Library · ta

Acts 3

3:1 ஒரு நாள் பேதுருவும் யோவானும் மன்றாடுதலுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில் ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது நேரம் பிற்பகல் மூன்று மணியாயிருந்தது. 3:2 அங்கே சிலர், பிறப்பிலேயே கால் ஊனமுற்ற ஒரு மனிதனை அலங்காரவாசல் என அழைக்கப்படும் ஆலய வாசலுக்குச் சுமந்துகொண்டு வந்தனர். ஆலய முற்றத்திற்குள் போகின்றவர்களிடம், பிச்சை கேட்கும்படி ஒவ்வொரு நாளும் அவனை அங்கே வைப்பது வழக்கம். 3:3 பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குள் போவதை அவன் கண்டபோது, அவர்களிடம் பணம் கேட்டான். 3:4 பேதுரு அவனை உற்று நோக்கிப் பார்த்தான். யோவானும் அப்படியே அவனைப் பார்த்தான். பின்பு பேதுரு அவனிடம், “எங்களைப் பார்!” என்றான். 3:5 அப்போது அந்த மனிதன், அவர்களிடம் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து, தனது கவனத்தை அவர்கள் பக்கமாகத் திருப்பினான். 3:6 அப்போது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான். 3:7 பின்பு அவனது வலது கையைப் பிடித்து தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பலமடைந்தன. 3:8 அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதன்பின் அவன் நடந்தும் துள்ளியும் இறைவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குச் சென்றான். 3:9 அவன் நடப்பதையும், இறைவனைத் துதிப்பதையும் எல்லா மக்களும் கண்டபோது, 3:10 இவனே ஆலயத்தின் அலங்காரவாசல் என அழைக்கப்படும் வாசல் அருகே இருந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தவன் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவனுக்கு நடந்ததைக் குறித்து அவர்கள் திகைத்து வியப்புற்றார்கள். 3:11 அவன் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்கையில், மக்கள் எல்லோரும் வியப்படைந்தவர்களாய், சாலொமோனின் மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அவர்களிடம் ஓடி வந்தார்கள். 3:12 இதைப் பேதுரு கண்டபோது, அவர்களிடம், “இஸ்ரயேல் மனிதரே! நீங்கள் ஏன் இதைக் கண்டு அதிசயப்படுகிறீர்கள்? நாங்கள் சொந்த வல்லமையினாலோ, இறைபக்தியினாலோ இந்த மனிதனை நடக்கச் செய்தோமா? இல்லையே! அப்படியிருக்க, ஏன் எங்களை இப்படிப் பார்க்கின்றீர்கள்? 3:13 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான நமது தந்தையரின் இறைவன், தமது ஊழியரான இயேசுவை மகிமைப்படுத்தினார். பிலாத்து அவரை விடுதலை செய்யத் தீர்மானித்த போதிலும், நீங்களோ அவரைக் கொலை செய்யும்படி கையளித்து, பிலாத்துவின் முன்பாக அவரை நிராகரித்தீர்கள். 3:14 பரிசுத்தரும், நீதிமானுமாகிய அவரை நீங்கள் நிராகரித்து, மாறாக ஒரு கொலைகாரனை உங்களுக்காக விடுதலை செய்யும்படி நீங்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டீர்கள். 3:15 வாழ்வின் அதிபதியை நீங்கள் கொலை செய்தீர்கள். ஆனால் இறைவனோ, அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். நாங்கள் இதற்குச் சாட்சிகளாய் இருக்கின்றோம். 3:16 இயேசுவின் பெயரிலுள்ள விசுவாசத்தினாலேயே நீங்கள் அறிந்த இந்த மனிதன், நீங்கள் காண்கின்றபடி பலமடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும், அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே, நீங்கள் அனைவரும் காண்கின்றபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது. 3:17 “சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவர்களும், உங்கள் அறியாமையினாலேயே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும். 3:18 ஆனாலும், தமது மேசியா துன்பங்களை அனுபவிப்பார் என அனைத்து இறைவாக்கினர்கள் மூலமாகவும் இறைவன் முன்னறிவித்ததை, அவர் இவ்விதமாகவே நிறைவேற்றினார். 3:19 ஆகவே, மனந்திரும்பியவர்களாக இறைவனிடம் திரும்புங்கள். அப்போது உங்கள் பாவங்கள் கழுவப்படும், நீங்கள் புத்துணர்வடையும் காலங்கள் கர்த்தரிடமிருந்து உங்களுக்கு வரும். 3:20 அவர் உங்களுக்காக ஏற்படுத்திய மேசியாவாகிய இயேசுவையும் உங்களிடம் அனுப்புவார். 3:21 இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர் மூலமாக, வெகு காலத்திற்கு முன்பே வாக்குறுதி அளித்தபடி, அவர் எல்லாவற்றையும் மீண்டும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை மேசியாவாகிய இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும். 3:22 ஏனெனில் ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு இறைவாக்கினரை உங்களுக்காக உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார். அவர் சொல்வது அனைத்தையும் நீங்கள் கேட்க வேண்டும். 3:23 அவர் சொல்வதைக் கேட்காத எவனும், தன் மக்கள் மத்தியில் இருந்து முற்றுமாய் நீக்கப்படுவான்’ என்று மோசே சொல்லியிருக்கின்றாரே. 3:24 “சாமுவேல் தொடங்கி, அவருக்குப் பின் வந்த எல்லா இறைவாக்கினரும், இந்த நாட்களையே முன்னறிவித்தார்கள். 3:25 நீங்களே இறைவாக்கினருக்கும், உங்கள் தந்தையருடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கும் உரிமையாளர்கள். ஏனெனில் இறைவன் ஆபிரகாமிடம், ‘உனது வழித்தோன்றலின் மூலமாக, பூமியிலுள்ள மக்களினத்தார் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’ என்று சொன்னாரே. 3:26 எனவே, இறைவன் தமது ஊழியக்காரனான இயேசுவை உயிருடன் எழுப்பியபோது, உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திருப்பி, உங்களை ஆசீர்வதிக்கும்படி, முதன் முதலாக அவரை உங்களிடம் அனுப்பினார்” என்றான்.