Library · ta

John 13

13:1 பஸ்கா பண்டிகை தொடங்க இருந்தபோது, இயேசு தாம் இந்த உலகத்தைவிட்டுப் புறப்பட்டு, பிதாவினிடத்திற்கு போகும்வேளை நெருங்கிவிட்டதை அறிந்திருந்தார். உலகத்திலே தமக்கு உரியவர்களை அன்பு செய்த அவர், கடைசி வரை அவர்களை அன்பு செய்தார். 13:2 இரவு உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. இயேசுவைக் காட்டிக் கொடுக்கும்படி, சீமோனின் மகனாகிய யூதாஸ் ஸ்காரியோத்தின் உள்ளத்தை சாத்தான் ஏற்கெனவே ஏவிவிட்டிருந்தான். 13:3 பிதா எல்லாவற்றையும் தனது வல்லமையின் கீழ் ஒப்புக்கொடுத்திருந்ததையும், தான் இறைவனிடத்திலிருந்து வந்ததையும், இறைவனிடத்திற்கே திரும்பிப் போகின்றதையும் இயேசு அறிந்திருந்தார். 13:4 எனவே அவர் உணவுப் பந்தியிலிருந்து எழுந்து, தமது மேலாடையைக் கழற்றி வைத்துவிட்டு, இடுப்பிலே ஒரு துணியைக் கட்டிக் கொண்டார். 13:5 அதன்பின், அவர் ஒரு பாத்திரத்திலே தண்ணீரை ஊற்றி, தம்முடைய சீடர்களின் கால்களைக் கழுவி, தம்முடைய இடுப்பிலே கட்டியிருந்த துணியினால் அவர்களுடைய கால்களைத் துடைக்கத் தொடங்கினார். 13:6 அவர் சீமோன் பேதுருவிடம் வந்தபோது, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப் போகின்றீரா?” என்றான். 13:7 இயேசு அதற்குப் பதிலாக, “நான் செய்வது எதுவென்று உனக்கு இப்போது புரியாது, பின்பு நீ அதைப் புரிந்துகொள்வாய்” என்றார். 13:8 அப்போது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார். 13:9 அப்போது சீமோன் பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களை மட்டுமல்லாது, என்னுடைய கைகளையும் என்னுடைய தலையையும்கூட கழுவும்!” என்றான். 13:10 அதற்கு இயேசுவோ, “குளித்தவன், தன் கால்களை மாத்திரமே கழுவ வேண்டியவனாய் இருக்கின்றான்; மற்றப்படி அவனுடைய முழு உடலும் சுத்தமாயிருக்கிறது. நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள். ஆயினும் எல்லோரும் அல்ல” என்றார். 13:11 ஏனெனில் தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவன் யார் என்று அவர் அறிந்திருந்தார். அதனாலேயே, “நீங்கள் எல்லோரும் சுத்தமானவர்கள் அல்ல” என்று சொன்னார். 13:12 அவர் அவர்களுடைய கால்களைக் கழுவி முடித்த பின், தம்முடைய உடையை அணிந்துகொண்டு, திரும்பவும் தமக்குரிய இடத்தில் உட்கார்ந்தார். பின்பு அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று உங்களுக்கு புரிகிறதா?” என்று கேட்டார். 13:13 மேலும் அவர், “நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும், ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கின்றீர்கள். நீங்கள் அப்படி அழைப்பது சரியே. ஏனெனில் நான் அவர்தான். 13:14 ஆண்டவரும் போதகருமாயிருக்கின்ற நானே உங்கள் கால்களைக் கழுவியபடியால் நீங்களும் ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவ வேண்டும். 13:15 ஏனெனில் நான் உங்களுக்குச் செய்தது போலவே, நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யவேண்டுமென்று நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்திருக்கிறேன். 13:16 நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், எந்த வேலையாளும் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல. எந்தத் தூதுவனும் தன்னை அனுப்பியவனை விடப் பெரியவன் அல்ல. 13:17 நீங்கள் இப்போது இவைகளை அறிந்திருக்கிறீர்கள். அப்படியே நீங்கள் இவைகளைச் செய்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்” என்றார். 13:18 இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நான் உங்கள் எல்லோரைக் குறித்தும் பேசவில்லை; நான் எவர்களைத் தெரிவு செய்தேன் என்று எனக்குத் தெரியும். ஆயினும் ‘என்னோடு உணவு உண்டவனே எனக்கு விரோதமாய் இருக்கின்றான்’ என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும். 