Library · ta

Romans 11

11:1 இறைவன் தம்முடைய மக்களான இஸ்ரயேலரை நிராகரித்துவிட்டாரா என நான் கேட்கின்றேன்? அப்படி இல்லை. ஏனென்றால் நானும் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த, ஆபிரகாமின் சந்ததியில் வந்த இஸ்ரயேலனே. 11:2 இறைவன் தாம் முன்பே அறிந்த தம்முடைய மக்களைக் கைவிடவில்லை. எலியாவைப்பற்றி வேதவசனம் என்ன சொல்கின்றது என்றும், அவர் எவ்விதம் இஸ்ரயேலுக்கு விரோதமாக இறைவனை நோக்கி மன்றாடி வேண்டிக் கொண்டார் என்றும் அறியாதிருக்கிறீர்களா? 11:3 அவர், “கர்த்தாவே அவர்கள் உம்முடைய இறைவாக்கினரைக் கொலை செய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துவிட்டார்கள். நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன். அவர்கள் என்னையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்” என்றார். 11:4 அதற்கு இறைவன், அவருக்குக் கூறிய பதில் என்ன? “இல்லை, எஞ்சியிருப்பது நீ மட்டுமல்ல; பாகாலுக்கு முன்பாக முழந்தாழிடாத, ஏழாயிரம் பேரை அவர்களுக்குள் நான் எனக்கென்று வைத்திருக்கிறேன்” என்றார். 11:5 அப்படியே தற்காலத்திலும், கிருபையினால் தெரிவு செய்யப்பட்ட இஸ்ரயேலர்களில் சிலர் எஞ்சியிருக்கின்றார்கள். 11:6 அவர்கள் தெரிவு செய்யப்பட்டது கிருபையினால் என்றால் அது அவர்களது நல்ல செயல்களினால் நடந்தது அல்லவே. நல்ல செயல்களால் அது நடந்ததென்றால் கிருபையானது உண்மையான கிருபையாக இராதே. 11:7 நடந்தது என்ன? இஸ்ரயேலர்கள் ஆர்வத்துடன் தேடியதை அடையத் தவறினார்கள். ஆனால் அவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் அதைப் பெற்றுக்கொண்டார்கள். மற்றவர்களின் மனங்களோ கடினமாக்கப்பட்டன. 11:8 எழுதியிருக்கின்றபடி, “இந்த நாள்வரை, இறைவன் அவர்களுக்கு ஒரு மந்தமுள்ள ஆவியையும், காண முடியாத கண்களையும், கேட்க முடியாத காதுகளையும் கொடுத்தார்.” 11:9 தாவீது இவர்களைக் குறித்தே, “அவர்களுடைய விருந்தே அவர்களைச் சிக்க வைக்கும் கண்ணிப் பொறியாகவும், அவர்கள் தடுக்கி விழும் கல்லாகவும், அவர்களது தண்டனையாகவும் மாறட்டும். 11:10 அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்களை இருளடையச் செய்து, அவர்களுடைய முதுகு எந்நேரமும் சுமையால் கூனிப் போகச் செய்யும்” என்றார். 11:11 அவர்கள் தடுக்கி வீழ்ந்தது ஒரு மீள முடியாத வீழ்ச்சியா என நான் கேட்கின்றேன்? இல்லவே இல்லை. அவர்களின் நெறி மீறுதலினாலே யூதரல்லாதவர்களுக்கு மீட்பு வந்தது. இது இஸ்ரயேலர்கள் பொறாமை அடைவதற்காகவே நடந்தது. 11:12 இஸ்ரயேலர்களுடைய மீறுதல் உலகத்திற்கு ஆசீர்வாதமாயும், அவர்களுடைய இழப்பு யூதரல்லாத மக்களுக்கு ஆசீர்வாதமாயும் இருக்குமானால், அவர்களுடைய முழுமையான உள்ளடக்கம் இன்னும் எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கும். 11:13 இப்போது யூதரல்லாதவர்களாகிய உங்களோடு நான் பேசுகின்றேன். நான் யூதரல்லாத மக்களிடம் அனுப்பப்பட்ட அப்போஸ்தலனாய் இருப்பதால் என்னுடைய ஊழியத்தைக் குறித்துப் பெருமிதம் அடைகிறேன். 11:14 அதன்மூலமாக எப்படியாவது இஸ்ரயேலர்கள் சிலருடைய பொறாமையைத் தூண்டி, அவர்களை காப்பாற்றும் நல்ல எதிர்பார்ப்பு எனக்குண்டு. 11:15 ஏனெனில் இஸ்ரயேலர்கள் நற்செய்தியை நிராகரித்தது உலகத்தின் ஒப்புரவாக்குதலுக்கு வழிவகுத்ததென்றால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வது மரணித்தவர் உயிர்த்தெழுவது போல் இருக்குமல்லவா? 11:16 பிசைந்த மாவிலிருந்து எடுக்கப்பட்டு முதற்பலனாக அர்ப்பணிக்கப்பட்ட சிறிதளவு மாவானது பரிசுத்தமானது எனின் பிசைந்த மாவு முழுவதுமே பரிசுத்தமானதே. ஒரு மரத்தின் வேர் பரிசுத்தமானதெனின் அதன் கிளைகளும் பரிசுத்தமானவையே. 11:17 நல்ல ஒலிவ மரத்திலிருந்து சில கிளைகள் முறித்தெறியப்பட்டு, அதற்குப் பதிலாகக் காட்டு ஒலிவ மரத்தின் தளிர்களாகிய நீங்கள், எஞ்சிய கிளைகளிடையே ஒட்டு மரமாய் இணைக்கப்பட்டீர்கள். அதனால், இப்போது நல்ல ஒலிவ மரத்தின் வேரிலிருந்து வரும் சாரத்திலே நீங்களும் ஊட்டம் பெறுகிறீர்கள். 