Library · ta

Luke 20

20:1 ஒரு நாள் இயேசு ஆலயத்தில் போதித்துக்கொண்டும், நற்செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டும் இருந்தபோது தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களுடன் ஒன்றுசேர்ந்து அவரிடம் வந்து, 20:2 “நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கின்றீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்?” என்று கேட்டார்கள். 20:3 அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். 20:4 யோவானின் ஞானஸ்நானம் பரலோகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?” என்று கேட்டார். 20:5 அவர்கள் தங்களுக்குள்ளே அதைக் குறித்து கலந்து பேசி, “ ‘அது பரலோகத்திலிருந்து வந்தது’ என்று நாம் சொல்வோமானால், ‘நீங்கள் ஏன் யோவானை விசுவாசிக்கவில்லை?’ என்று இவர் நம்மைக் கேட்பார். 20:6 ‘அது மனிதரிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், எல்லா மக்களும் நம்மைக் கல்லால் அடிப்பார்கள்; ஏனெனில் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று அவர்கள் நம்புகிறார்களே” என்று சொன்னார்கள். 20:7 எனவே அவர்கள் இயேசுவிடம், “அது எங்கிருந்து வந்ததோ, எங்களுக்குத் தெரியாது” என்றார்கள். 20:8 அதற்கு இயேசு, “எந்த அதிகாரத்தினால் நான் இதைச் செய்கின்றேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார். 20:9 இயேசு தொடர்ந்து, மக்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கினான். அவன் அதைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, நீண்ட காலத்திற்கு ஒரு பயணம் சென்றான். 20:10 அறுவடைக் காலத்தின்போது திராட்சைத் தோட்டத்திலிருந்து, தனது பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக, தோட்டத்தின் சொந்தக்காரன் தனது வேலைக்காரனை குத்தகைக்காரர்களிடம் அனுப்பினான். ஆனால் அந்த குத்தகைக்காரர்களோ, அவனை அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள். 20:11 தோட்டத்தின் சொந்தக்காரன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான். அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள். 20:12 மூன்றாவது முறையும் வேறொருவனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தி, வெளியே துரத்திவிட்டார்கள். 20:13 “அப்போது திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், ‘நான் என்ன செய்வேன்? நான் நேசிக்கின்ற என் மகனை அனுப்புவேன்; ஒருவேளை, அவர்கள் அவனுக்கு மரியாதை கொடுப்பார்கள்’ என்றான். 20:14 “ஆனால் குத்தகைக்காரர்கள், மகனைக் கண்டபோது, ‘இவனே உரிமையாளனின் வாரிசு, இவனைக் கொலை செய்வோம்; அப்போது இந்த உரிமைச் சொத்து நம்முடையதாகும்’ என தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 20:15 அவ்வாறே, அவர்கள் அவனைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, கொலை செய்தார்கள். “அப்படியானால், அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், அவர்களுக்கு என்ன செய்வான்? 20:16 அவன் வந்து, அந்த குத்தகைக்காரர்களைக் கொலை செய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான்” என்றார். மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படி ஒருபோதும் ஆகாதிருப்பதாக!” என்றார்கள். 20:17 அப்போது இயேசு அவர்களை உற்று நோக்கி, “அப்படியானால், “ ‘கட்டடம் கட்டுகின்றவர்கள் நிராகரித்த கல்லே, மூலைக்குத் தலைக்கல் ஆயிற்று’ என்று, எழுதியிருப்பதன் அர்த்தம் என்ன? 20:18 அந்தக் கல்லின் மேல் விழுகின்ற ஒவ்வொருவனும், துண்டு துண்டாகச் சிதறிப் போவான். அந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அது அவனை நசுக்கிப் போடும்” என்றார். 20:19 அவர் இந்த உவமையை தங்களுக்கு எதிராகவே சொன்னார் என்று நீதிச்சட்ட ஆசிரியர்களும், தலைமை மதகுருக்களும் அறிந்து, அவரைக் கைது செய்ய வழி தேடினார்கள். ஆனாலும், அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்தார்கள். 20:20 இயேசுவை மிகக் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்த அவர்கள், நீதிமான்களைப் போல் பாசாங்கு செய்யும் ஒற்றர்களை அவரிடம் அனுப்பினார்கள். அவர்களோ இயேசு சொல்லும் வார்த்தையினால் அவரைக் குற்றம் சாட்டி, ஆளுநரின் சட்ட வரையறைக்குள்ளான அதிகாரத்திற்கு ஒப்படைக்க நினைத்தார்கள். 