Luke 23
23:1 பின்பு கூடியிருந்த கூட்டத்தார் அனைவரும் எழுந்து, அவரைப் பிலாத்துவினிடம் கொண்டுபோனார்கள்.
23:2 அங்கே அவர்கள், “இவன் மக்களை கிளர்ச்சியில் ஈடுபடுத்த முயன்றதை நாங்கள் கண்டோம். ரோமப் பேரரசனாகிய சீசருக்கு வரி செலுத்துவதை இவன் எதிர்ப்பதோடு, தானே மேசியாவாகிய அரசன் என்றும் சொல்லிக்கொள்கின்றான்” என அவர்மீது குற்றம் சாட்டினார்கள்.
23:3 எனவே பிலாத்து இயேசுவிடம், “நீ யூதர்களுடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீர் சொல்கின்றபடியேதான்” என்றார்.
23:4 பிலாத்து தலைமை மதகுருக்களையும், கூடியிருந்த மக்களையும் பார்த்து, “இவனுக்கு விரோதமாய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை” என்றான்.
23:5 ஆனால் அவர்களோ, “இவன் யூதேயா முழுவதிலும், கலிலேயா தொடங்கி இங்கு வரையிலும், தனது போதனையினாலே மக்களைக் கலகம் செய்யத் தூண்டுகிறான்” என்றார்கள்.
23:6 அதைக் கேட்ட பிலாத்து, “இவன் ஒரு கலிலேயனா?” என்றான்.
23:7 இயேசு, ஏரோதுவின் நீதிச்சட்ட அதிகாரத்துக்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்தபோது, அவன் அவரை ஏரோதுவினிடத்திற்கு அனுப்பி வைத்தான். அவ்வேளையில் ஏரோதுவும் எருசலேமுக்கு வந்திருந்தான்.
23:8 ஏரோது, இயேசுவைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டான். ஏனெனில், நீண்ட காலமாக அவன் அவரைப் பார்க்க விரும்பியிருந்தான். அவன் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்ததனால், அவரால் செய்யப்படும் சில அற்புதங்களைப் பார்க்க விரும்பினான்.
23:9 அவன் அவரிடம், அநேக கேள்விகளைக் கேட்டான். ஆனால் இயேசுவோ அவனுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை.
23:10 தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் அங்கே நின்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்கள்.
23:11 அப்போது ஏரோதுவும், அவனுடைய படைவீரரும் அவரை அவமதித்து, அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் அவருக்கு அலங்காரமான ஒரு மேலாடையை அணிவித்து, அவரைத் திரும்பவும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள்.
23:12 அன்று முதல், ஏரோதுவும் பிலாத்துவும் நண்பர்கள் ஆனார்கள். அதற்கு முன் அவர்கள் இருவரும் பகைவர்களாய் இருந்தார்கள்.
23:13 பிலாத்து, தலைமை மதகுருக்களையும் ஆளுநர்களையும் மக்களையும் ஒன்றாக அழைத்து,
23:14 அவர்களிடம், “நீங்கள் இந்த மனிதனை, மக்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டும் ஒருவனாக என்னிடம் கொண்டுவந்தீர்கள். உங்கள் முன்பாகவே இவனை விசாரித்தேன். ஆனால், இவனுக்கு விரோதமாக நீங்கள் சாட்டும் குற்றத்திற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை.
23:15 ஏரோதுவும் இவன்மேல் குற்றம் எதையும் காணவில்லை. ஏனெனில், அவர் இவனை நம்மிடத்திற்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். மரணதண்டனை பெறக் கூடிய குற்றம் எதையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவாகிறது.
23:16 எனவே நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான்.
23:17 ஏனெனில், பண்டிகையின்போது அவர்களுக்காக அவன் ஒரு கைதியை விடுதலை செய்ய வேண்டியிருந்தது.
23:18 அவர்களோ ஒரே குரலில், “இவன் வேண்டாம்! பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள்.
23:19 பரபாஸ் என்பவன், பட்டணத்தில் கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலை செய்ததற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
23:20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி, திரும்பவும் அவர்களிடம் பேசினான்.
23:21 ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்! அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
23:22 மூன்றாவது தடவையாகவும் பிலாத்து அவர்களிடம் பேசி, “ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? இவனுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஆகவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான்.
23:23 ஆனால் அவர்களோ, “அவன் சிலுவையில் அறையப்படவே வேண்டும்” என்று உரத்த சத்தமாய் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்களுடைய சத்தமே மேலோங்கியது.
23:24 எனவே பிலாத்துவும், அவர்கள் கேட்டபடியே செய்யத் தீர்மானித்தான்.
23:25 எனவே, அவர்கள் கேட்டுக் கொண்டபடி, கிளர்ச்சி செய்ததற்காகவும் கொலை செய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டிருந்த பரபாஸ் என்பவனை விடுதலை செய்தான்; இயேசுவையோ அவர்களுடைய விருப்பப்படி செய்ய ஒப்படைத்தான்.
23:26 அவர்கள் இயேசுவை அழைத்துக்கொண்டு போகையில், நாட்டுப் புறத்திலிருந்து அவ்வழியே சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவன் வந்து கொண்டிருந்தான். அவர்கள் அவனைப் பிடித்து, சிலுவையை அவன்மீது வைத்து, இயேசுவுக்குப் பின்னாக அதைச் சுமந்து போகும்படி செய்தார்கள்.
23:27 மக்கள் பெரும் கூட்டமாய் அவருக்குப் பின்னே போனார்கள். அந்த மக்கள் கூட்டத்தில், அவருக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்களும் இருந்தார்கள்.
