Library · ta

Romans 10

10:1 பிரியமானவர்களே, இஸ்ரயேலர் மீட்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய இருதயத்தின் ஆசையும் நான் இறைவனிடம் ஏறெடுக்கும் மன்றாடுதலுமாய் இருக்கின்றது. 10:2 இறைவனைக் குறித்த வைராக்கியம் அவர்களுக்கு இருந்தாலும், அது அவர்கள் உண்மையை உறுதியாகப் புரிந்து கொண்டதால் வந்த ஒன்றல்ல. 10:3 ஏனெனில், இறைவனின் நீதிமானாக்கும் முறைமையை அவர்கள் புரிந்துணர்ந்துகொள்ளாதவர்களாக, தாங்களே தங்களை நீதிமானாக்கிக்கொள்ள முயற்சிப்பதால், அவர்கள் இறைவனின் நீதிமானாக்கும் முறைமைக்குக் கட்டுப்படாதவர்களாக இருக்கின்றார்கள். 10:4 ஏனென்றால் விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் நீதிமானாகும்படி, கிறிஸ்துவே நீதிச்சட்டத்தின் முடிவு. 10:5 நீதிச்சட்டத்தின்படி வாழ்ந்து நீதிமானாக்கப்படுவதைக் குறித்து மோசே இப்படிச் சொல்கிறார்: “ஒருவர் நீதிச்சட்டத்தின்படி வாழ்ந்தால், சட்டம் அவருக்கு வாழ்வளிக்கும்.” 10:6 ஆனால் விசுவாசத்தின் ஊடாக நீதிமானாக்கப்படுவதைக் குறித்தோ வேதவசனத்தில் இவ்விதமாய் சொல்லப்படுகிறது: “யார் பரலோகத்துக்கு ஏறிச் செல்வார்?” (அதாவது கிறிஸ்துவைக் கீழே அழைத்து வருவதற்காக) என்று உன் இருதயத்தில் யோசிக்காதே. 10:7 அல்லது, “யார் பாதாளத்துக்குள்ளே இறங்கிச் செல்வார்?” (அதாவது கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து எழுப்பி மேலே அழைத்து வருவதற்காக) என்றும் யோசிக்காதே. 10:8 வேதவசனம் உண்மையில் என்ன சொல்கின்றது? “இறைவனின் வார்த்தை உன் அருகே உள்ளது, அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கின்றது” என்கிறது. அந்த விசுவாசத்தின் வார்த்தையைத்தான் நாங்கள் பிரசங்கிக்கிறோம். 10:9 அதாவது, “இயேசுவே ஆண்டவர்” என்று உங்கள் வாயினால் அறிவித்து, இறைவன் அவரை மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பினார் என்று உங்கள் இருதயத்தில் விசுவாசித்தால் நீங்கள் மீட்கப் படுவீர்கள். 10:10 உங்கள் இருதயத்தில் விசுவாசித்து நீதிமானாக்கப்படுகிறீர்கள். உங்கள் வாயினால் ஒப்புக்கொண்டு அறிவித்து மீட்கப்படுகிறீர்கள். 10:11 “அவர்மீது விசுவாசம் வைக்கின்ற எவரும் வெட்கத்துக்குள்ளாவதில்லை” என வேதவசனம் சொல்கின்றது. 10:12 ஏனெனில் யூதருக்கும் யூதரல்லாதவருக்கும் இடையில் வேறுபாடு இல்லை. ஒரே இறைவனே எல்லோருக்கும் இறைவனாய் இருக்கின்றபடியால் அவரை அழைக்கின்ற அனைவருக்கும் அவருடைய ஆசீர்வாதங்களைத் தாராளமாக வழங்குகிறார். 10:13 அதனால், “கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற யாவரும் மீட்கப்படுவார்கள்” என்று எழுதியிருக்கிறது. 10:14 ஆனால் தாங்கள் நம்பிக்கை வைக்காத ஒருவரிடம் தம்மை மீட்குமாறு அவர்கள் அழைப்பு விடுக்கக் கூடுமோ? இதுவரை அவரைப்பற்றி கேள்விப்படவே இல்லையெனில், எப்படி அவர்மீது நம்பிக்கை வைப்பார்கள்? எவராவது அவர்களுக்கு செய்தியை பிரசங்கிக்காவிட்டால் அவர்கள் அதைக் கேள்விப்படுவதும் எப்படி? 10:15 பிரசங்கிப்பவர்கள் அனுப்பப்படாவிட்டால், அவர்கள் எப்படி பிரசங்கிப்பார்கள்? அதனாலேயே, “நற்செய்தியைக் கொண்டுவருகின்றவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவை” என்று எழுதப்பட்டிருக்கிறது. 10:16 ஆனால் கேட்டவர்கள் எல்லோரும் நற்செய்திக்குக் கீழ்ப்படியவில்லை. ஆகவேதான் ஏசாயா, “கர்த்தாவே, எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?” என்றார். 10:17 எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமாக விசுவாசம் வருகின்றது. அவர்கள் கேட்டது பிரசங்கிக்கப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தையின் மூலமாக வருகின்றது. 10:18 அப்படியானால் இஸ்ரயேலர் நற்செய்தியைக் கேள்விப்படவில்லையா என்று நான் கேட்கின்றேன்? ஆம், நிச்சயமாகவே அவர்கள் கேள்விப்பட்டார்கள். ஏனென்றால் வேதவசனம் இறைவனின் செய்தியைப்பற்றி, “செய்தியை கொண்டுவருகின்றவர்களின் குரல் பூமி எங்கும் சென்றது. அவர்களுடைய வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் சென்றன” என்கிறது. 10:19 இஸ்ரயேலர்கள் அதை புரிந்துகொள்ளவில்லையா? என நான் கேட்கின்றேன். “ஒரு இனமாகக் கருதப்படாதவர்களைக்கொண்டு, நான் உங்களுக்கு எரிச்சலூட்டுவேன்; புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாத ஒரு இனத்தைக்கொண்டு, நான் உங்களுக்குக் கோபமூட்டுவேன்” என்று இறைவன் மோசேயின் ஊடாகச் சொல்கின்றார். 10:20 “என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள். என்னைப் பற்றிக் கேட்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன்” என இறைவன் சொன்னதை ஏசாயா துணிவுடன் சொல்கின்றார். 10:21 ஆனால் இஸ்ரயேலரைக் குறித்தோ, “கீழ்ப்படியாத, பிடிவாதமுள்ள மக்களை நோக்கி, நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்” என்று இறைவன் சொன்னதையே அவர் அறிவித்தார்.