவர் கடலின் மேல் நடப்பதை அவர்கள் கண்டபோது அவரை ஒரு பேய் என்று நினைத்து அலறினார்கள்.
6:50 ஏனெனில் அவர்கள் எல்லோரும் அவரைக் கண்டு பயமடைந்திருந்தார்கள். உடனே அவர் அவர்களுடன் பேசி, “தைரியமாயிருங்கள்! நான்தான், பயப்பட வேண்டாம்” என்றார்.
6:51 பின்பு அவர், அவர்களுடன் அந்தப் படகில் ஏறினார், அப்போது காற்று தணிந்து போயிற்று. அவர்கள் மிகவும் வியந்து திகைத்தார்கள்.
6:52 ஏனெனில் அப்பங்களைத் துண்டுகளாக்கி அநேகருக்கு கொடுத்த அவரது வல்லமையைப் புரிந்துகொள்ளாதபடி அவர்களுடைய மனம் கடினப்பட்டு இருந்தது.
6:53 அவர்கள் மறுகரைக்குச் சென்று கெனேசரேத்து என்னும் இடத்திற்கு வந்து படகைக் கரை சேர்த்தார்கள்.
6:54 அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனேயே அங்கிருந்த மக்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.
6:55 ஆகவே அந்தப் பகுதி எங்கும் ஓடி அவர் இருப்பதாக கேள்விப்பட்ட இடங்களுக்கு நோயாளிகளை அவர்களின் படுக்கைகளோடு கொண்டுவரத் தொடங்கினார்கள்.
6:56 கிராமங்களிலும், பட்டணங்களிலும், நாட்டுப் புறங்களிலும் அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் இருந்த சந்தை கூடும் இடங்களில் நோயாளிகளைக் கிடத்தினார்கள். அந்த நோயாளிகள் அவருடைய உடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அனுமதிக்கும்படி அவர்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.