23:28 இயேசு அவர்களைத் திரும்பிப் பார்த்து, “எருசலேம் பெண்களே, எனக்காக அழ வேண்டாம்; நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள்.
23:29 ஏனெனில், ‘கருத்தரிக்க முடியாத பெண்களும், குழந்தையை பெறாத பெண்களும், பாலூட்டாத பெண்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்று சொல்லும் காலம் வரும்.
23:30 “ ‘அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும், குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” என்றும் சொல்வார்கள்.’
23:31 ஏனெனில், மரம் பச்சையாய் இருக்கும்போதே, இப்படிச் செய்வார்களானால், அது காய்ந்து போகும்போது, என்னதான் செய்ய மாட்டார்கள்?” என்றார்.
23:32 குற்றவாளிகளான வேறு இரண்டு பேரும், மரணதண்டனைக்காக அவருடனேகூட கொண்டுபோகப்பட்டார்கள்.
23:33 அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலது பக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள்.
23:34 அப்போது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். அவர்களோ, அவருடைய ஆடைகளைச் சீட்டுப் போட்டு பங்கிட்டுக் கொண்டார்கள்.
23:35 இவைகளையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு நின்றபோது, ஆளுநர்களோ அவரை ஏளனம் செய்து, “இவன் மற்றவர்களை இரட்சித்தான்; இவன் இறைவனால் தெரிவு செய்யப்பட்ட அவருடைய மேசியாவாக இருந்தால், தன்னைத் தானே இரட்சித்துக்கொள்ளட்டும்” என்றார்கள்.
23:36 இராணுவ வீரர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் அவருக்கு புளித்த திராட்சை ரசத்தைக் கொடுத்து,
23:37 “நீ யூதருடைய அரசனாய் இருந்தால், உன்னை நீயே விடுவித்துக்கொள்” என்றார்கள்.
23:38 அவருக்கு மேலாக இருந்த ஒரு அறிவிப்புப் பலகையில் இப்படியாக எழுதப்பட்டிருந்தது: இவர் யூதருடைய அரசன்.
23:39 அங்கே தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீர் மேசியா அல்லவா? உன்னையும், எங்களையும் காப்பாற்று” என்று அவரை பழித்துரைத்தான்.
23:40 ஆனால் மற்ற குற்றவாளியோ, அவனைக் கண்டித்து, “நீ இறைவனுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் இதே தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாயே.
23:41 நாம் நியாயப்படி தண்டனை பெற்றிருக்கிறோம். நமது செயல்களுக்கேற்றதையே பெற்றிருக்கிறோம். ஆனால் இவரோ, எந்தத் தவறும் செய்யவில்லை” என்றான்.
23:42 பின்பு அவன், இயேசுவிடம், “இயேசுவே, உமது அரசில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்ளும்” என்றான்.
23:43 அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கின்றேன், இன்றைக்கே நீ என்னுடன்கூட பரதீசில் இருப்பாய்” என்றார்.
23:44 அப்போது நடுப்பகல் வேளையாயிருந்தது, பிற்பகல் மூன்று மணி வரை பூமி முழுவதையும் இருள் மூடியிருந்தது.
23:45 சூரியன் ஒளி கொடுக்கவில்லை. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது.
23:46 இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக் கொடுக்கின்றேன்” என்று சத்தமிட்டு அழைத்தார். இதைச் சொல்லிவிட்டு, அவர் தமது இறுதி மூச்சை விட்டார்.
23:47 நூற்றுக்குத் தளபதி நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான்.
23:48 இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்த மக்கள் எல்லோரும் அங்கு நடந்ததைக் கண்டபோது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.
23:49 ஆனால் அவரை அறிந்தவர்களும், கலிலேயாவில் இருந்து அவரைப் பின்பற்றி வந்த பெண்களும் தூரத்தில் நின்று இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
23:50 நியாயசபையின் உறுப்பினர்களில் ஒருவனான, யோசேப்பு என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் நல்லவனும், நீதிமானுமாய் இருந்தான்.
23:51 யூதேயாவின் ஒரு பட்டணமான, அரிமத்தியா என்ற இடத்தைச் சேர்ந்த அவன் இறைவனுடைய அரசுக்காகக் காத்திருந்தான். அவன் அவர்களுடைய தீர்மானத்திற்கோ, அவர்களுடைய செயலுக்கோ உடன்பட்டிருக்கவில்லை.
23:52 அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவினுடைய உடலைத் தரும்படி கேட்டான்.
23:53 பின்பு அவன் உடலைக் கீழே இறக்கி, அதை விலையுயர்ந்த ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கற்பாறையில் குடையப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். அக்கல்லறையில் இதுவரை எவருடைய உடலும் வைக்கப்படவில்லை.
23:54 அது சபத் ஓய்வுநாளுக்கு முந்திய நாளான ஆயத்த நாளாயிருந்தது. ஓய்வுநாளின் தொடக்கமோ நெருங்கிக் கொண்டிருந்தது.
23:55 கலிலேயாவிலிருந்து இயேசுவுடன் வந்திருந்த பெண்கள், யோசேப்புக்குப் பின்னே சென்று, கல்லறையையும், அதில் அவருடைய உடல் எப்படி கிடத்தப்பட்டது என்பதையும் பார்த்தார்கள்.
23:56 பின்பு அவர்கள் வீட்டுக்குப் போய், நறுமணப் பொருட்களையும், வாசனைத் தைலங்களையும் ஆயத்தம் செய்தார்கள். ஆனால், ஓய்வு நாளானபடியினாலே, யூத நீதிச்சட்ட கட்டளையின்படியே, அவர்கள் ஒன்றும் செய்யாதிருந்தார்கள்.