Library · ta

John 14

14:1 “உங்கள் உள்ளம் கலங்குவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். இறைவனில் விசுவாசமாயிருங்கள்; என்னிலும் விசுவாசமாயிருங்கள். 14:2 என்னுடைய பிதாவின் வீட்டிலே அநேக உறைவிடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாதிருந்தால், உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தும்படி நான் அங்கு போகின்றேன் என்று உங்களுக்குச் சொல்லியிருப்பேனா? 14:3 நான் போய், உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்திய பின்பு, திரும்பவும் வந்து, நீங்கள் என்னுடன் இருக்கும்படி உங்களை அழைத்துச் செல்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள். 14:4 நான் போகின்ற இடத்திற்கான வழியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்றார். 14:5 தோமா இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகின்றீர் என்று எங்களுக்குத் தெரியாதே. அப்படியிருக்க, அங்கு போகும் வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான். 14:6 அதற்கு இயேசு, “வழியும், சத்தியமும், வாழ்வும் நானே. என் மூலமாய் அன்றி ஒருவனும் பிதாவிடம் வர முடியாது. 14:7 நீங்கள் உண்மையாக என்னை அறிந்திருந்தால், என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இப்பொழுதிலிருந்தே நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கின்றீர்கள்” என்றார். 14:8 அதற்குப் பிலிப்பு, “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும். அது எங்களுக்குப் போதும்” என்றான். 14:9 அப்போது இயேசு அவனிடம் சொன்னதாவது: “பிலிப்புவே, நான் இவ்வளவு காலம் உங்களோடிருந்தும், நீ இன்னும் என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் கண்டிருக்கின்றவன் பிதாவைக் கண்டிருக்கிறான். அப்படியிருக்க, ‘பிதாவை எங்களுக்குக் காண்பியும்’ என்று நீ எப்படிச் சொல்லலாம்? 14:10 நான் பிதாவில் இருக்கின்றதையும், பிதா என்னில் இருக்கின்றதையும் நீ விசுவாசிக்கவில்லையா? நான் உங்களுக்குச் சொல்கின்ற இந்த வார்த்தைகள் என்னுடையதல்ல. அவை என் பிதாவின் வார்த்தைகளே. அவர் எனக்குள் இருந்து தமது செயல்களைச் செய்கின்றார். 14:11 நான் பிதாவில் இருக்கின்றேன் என்றும், பிதா என்னில் இருக்கின்றார் என்றும் நான் சொல்லும்போது அதை நம்புங்கள்; இல்லாவிட்டால், நான் செய்த அற்புதங்களின் பொருட்டாவது, அதை நம்புங்கள். 14:12 நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், என்னில் விசுவாசம் வைக்கின்றவன், நான் செய்த செயல்களை அவனும் செய்வான். நான் என் பிதாவினிடத்திற்கு போகின்றபடியால், அவன் இவைகளைப் பார்க்கிலும் பெரிதான செயல்களையும் செய்வான். 14:13 நீங்கள் என் பெயரில் எதைக் கேட்கின்றீர்களோ, அதை நான் செய்வேன். மகனால் பிதாவுக்கு மகிமை உண்டாகும்படியாக அதைச் செய்வேன். 14:14 என்னுடைய பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன். 14:15 “நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் கொடுக்கும் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். 14:16 நான் உங்களுக்காகப் பிதாவிடம் வேண்டிக்கொள்வேன். அப்போது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி, இன்னொரு உறுதுணையாளரை உங்களுக்குக் கொடுப்பார். 14:17 அவரே உண்மையை வெளிப்படுத்தும் ஆவியானவர். இந்த உலகத்தார் அவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கின்றபடியால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் உங்களுடனும் உங்களுக்குள்ளும் இருப்பதால், நீங்களோ அவரை அறிந்திருக்கிறீர்கள். 14:18 நான் உங்களை ஆதரவற்றவர்களாக விட்டுவிட மாட்டேன். நான் உங்களிடத்தில் திரும்பவும் வருவேன். 14:19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காண மாட்டாது. ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் வாழ்வதால், நீங்களும் வாழ்வீர்கள். 14:20 அந்த நாள் வரும்போது, நான் பிதாவில் இருப்பதையும், நீங்கள் என்னில் இருப்பதையும், நான் உங்களில் இருப்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். 14:21 என்னுடைய கட்டளைகளை ஏற்று, அவைகளுக்குக் கீழ்ப்படிகின்றவர்கள் எவர்களோ, அவர்களே என்னில் அன்பாயிருக்கின்றவர்கள். என்னில் அன்பாயிருக்கின்றவர்களை பிதா அன்பு செய்வார். நானும் அவர்களில் அன்பாயிருந்து, என்னை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.” 14:22 அப்போது யூதாஸ் ஸ்காரியோத் அல்லாத மற்ற யூதாஸ் அவரிடம், “ஆண்டவரே, உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகின்றீரே, அது ஏன்?” என்று கேட்டான். 14:23 அதற்கு இயேசு, “எவனாவது என்னில் அன்பாயிருந்தால், அவன் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படிவான். என்னுடைய பிதா அவனில் அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடம் வந்து, அவனுடன் குடியிருப்போம். 14:24 என்னில் அன்பாயிராதவன் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படிய மாட்டான். நீங்கள் கேட்கின்ற இந்த வார்த்தைகள் என்னுடைய வார்த்தைகள் அல்ல; அவை என்னை அனுப்பிய பிதாவுக்குரிய வார்த்தைகள். 14:25 “நான் உங்களுடன் இருக்கும்போதே இவைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன். 14:26 ஆனால், என்னுடைய பெயரிலே பிதா அனுப்பப் போகின்ற பரிசுத்த ஆவியானவரான உறுதுணையாளர், உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்ன ஒவ்வொன்றையும் அவர் உங்களுக்கு நினைவுபடுத்துவார். 14:27 சமாதானத்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டுப் போகின்றேன்; என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கின்றேன். உலகம் கொடுக்கும் விதமாய், நான் அதைக் கொடுக்கவில்லை. உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; பயப்படவும் வேண்டாம். 14:28 “நான் உங்களைவிட்டுப் போகப் போகின்றேன் என்றும், உங்களிடத்தில் திரும்பி வருவேன் என்றும், நான் சொன்னதைக் கேட்டீர்கள். நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் பிதாவிடம் போகின்றதைக் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில், பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். 14:29 அது நிகழும் முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன். அதனால் அது நிகழும்போது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்கள். 14:30 இனிமேலும் நான் உங்களுடன் அதிகமாய் பேசப் போவதில்லை. ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதி வருகின்றான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை. 14:31 ஆயினும் நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டிருப்பதை மட்டுமே நான் செய்கின்றேன் என்றும் உலகம் அறிந்துகொள்ள வேண்டும். “எழுந்திருங்கள், இப்போது நாம் இங்கிருந்து போவோம்” என்றார்.