Acts 4
4:1 பேதுருவும் யோவானும் மக்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கையில், மதகுருக்களும் ஆலயக் காவலர் தலைவனும் சதுசேயரும் வந்தார்கள்.
4:2 இயேசுவில் இறந்தோருக்கு உயிர்த்தெழுதல் உண்டென்று, அப்போஸ்தலர்கள் மக்களுக்கு போதித்து பிரசித்தப்படுத்தியதன் காரணமாக, அவர்கள் மிகவும் எரிச்சலடைந்தார்கள்.
4:3 அவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்து, மாலை நேரமாய் இருந்ததால் அவர்களை மறுநாள் வரைக்கும் சிறையில் போட்டார்கள்.
4:4 ஆனால், அவர்களுடைய வார்த்தையைக் கேட்ட பலர் விசுவாசித்தார்கள். விசுவாசித்த ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம் பேராய் இருந்தார்கள்.
4:5 மறுநாளிலே ஆளுநர்களும், சமூகத் தலைவர்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் எருசலேமில் சந்தித்தார்கள்.
4:6 தலைமை மதகுருவாகிய அன்னாவும் அங்கே இருந்தான். காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோருடன், பிரதம மதகுருவின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் பலரும் அங்கே இருந்தார்கள்.
4:7 அவர்கள் பேதுருவையும் யோவானையும் தங்களுக்கு முன் கொண்டுவரும்படி செய்து, அவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். “எந்த வல்லமையினால் அல்லது எந்தப் பெயரினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.
4:8 அப்போது பேதுரு பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவர்களிடம், “ஆளுநர்களே, சமூகத் தலைவர்களே,
4:9 கால் ஊனமுற்ற ஒருவனுக்கு இரக்கம் காட்டிய ஒரு செயல் குறித்தும், அவன் எப்படிக் குணமானான் என்று விளக்கம் தரவும் இன்று நாங்கள் விசாரிக்கப்படுகிறோம் என்றால்,
4:10 நீங்களும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அறிய வேண்டியது இதுவே: நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் பெயரினாலேயே இந்த மனிதன் உங்களுக்கு முன்பாகக் குணமடைந்தவனாய் நிற்கிறான். அவரையே நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இறைவனோ, அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்.
4:11 அப்படிப்பட்டவராகிய இயேசுவே, “ ‘கட்டடம் கட்டுகின்றவர்களாகிய உங்களால் நிராகரிக்கப்பட்ட கல், அவரே இன்று மூலைக்குத் தலைக்கல்லானவர்.’
4:12 இயேசுவிலேயன்றி, வேறு எவரிலும் இரட்சிப்பு இல்லை. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படியாக, வானத்தின் கீழ் மனிதரிடையே அவருடைய பெயரன்றி, வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றான்.
4:13 பேதுரு, யோவான் ஆகிய இருவருடைய துணிச்சலையும், இவர்கள் அதிக கல்வி கற்காத சாதாரண மனிதர்கள் என்பதையும் தெரிந்து கொண்டபோது, அவர்கள் மலைத்துப் போனார்கள். இவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
4:14 ஆனால் குணமடைந்த மனிதனும் அங்கு இவர்களுடன் நிற்கின்றதை அவர்கள் கண்டதால் அவர்களால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.
4:15 எனவே, நியாயசபையிலிருந்து பேதுருவையும் யோவானையும் வெளியே போகும்படி உத்தரவிட்ட பின், அவர்கள் இந்த விடயத்தைக் குறித்து ஒருவரோடொருவர் கலந்துரையாடினார்கள்:
4:16 “நாம் இவர்களுக்கு என்ன செய்யலாம்? இவர்கள் ஒரு பெரிய அற்புத அடையாளத்தை செய்துள்ளார்கள் என்பதை எருசலேமில் வாழ்கின்ற எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். அதை நாமும் மறுக்க முடியாது.
4:17 ஆனால், இது தொடர்ந்தும் மக்களிடையே பரவாதபடி தடை செய்வதற்கு, ‘இந்தப் பெயரிலே இவர்கள் இனிமேல் யாருடனும் பேசக் கூடாது’ என்று நாம் இவர்களை எச்சரிக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டார்கள்.
