Luke 24
24:1 பின்பு, வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிப் போனார்கள்.
24:2 அங்கே கல்லறையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த கல், புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
24:3 அவர்கள் உள்ளே போனபோது, ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.
24:4 அவர்கள் அது குறித்து யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று, மின்னலைப் போல் மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டு பேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
24:5 அந்தப் பெண்களோ பயந்து போய், முகத்தைத் தரையில் பதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருப்பவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
24:6 அவர் இங்கே இல்லை, அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்:
24:7 ‘மனுமகன் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட வேண்டும்; பின்னர், மூன்றாம் நாளிலே திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
24:8 அப்போது, அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் அவர்களின் ஞாபகத்திற்கு வந்தன.
24:9 அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பி வந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொருவரிடமும், மற்றவர்களிடமும் சொன்னார்கள்.
24:10 மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்றப் பெண்களும் அப்போஸ்தலர்களுக்கு இதைச் சொன்னார்கள்.
24:11 ஆனால் அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. ஏனெனில் இவர்கள் சொன்னது அவர்களுக்கு வெறும் பிதற்றலாகத் தோன்றியது.
24:12 ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் குனிந்து உள்ளே பார்த்தபோது, அங்கே, அவரைச் சுற்றியிருந்த விலையுயர்ந்த மெல்லிய துணிகள் மட்டுமே கிடப்பதைக் கண்டு, என்ன நடந்ததோ என்று வியப்புடன் தனக்குள்ளே யோசித்துக்கொண்டு திரும்பிச் சென்றான்.
24:13 இதே நாளிலே, சீடர்களில் இரண்டு பேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து பதினொரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.
24:14 அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்துப் பேசிக் கொண்டே போனார்கள்.
24:15 இப்படியாக, அவர்கள் இந்தக் காரியங்கள் குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடவே போனார்;
24:16 ஆனால், அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.
24:17 அவர் அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து தீவிரமாக பேசிக்கொண்டு போகின்றீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன், அசைவற்று நின்றார்கள்.
24:18 அவர்களில் ஒருவனான கிலியோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் எருசலேமுக்கு வந்தவர்களில், கடந்த சில நாட்களாக அங்கு நடந்த காரியங்களைப் பற்றி அறியாத ஒரே ஒருவர் நீர்தானோ?” என்று கேட்டான்.
24:19 அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவருக்குப் பதிலாக: “நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைக் குறித்தே சொல்கின்றோம்; அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள ஒரு இறைவாக்கினராக இருந்தார்.
24:20 தலைமை மதகுருக்களும் எங்கள் ஆளுநர்களும் அவருக்கு மரணதண்டனை கொடுக்கும்படி கையளித்து, அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்;
24:21 ஆனால் நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகின்றவர் அவரே என்ற நம்பிக்கையோடு இருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
24:22 அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குப் போனார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்தார்கள்.
24:23 அங்கே அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், தாங்கள் இறைதூதர்களைக் கண்டதாகவும், அவர் உயிரோடு இருப்பதாக அந்த இறைதூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
24:24 அப்போது எங்களோடு இருந்தவர்களுள் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே இருப்பதைக் கண்டார்கள். ஆனால் இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
24:25 அப்போது இயேசு அவர்களிடம், “அறிவற்றவர்களே, இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்க முடியாதபடி, சிந்தனை குன்றியவர்களே!
24:26 மேசியா தமது மகிமைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக, அவர் இந்த வேதனைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டியிருந்ததே?” என்றார்.
24:27 பின்பு, மோசேயின் புத்தகங்கள் முதல், எல்லா இறைவாக்கினர்களின் புத்தகங்கள் வரை, வேதவசனங்கள் எல்லாவற்றிலும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்தவைகளை அவர் அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார்.
24:28 அவர்கள், தாங்கள் எதிர்நோக்கி போய்க் கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தொடர்ந்து அதற்கு அப்பால் போகின்றவர் போல தம்மைக் காட்டிக் கொண்டார்.
24:29 அப்போது அவர்கள், “நீர் எங்களுடன் தங்கும். பொழுது சாயப் போகின்றது; நேரமும் கடந்துவிட்டது” என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். எனவே அவர் அவர்களுடன் தங்குவதற்காக உள்ளே சென்றார்.
24:30 இயேசு அவர்களோடு உணவுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்திய பின், அதைத் துண்டுகளாக்கி அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
24:31 அப்போது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போனார்.
24:32 அப்போது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கிக் காட்டியபோதும் நம்முடைய உள்ளங்கள் நமக்குள்ளே சுடர்விட்டு பிரகாசித்தன அல்லவா?” என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்.
24:33 அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
24:34 அவர்கள் எல்லோரும், “ஆண்டவர் உண்மையாகவே உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்கும் காட்சியளித்துள்ளார்!” என்று சொல்லிக் கொண்டார்கள்.
24:35 அப்போது இந்த இருவரும் வழியிலே தங்களுக்கு நடந்ததையும், இயேசு அப்பத்தைத் துண்டுகளாக்கி பங்கிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படியாக அடையாளம் கண்டுகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
24:36 அவர்கள் இதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம்” என்று சொன்னார்.
24:37 அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்து போனவரின் ஆவியைக் காண்பதாக நினைத்துக் கொண்டார்கள்.
24:38 அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழுகிறது?
24:39 என்னுடைய கைகளையும் கால்களையும் பாருங்கள். இது நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கின்ற எனக்கு சதையும் எலும்புகளும் இருக்கின்றன, ஆனால் ஒரு ஆவிக்கு அப்படி இருக்காதே” என்றார்.
24:40 இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
24:41 அவர்களோ மனமகிழ்ச்சியாலும், வியப்பாலும் நிறைந்திருந்ததால், அவர்களால் அதை இன்னும் நம்ப முடியவில்லை. அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கின்றதா?” என்று கேட்டார்.
24:42 அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
24:43 அவர் அதை எடுத்து, அவர்களுக்கு முன்பாகச் சாப்பிட்டார்.
24:44 “நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்குச் சொன்னது இதுதான்: மோசேயினுடைய நீதிச்சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருப்பவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
24:45 பின்பு, வேதவசனங்களை அவர்கள் விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
24:46 இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: மேசியா வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
24:47 பாவமன்னிப்பைப் பெறுவதற்கான மனந்திரும்புதல் குறித்து, எருசலேம் தொடங்கி எல்லா இனங்களுக்கும் அவருடைய பெயரில் அறிவிக்க வேண்டும்.
24:48 இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கின்றீர்கள்.
24:49 என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் அணிவிக்கப்பட்டு வலிமை பெறும் வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
24:50 இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துக்கொண்டு போய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
24:51 இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
24:52 அப்போது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மனமகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
24:53 அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.