Library · ta

Luke 19

19:1 இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்து, அதன் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். 19:2 அங்கே சகேயு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் வரி சேகரிப்பவர்களின் தலைவனாகவும், செல்வந்தனாகவும் இருந்தான். 19:3 அவன், இயேசு யார் எனப் பார்க்க விரும்பினான். ஆனால் அவன் குள்ளமாயிருந்தபடியால், அந்த மக்கள் கூட்டத்தில் அவனால் அவரைப் பார்க்க முடியவில்லை. 19:4 எனவே, அந்த வழியாக வந்து கொண்டிருந்த இயேசுவைப் பார்ப்பதற்காக, முன்னால் ஓடிப் போய், ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக் கொண்டான். 19:5 இயேசு அவ்விடத்திற்கு வந்தபோது, மேலே அண்ணாந்து பார்த்து, “சகேயுவே, உடனடியாய் கீழே இறங்கி வா. நான் இன்றைக்கு உன்னுடைய வீட்டில் தங்க வேண்டும்” என்று அவனுக்குச் சொன்னார். 19:6 அவன் உடனே இறங்கி வந்து, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். 19:7 எல்லா மக்களும் இதைக் கண்டு, “ஒரு பாவியின் வீட்டிற்கு இவர் விருந்தாளியாய் வந்திருக்கிறாரே” என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள். 19:8 ஆனால் சகேயுவோ எழுந்து நின்று ஆண்டவரிடம், “ஆண்டவரே! இதோ, என்னுடைய சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கின்றேன். நான் யாருக்காவது எதிலாவது மோசடி செய்திருந்தால், அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுப்பேன்” என்றான். 19:9 அப்போது இயேசு அவனைப் பார்த்து, “இன்று இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. ஏனெனில் இவனும் ஆபிரகாமிற்கு மகனாயிருக்கிறானே. 19:10 வழி தவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மனுமகன் வந்திருக்கிறார்” என்றார். 19:11 அவர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் தொடர்ந்து அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்; அவர் எருசலேமுக்கு அருகில் இருந்ததாலும், இறைவனுடைய அரசு உடனடியாகவே வரப் போகின்றது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததாலும், அவர் இதைச் சொன்னார்: 19:12 “அரச குலத்தைச் சேர்ந்த ஒருவன், தான் ஒரு அரசனாக நியமனம் பெற்றுத் திரும்பி வர, தூர நாடொன்றுக்குப் புறப்பட்டான். 19:13 அப்போது, அவன் தன் வேலையாட்களில் பத்துப் பேரை அழைத்து, பத்து மினா பணத்தில் அவர்களுக்கு ஆளுக்கொரு பணத்தைக் கொடுத்து, ‘நான் வரும்வரை இந்தப் பணத்தைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள்’ என்றான். 19:14 “ஆனால், அவனுடைய குடிமக்களோ அவனை வெறுத்து, ‘இந்த மனிதன் எங்களை அரசாளுவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்லும்படி, அவனுக்குப் பின்னாலே பிரதிநிதிகளை அனுப்பினார்கள். 19:15 “ஆயினும், அவன் அரசனாக அதிகாரம் பெற்றுத் திரும்பி வந்தபோது, தான் பணம் கொடுத்த வேலையாட்கள், வியாபாரம் செய்து எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறிவதற்கு அவர்களை அழைத்தான். 19:16 “முதலாவது ஆள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு மினா பணத்தைக்கொண்டு, இன்னும் பத்து மினா பணத்தைச் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 19:17 “அதற்கு அவனுடைய எஜமான், ‘நல்ல பணியாளனே! நன்றாய் செய்தாய். நீ மிகவும் சிறிய காரியத்தில் உண்மை உள்ளவனாய் இருந்தபடியால், பத்துப் பட்டணங்களுக்கு நீ பொறுப்பாயிரு’ என்றான். 19:18 “இரண்டாவது ஆள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு மினா பணத்தைக்கொண்டு இன்னும் ஐந்து மினா பணத்தைச் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 19:19 “அதற்கு அவனுடைய எஜமான், ‘நீ ஐந்து பட்டணங்களுக்குப் பொறுப்பாயிரு’ என்றான். 19:20 “பின்பு இன்னொருவன் வந்து, ‘ஐயா, இதோ நீர் தந்த ஒரு மினா பணம்; நான் அதை ஒரு கைக்குட்டையில் சுற்றி வைத்திருந்தேன். 19:21 நீர் கடினமான ஒரு மனிதர், ஆனபடியால் நான் பயந்திருந்தேன். நீர் சேர்த்து வைக்காததை எடுக்கின்றவர், விதைக்காததை அறுவடை செய்கின்றவர் என்றும் எனக்குத் தெரியும்’ என்றான். 19:22 “அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, உன்னுடைய சொந்த வார்த்தைகளின்படியே, நான் உனக்குத் தீர்ப்புக் கொடுக்கின்றேன்; நான் சேர்த்து வைக்காததை எடுக்கின்றவனும், விதைக்காததை அறுவடை செய்கின்றதுமான, கடினமான ஒரு மனிதன் என்று அறிந்திருந்தாயே. 19:23 அப்படியானால், நீ ஏன் எனது பணத்தை வங்கியில் சேர்த்து வைக்கவில்லை? நான் திரும்பி வரும்போது, அந்தப் பணத்தை வட்டியோடு எடுத்திருப்பேனே’ என்றான். 