20:21 எனவே அந்த ஒற்றர்கள் அவரிடம், “போதகரே, நீர் சரியானதையே பேசுகின்றீர் என்றும், போதிக்கின்றீர் என்றும் நாங்கள் அறிவோம். நீர் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல என்றும், இறைவனின் வழியை உண்மையின்படியே போதிக்கிறீர் என்றும் அறிவோம். 20:22 நாங்கள், ரோம பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியா, இல்லையா?” என்று கேட்டார்கள். 20:23 அவர் அவர்களின் தந்திரத்தை அறிந்து கொண்டவராய் அவர்களிடம், 20:24 “ஒரு தினாரி நாணயத்தை எனக்குக் காட்டுங்கள். இந்த நாணயத்திலே இருக்கும் உருவமும், பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “பேரரசன் சீசருடையது” என்று பதிலளித்தார்கள். 20:25 அவர் அவர்களிடம், “அப்படியானால் சீசருக்குரியதை சீசருக்கும், இறைவனுக்குரியதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார். 20:26 மக்களுக்கு முன்பாக அவர் சொன்ன வார்த்தைகளிலே, அவர்களால் அவர்மீது குற்றம் காண முடியவில்லை. அவர்கள் அவருடைய பதிலைக் கேட்டு, வியப்புற்று மௌனமானார்கள். 20:27 உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள். 20:28 அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாய் இறந்துபோனால், இறந்தவனின் மனைவியை, அவனது சகோதரன் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்காக சந்ததியை உருவாக்க வேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். 20:29 இப்படியாக, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்து போனான். 20:30 இரண்டாவது சகோதரனும், 20:31 பின் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக இறந்து போனார்கள். அப்படியே ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் இறந்து போனார்கள். 20:32 இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள். 20:33 அப்படியானால், இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள். 20:34 இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கின்றார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். 20:35 ஆனால் வரப் போகின்ற காலத்தையும் இறந்தோரின் உயிர்த்தெழுதலையும் அடைந்து, அதை அனுபவிக்க தகுதியுள்ளவர்களாய் கருதப்படுகின்றவர்களோ, அப்போது திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் இல்லை. 20:36 அவர்களால் இறந்து போகவும் முடியாது; ஏனெனில் அவர்கள் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள். 20:37 இறந்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும்கூட முட்புதரைப் பற்றிய அவரது பதிவிலே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார். ஏனெனில் அவர் கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கின்றார். 20:38 அவர் இறந்தவர்களின் இறைவனல்ல, உயிருள்ளவர்களின் இறைவனாய் இருக்கின்றார். ஏனெனில், இறைவனைப் பொறுத்தவரையில் அவர்கள் எல்லோரும் உயிருள்ளவர்களாகவே இருக்கின்றார்கள்” என்றார். 20:39 நீதிச்சட்ட ஆசிரியர்களில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள். 20:40 அதன்பின்பு, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை. 20:41 இயேசு அவர்களிடம், “மேசியாவை தாவீதின் மகன் என்று சொல்கின்றார்களே, அது எப்படி? 20:42 சங்கீதப் புத்தகத்தில் தாவீதும், “கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னதாவது: ‘நீர் எனது வலது பக்கத்தில் அமர்ந்திரும், 20:43 நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை அமர்ந்திரும்.’ 20:44 தாவீது அவரை ஆண்டவர் என்று அழைக்கின்றபடியால், அவர் எப்படி தாவீதின் மகனாய் இருக்கக் கூடும்?” என்றார். 20:45 மக்கள் எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு தமது சீடர்களிடம், 20:46 “நீதிச்சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்து திரிவதையும், சந்தை கூடும் இடங்களில் வாழ்த்துதல்களைப் பெறுவதையும் விரும்புகிறார்கள். ஜெபஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், விருந்துகளிலே மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். 20:47 அவர்கள் விதவைகளின் வீடுகளை கொள்ளையடிப்பதுடன், மற்றவர்கள் காண வேண்டும் என்பதற்காக நீண்ட மன்றாடுதலைச் செய்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.