Luke 18
18:1 அதன்பின்பு இயேசு, தமது சீடர்கள் மனந்தளர்ந்து போகாமல், எப்போதும் மன்றாடுகின்றவர்களாய் இருக்க வேண்டும் என்பதைக் காண்பிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு உவமையைக் கூறினார்:
18:2 “ஒரு பட்டணத்திலே ஒரு நீதிபதி இருந்தான். அவன் இறைவனுக்குப் பயப்படாதவன், மக்களையும் மதிக்காதவன்.
18:3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் தொடர்ந்து அவனிடம் வந்து, ‘எனது பகைவனுக்கு எதிராக எனக்கு நீதி வழங்குங்கள்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டாள்.
18:4 “கொஞ்சக் காலம் அவன் அப்படிச் செய்ய மறுத்தான். ஆனாலும் இறுதியாக அவன், ‘நானோ இறைவனுக்குப் பயப்படாதவன், மனிதரையும் மதிக்காதவன். இருந்தாலும்கூட,
18:5 இந்த விதவை தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுக்கின்றாள்; அதனால், நான் அவளுக்கு நீதி வழங்குவேன். அப்போது அவள் இப்படித் தொடர்ந்து வந்து, என்னைத் தொந்தரவு செய்ய மாட்டாள்’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்” என்றார்.
18:6 பின்னும் ஆண்டவர், “அநீதியான அந்த நீதிபதி சொன்னதைக் கேட்டீர்களா?
18:7 அப்படியிருக்கும்போது, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ?
18:8 நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவர்களுக்கு அவர் விரைவாகவே நீதி வழங்குவார். ஆயினும் மனுமகன் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?” என்றார்.
18:9 தங்களை நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்களைக் கீழ்த்தரமாய் எண்ணிய சிலரைக் குறித்து, இயேசு இந்த உவமையைச் சொன்னார்:
18:10 “இரண்டு பேர் மன்றாடும்படி ஆலயத்திற்குப் போனார்கள். அதில் ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி சேகரிப்பவன்.
18:11 அந்தப் பரிசேயன் எழுந்து நின்று, ‘இறைவனே, நான் மற்ற மனிதர்களைப் போலவோ, கள்வர்கள், தீயவர்கள், தகாத உறவில் ஈடுபடுகின்றவர்கள் அல்லது இந்த வரி சேகரிப்பவனைப் போலவோ இல்லாதபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
18:12 வாரத்தில் நான் இரண்டு தடவை உபவாசிக்கிறேன், எனது எல்லா வருமானத்திலும் பத்திலொன்றைக் கொடுக்கின்றேன்’ என்று தனக்குத்தானே சொல்லி மன்றாடினான்.
18:13 “ஆனால், வரி சேகரிப்பவனோ தூரமாய் நின்று, வானத்தை நோக்கிப் பார்க்கவும் துணியாமல், தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘இறைவனே, பாவியான எனக்கு இரக்கம் காட்டும்’ என்றான்.
18:14 “நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரிசேயன் அல்ல, இவனே இறைவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகத் தீர்க்கப்பட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான். ஏனெனில், தன்னைத் தானே உயர்த்துகின்ற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தானே தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான்.”
18:15 குழந்தைகளை இயேசு தொட வேண்டும் என்பதற்காக, மக்கள் அவர்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்கள் இதைக் கண்டபோது, அவர்களைக் கண்டித்தார்கள்.
18:16 ஆனால் இயேசுவோ பிள்ளைகளைத் தம்மிடம் வரவழைத்து, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது.
18:17 உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எவனாவது ஒரு சிறு பிள்ளையைப் போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் ஒருபோதும் அதற்குள் செல்ல மாட்டான்” என்றார்.
18:18 அப்போது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
18:19 அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கின்றாய்? இறைவனைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
18:20 ‘தகாத உறவுகொள்ளாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச் சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.
18:21 அதற்கு அவன், “என்னுடைய சிறு வயதிலிருந்தே, இவற்றையெல்லாம் நான் கடைப்பிடித்து வந்திருக்கிறேன்” என்றான்.
18:22 இயேசு இதைக் கேட்டபோது, அவர் அவனிடம், “உன்னிடம் இன்னும் ஒரு குறைபாடு இருக்கின்றது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்போது பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
18:23 இதைக் கேட்டபோது அவன் மிகவும் துக்கமடைந்தான். ஏனெனில், அவன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்தான்.
18:24 இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரர்கள் இறைவனுடைய அரசிற்குள் செல்வது எவ்வளவு கடினமாய் இருக்கின்றது!
18:25 பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைவிட, ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள்ளாக நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.
18:26 இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள்.
18:27 அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்ய முடியும்” என்றார்.
18:28 பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக, எங்களிடம் உள்ளதையெல்லாம் கைவிட்டு வந்தோமே” என்றான்.
18:29 அதற்கு இயேசு, “ஒருவன் இறைவனுடைய அரசின் பொருட்டு, வீட்டையோ மனைவியையோ சகோதரர்களையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டிருந்தால்,
18:30 அவன் இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் தவறாது பெற்றுக்கொள்வான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.
18:31 இயேசு பன்னிருவரையும் ஒரு பக்கமாய் அழைத்து அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகின்றோம், மனுமகனைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும்.
18:32 மனுமகன் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் அவரை ஏளனம் செய்து, அவமதித்து, அவர்மீது துப்பி,
18:33 அவரைச் சாட்டையினால் அடித்து, கொலை செய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலோ, அவர் உயிருடன் எழுந்திருப்பார்” என்று சொன்னார்.
18:34 சீடர்களோ, இவைகளில் ஒன்றையும் விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதன் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் பேசுவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
18:35 இயேசு எரிகோவை நெருங்கியபோது, பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.
18:36 மக்கள் கூட்டமாகச் செல்லுகின்ற சத்தத்தை அவன் கேட்டு, என்ன நடக்கின்றதென்று விசாரித்தான்.
18:37 அதற்கு அவர்கள், “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு போகின்றார்” என்று அவனுக்குச் சொன்னார்கள்.
18:38 உடனே அவன், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்” என்று சத்தமாய் அழைத்தான்.
18:39 முன்னால் போய்க் கொண்டிருந்தவர்கள், அவனை சத்தமிடாதிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அவனோ, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்” என்று இன்னும் அதிக சத்தமாய் அழைத்தான்.
18:40 இயேசு நின்று, அந்த மனிதனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனிடம்,
18:41 “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான்.
18:42 இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன்னுடைய விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது” என்றார்.
18:43 உடனே அவன் பார்வை பெற்று, இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள்.