11:18 எனவே நீங்கள் உங்களை மற்ற கிளைகளோடு ஒப்பிட்டு பெருமை அடையக் கூடாது. அப்படி நீங்கள் பெருமைப்பட்டால் வேருக்கு ஊட்டமளிக்கும் ஆதரவை கொடுக்கின்றவர்கள் நீங்கள் அல்ல, மாறாக வேரே உங்களுக்கு ஊட்டமளிக்கும் ஆதரவு என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். 11:19 “நாங்கள் ஒட்ட வைக்கப்படும்படியாக அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டன” என்று நீங்கள் சொல்லலாம். 11:20 உண்மைதான், ஆனால் அவர்கள் விசுவாசிக்காத காரணத்தினால்தான் முறித்து எறியப்பட்டார்கள். நீங்களோ விசுவாசித்ததனாலே மட்டுமே நிலைத்து நிற்கிறீர்கள். எனவே நீங்கள் பெருமைகொள்ளாமல் பயத்துடன் வாழுங்கள். 11:21 இறைவன் இயற்கையான கிளைகளையே முறித்து எறிந்தாரெனில் உங்களை அவர் தப்ப விடுவது எப்படி? 11:22 ஆகவே இறைவனுடைய தயவையும், தீவிர கண்டிப்பையும் நன்கு கவனியுங்கள். அவர் வழிவிலகி வீழ்ந்தவர்கள் மேல் தீவிர கண்டிப்பையும், உங்கள் மேலோ தயவையும் காட்டுகிறார். அவருடைய தயவில் நீங்கள் தொடர்ந்து நிலைத்திராவிட்டால் உங்களையும் அவர் அகற்றி விடுவார். 11:23 இஸ்ரயேலர் தங்கள் விசுவாசம் அற்ற வழியில் தொடர்ந்து செல்லாத நிலைக்கு வரும்போது, அவர்களும் மீண்டும் மரத்தோடு கிளைகளாக ஒட்டப்படுவார்கள். இறைவன் அவர்களைத் திரும்பவும் ஒட்ட வைக்க வல்லவராய் இருக்கின்றார். 11:24 இயற்கையான காட்டு ஒலிவ மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட உங்களை, தோட்டத்தில் வளர்க்கும் ஒலிவ மரத்தில் இயற்கைக்கு மாறாக இறைவன் ஒட்ட வைத்தார் எனில், இயற்கையான கிளைகளைத் திரும்பவும் தங்கள் சொந்த ஒலிவ மரத்திலே ஒட்ட வைப்பது எவ்வளவு எளிதானது! 11:25 பிரியமானவர்களே, நீங்கள் உங்களை அறிவாளிகள் என்று எண்ணாமல், இந்த மறைபொருளை அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். யூதரல்லாத விசுவாசிகளிலிருந்து முழுத் தொகையான மக்கள் வந்து சேரும் வரையில், இஸ்ரயேலர்களில் ஒரு பகுதியினர் உள்ளத்தில் கடினப்பட்டிருப்பார்கள். 11:26 இவ்விதமாய் எழுதியிருக்கின்றபடி எல்லா இஸ்ரயேலரும் மீட்கப்படுவார்கள்: “மீட்கின்றவர் சீயோனிலிருந்து வந்து, யாக்கோபின் இறை பற்றற்ற நிலையை நீக்கிவிடுவார். 11:27 நான் அவர்களுடைய பாவங்களை நீக்கி விடும்போது, இதுவே நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை.” 11:28 நற்செய்தியைப் பொறுத்தவரையில், உங்கள் பொருட்டு அவர்கள் பகைவராய் இருக்கின்றார்கள். ஆனால் இறைவனின் கிருபைத் தெரிவினாலும், அவர்களது முற்பிதாக்கள் பொருட்டும் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள். 11:29 இறைவனின் அழைப்பும் வரங்களும் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாதவை. 11:30 முன்பு நீங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, இஸ்ரயேலரின் கீழ்ப்படியாமையினால் நீங்கள் இரக்கம் பெற்றிருக்கிறீர்கள். 11:31 அதுபோலவே இஸ்ரயேலரும் இப்போது கீழ்ப்படியாமல் இருக்கின்றார்கள். இறைவன் உங்களுக்குக் காண்பித்த இரக்கத்தினால் அவர்களும் இரக்கம் பெறுவார்கள். 11:32 ஏனெனில் இறைவன் எல்லா மனிதர் மேலும் இரக்கம் காட்டும்படி, எல்லா மனிதரையும் அவர்களது கீழ்ப்படியாமையின் தண்டனையில் கட்டி வைத்துள்ளார். 11:33 ஆ! இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் எல்லை எவ்வளவு ஆழமானது! அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறிய முடியாதவை. அவருடைய வழிகளோ கண்டுபிடிக்க முடியாதவை. 11:34 “கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?” 11:35 “இறைவன் தனக்குத் திருப்பிக் கொடுக்கும்படி, இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” 11:36 எல்லாமே அவரிடமிருந்து வந்தவை, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.