19:24 “பின்பு அவன், அருகே நின்றவர்களைப் பார்த்து, ‘அந்த மினா பணத்தை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினா வைத்திருக்கின்றவனிடத்தில் கொடுங்கள்’ என்றான். 19:25 “அதற்கு அவர்கள், ‘ஐயா, அவனிடம் பத்து மினா பணம் இருக்கின்றதே’ என்றார்கள். 19:26 “அதற்கு அவன், ‘நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உள்ளவன் ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். இல்லாதவனிடத்திலிருந்தோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 19:27 நான் தங்கள் மேல் அரசனாயிருப்பதை விரும்பாத என்னுடைய பகைவர்களை, இங்கே கொண்டுவாருங்கள். அவர்களை எனக்கு முன்பாகக் கொன்று போடுங்கள்’ என்றான்.” 19:28 இயேசு இவைகளைச் சொன்ன பின்பு, எருசலேமை நோக்கி முன்னே நடந்து சென்றார். 19:29 அவர் ஒலிவமலை என்று அழைக்கப்பட்ட குன்றுக்கு அருகேயிருந்த பெத்பகே, பெத்தானியா ஆகிய இடங்களுக்கு அருகில் வந்தபோது, தம்முடைய சீடர்களில் இருவரை அழைத்து, 19:30 “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகும்போது, அங்கே ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதில் ஒருவருமே இதுவரை ஏறிச் சென்றதில்லை. அதை அவிழ்த்து, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள். 19:31 யாராவது உங்களிடம், ‘அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்கு தேவைப்படுகிறது’ என்று சொல்லுங்கள்” என்றார். 19:32 இப்படியாக அனுப்பப்பட்டவர்கள் போனபோது, அவர் தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே கழுதைக்குட்டி அங்கே இருப்பதைக் கண்டார்கள். 19:33 அவர்கள் அதை அவிழ்க்கின்றபோது, அதன் உரிமையாளர்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். 19:34 அதற்கு அவர்கள், “ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது” என்றார்கள். 19:35 அவர்கள் அதை இயேசுவிடம் கொண்டுவந்து, தங்கள் மேலாடைகளை அந்தக் கழுதைக்குட்டியின் மீது போட்டு, அதன்மீது இயேசுவை உட்கார வைத்தார்கள். 19:36 அவர் போய்க் கொண்டிருக்கையில், மக்கள் தங்கள் மேலாடைகளை வீதியிலே விரித்தார்கள். 19:37 ஒலிவமலையிலிருந்து கீழ்நோக்கிப் போகின்ற, பாதைக்கு அருகில் இயேசு வந்தபோது, திரளாய்க் கூடியிருந்த சீடர்கள் எல்லோரும் தாங்கள் கண்ட எல்லா அற்புதங்களுக்காகவும் மகிழ்ச்சியுடன், உரத்த குரலில் இறைவனைத் துதிக்கத் தொடங்கினார்கள்: 19:38 “கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “பரலோகத்தில் சமாதானமும், உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக!” 19:39 மக்கள் கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, உமது சீடர்களைக் கண்டியும்” என்றார்கள். 19:40 அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவர்கள் பேசாமல் மௌனமாய் இருந்தால், இந்தக் கற்களே சத்தமிடும்” என்றார். 19:41 அவர் எருசலேமுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழுது, 19:42 “உங்களுக்குச் சமாதானத்தைத் தரக் கூடியதை, இன்றைக்காவது நீங்கள் அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்பொழுதோ, அது உங்கள் பார்வைக்கு மறைக்கப்பட்டதாகவே இருக்கின்றது. 19:43 உங்கள் பகைவர்கள், பட்டணத்தைச் சுற்றி போர்க்கள அரண்களை அமைத்து, உங்களை முற்றுகையிட்டு, எல்லாப் பக்கங்களிலும் இருந்து உங்களை நெருக்கி, 19:44 உங்களையும், மதிலுக்குள்ளே உங்களோடிருக்கின்ற உங்கள் பிள்ளைகளையும், தரையில் மோதியடிக்கும் நாட்கள் வரும். அத்துடன், ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இராதபடி, பட்டணத்தைத் தரைமட்டமாக்கி விடுவார்கள். ஏனெனில், இறைவனின் வருகையை நீங்கள் அறிந்துகொள்ளவில்லையே” என்றார். 19:45 பின்பு அவர் ஆலய வளாகத்துக்குள் போய், அங்கே பொருட்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கினார். 19:46 அவர் அவர்களிடம், “ ‘எனது வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என எழுதியிருக்கிறதே; ஆனால் நீங்கள் அதைக் கள்வர் குகையாக்கி விட்டீர்கள்” என்றார். 19:47 அவர் ஒவ்வொரு நாளும் ஆலயத்திலே போதித்துக் கொண்டிருந்தார். தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும் அவரைக் கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள். 19:48 இருந்தும், எல்லா மக்களும் அவருடைய வார்த்தையை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தபடியால், அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.