13:19 “அது நிகழும் முன்பதாகவே, இப்போது நான் அதை உங்களுக்குச் சொல்கின்றேன். ஏனெனில் அது நிகழும்போது, நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள். 13:20 நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நான் அனுப்புகின்ற எவனையாவது ஒருவன் ஏற்றுக்கொண்டால், அவன் என்னை ஏற்றுக்கொள்கின்றான். யாராவது என்னை ஏற்றுக்கொண்டால் அவன் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கின்றான்” என்றார். 13:21 இயேசு இதைச் சொன்ன பின்பு, அவர் ஆவியில் கலங்கியவராய், “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுக்கப் போகின்றான்” என்று வெளிப்படையாகச் சொன்னார். 13:22 அவருடைய சீடர்களோ, அவர் யாரைக் குறித்துச் சொல்கின்றார் என்று புரியாதவர்களாய், குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்தார்கள். 13:23 இயேசுவின் சீடர்களில் அவருக்கு அன்பானவனாக இருந்த ஒருவன், உணவுப் பந்தியிலே அவரின் மார்புப் பக்கமாய் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். 13:24 சீமோன் பேதுரு அவனுக்குச் சைகை காட்டி, இயேசு யாரைக் குறித்துப் பேசுகின்றார் என்று அவரிடத்தில் கேட்கும்படி அவனுக்குச் சொன்னான். 13:25 எனவே அவன் இயேசுவின் பக்கமாய் சாய்ந்து, “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டான். 13:26 அதற்கு இயேசு, “நான் இந்த அப்பத் துண்டை பாத்திரத்தில் தோய்த்து யாருக்குக் கொடுக்கின்றேனோ, அவன் தான்” என்றார். பின்பு அந்த அப்பத் துண்டைத் தோய்த்து, சீமோனின் மகனான யூதாஸ் ஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். 13:27 யூதாஸ் அந்த அப்பத் துண்டை வாங்கிக் கொண்ட உடனே, சாத்தான் அவனுக்குள்ளே புகுந்தான். இயேசு அவனிடம், “நீ செய்யப் போகின்றதை விரைவாய்ச் செய்” என்றார். 13:28 ஆனால் இயேசு ஏன் இப்படி அவனுக்குச் சொன்னாரென்று உணவுப் பந்தியிலிருந்த ஒருவருக்கும் விளங்கவில்லை. 13:29 யூதாஸ் பணத்துக்குப் பொறுப்பாயிருந்தபடியால், பண்டிகைக்குத் தேவையானதை வாங்கும்படியோ, அல்லது ஏழைகளுக்கு எதையாவது கொடுக்கும்படியோ இயேசு அவனுக்குச் சொல்கின்றார் என்று சிலர் நினைத்தார்கள். 13:30 அப்பத்தை வாங்கிக் கொண்டதும் யூதாஸ் புறப்பட்டுச் சென்றான். அப்போது அது இரவு நேரமாயிருந்தது. 13:31 யூதாஸ் போன பின்பு இயேசு அவர்களிடம், “இப்போது மனுமகன் மகிமைப்படுகிறார்; இறைவனும் அவரில் மகிமைப்படுகிறார். 13:32 இறைவன் அவரில் மகிமைப்பட்டால், இறைவனும் மனுமகனைத் தம்மிலே மகிமைப்படுத்துவார்; அவர் உடனே அவரை மகிமைப்படுத்துவார். 13:33 “பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆயினும் நான் போகின்ற இடத்துக்கு உங்களால் வர முடியாது; இதை நான் யூதர்களுக்குச் சொன்னேன். இப்போது உங்களுக்கும் சொல்கின்றேன். 13:34 “நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கின்றேன்: ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்தது போல, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டும். 13:35 நீங்கள் இப்படி ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்” என்றார். 13:36 அப்போது சீமோன் பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகின்றீர்?” என்று கேட்டான். இயேசு அதற்கு மறுமொழியாக, “நான் போகின்ற இடத்துக்கு என்னைப் பின்தொடர்ந்து வர உன்னால் இப்போது முடியாது. ஆனால் பிறகு என்னைப் பின்தொடர்வாய்” என்றார். 13:37 அப்போது பேதுரு, “ஆண்டவரே, ஏன் என்னால் இப்போது வர முடியாது? நான் உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றான். 13:38 அதற்கு இயேசு, “உண்மையிலேயே நீ எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயோ? நான் உனக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், காலையில் சேவல் கூவுகிறதற்கு முன்னதாக நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார்.