4:18 எனவே அவர்கள் திரும்பவும் பேதுருவையும் யோவானையும் உள்ளே அழைத்து, “இயேசுவின் பெயரால் எதையும் பேசவோ, போதிக்கவோ கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
4:19 ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களிடம், “நாங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், உங்களுக்குக் கீழ்ப்படிவது இறைவனுடைய பார்வையில் சரியானதோ என்று நீங்களே நிதானித்துப் பாருங்கள்.
4:20 நாங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் பேசாமல் இருக்க எங்களால் முடியாது” என்றார்கள்.
4:21 நடந்த அற்புதத்திற்காக மக்கள் அனைவரும் இறைவனைத் துதித்துக் கொண்டிருந்தபடியால், இவர்களை எப்படிக் கண்டிப்பது என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் திரும்பவும் பயமுறுத்திவிட்டு, பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள்.
4:22 ஏனெனில், அற்புதமாய் குணமடைந்த அந்த மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
4:23 பேதுருவும் யோவானும் விடுதலை செய்யப்பட்டதும், தங்களுடைய குழுவினரிடம் திரும்பிப் போய் தலைமை மதகுருக்களும் சமூகத் தலைவர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
4:24 அவர்கள் இதைக் கேட்டதும் ஒன்றாகத் தம் குரலை உயர்த்தியவர்களாக இறைவனை நோக்கி: “எல்லாம் வல்ல கர்த்தாவே, நீரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர்.
4:25 நீர் பரிசுத்த ஆவியானவர் மூலமாக உமது ஊழியரும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது: “ ‘இனங்கள் ஏன் கொதித்து எழுகின்றன? மக்கள் ஏன் வீணாகப் பயனற்ற சூழ்ச்சி செய்கின்றார்கள்?
4:26 பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். ஆளுநர்களும்கூட, கர்த்தருக்கு விரோதமாகவும் அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடுகிறார்கள்.’
4:27 நீர் அபிஷேகம் செய்த உமது பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராய் சூழ்ச்சி செய்வதற்கென, இந்த நகரத்தில் ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் யூதரல்லாத மக்களுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் ஒன்றுசேர்ந்தார்களே.
4:28 ஆனாலும், என்ன நடக்க வேண்டுமென உம்முடைய வல்லமையின்படியும் திட்டத்தின்படியும், நீர் முன்னதாகவே தீர்மானித்ததையே அவர்கள் செய்தார்கள்.
4:29 இப்போதும் கர்த்தாவே! அவர்களுடைய பயமுறுத்தல்களைக் கவனத்தில் கொள்வீராக; உமது வார்த்தையை அதிக துணிவுடன் பேசுவதற்கு, உமது ஊழியக்காரருக்கு ஆற்றலைக் கொடுத்திடுவீராக.
4:30 உமது பரிசுத்த ஊழியரான இயேசுவின் பெயரினால் குணமாக்குவதற்கும், அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதற்கும் உமது வல்லமையை செயற்படுத்துவீராக ” என்று மன்றாடினார்கள்.
4:31 அவர்கள் மன்றாடி முடிந்ததும், அவர்கள் கூடியிருந்த இடம் முழுவதும் அதிர்ந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, இறைவனுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசினார்கள்.
4:32 எல்லா விசுவாசிகளும் இருதயத்திலும் மனதிலும் ஒரே சிந்தனை உடையவர்களாய் இருந்தார்கள். ஒருவருமே தங்களுடைய சொத்துக்களைத் தங்களுடையது என்று உரிமை கோரவில்லை. ஆனால் அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாய் பகிர்ந்து கொண்டார்கள்.
4:33 ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து, அப்போஸ்தலர்கள் மிகுந்த வல்லமையுடன் சாட்சி கொடுத்து வந்தார்கள். அவர்கள் எல்லோர் மேலும் மிகுந்த கிருபை இருந்தது.
4:34 அவர்களுக்குள்ளே குறைவுள்ளவர்களென எவரும் இருக்கவில்லை. ஏனெனில் சொந்த நிலங்களையும் வீடுகளையும் கொண்டிருந்தவர்கள், காலத்திற்குக் காலம் அவற்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து,
4:35 அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். அது அவரவர் தேவைக்கு ஏற்றபடி, தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
4:36 சீப்புரு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்னும் ஒரு லேவியன் இருந்தான். அப்போஸ்தலர்கள் அவனைப் பர்னபா என அழைத்தார்கள். பர்னபா என்றால், ஊக்குவிக்கும் மகன் என்று அர்த்தமாகும்.
4:37 இவன் தனக்குச் சொந்தமான வயலை விற்று, பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான்.