Library · ta

Romans 12

12:1 ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, நான் இறைவனுடைய இரக்கத்தைக்கொண்டு, உங்களை கேட்டுக்கொள்கின்றதாவது, உங்கள் உடல்களை பரிசுத்தமும், இறைவனுக்குப் பிரியமான உயிருள்ள பலியாகவும் ஒப்புக்கொடுங்கள். இதுவே உங்களுடைய உண்மையான ஆவிக்குரிய வழிபாடு. 12:2 இந்த உலகத்தின் நடைமுறைகளுக்கு ஒத்து நடவாமல், சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகின்றதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் பகுத்தறியும்படி, உங்கள் மனம் புதுப்பிக்கப்படுவதால் முழுமையாக உருமாற்றம் அடையுங்கள். 12:3 இறைவன் எனக்களித்த கிருபையின்படி உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்கின்றதாவது: அளவுக்கதிகமாய் உங்களைக் குறித்து உயர்வாய் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறைவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின் அளவின்படியே, மனத்தெளிவுடன் உங்களைக் குறித்து மதிப்பீடு செய்துகொள்ளுங்கள். 12:4 நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் இருக்கின்றது, அதில் பல அங்கங்கள் இருக்கின்றன. இந்த அங்கங்கள் எல்லாம் ஒரே வேலையைச் செய்வதில்லை. 12:5 அதுபோலவே கிறிஸ்துவுக்குள் நாம் பலராய் இருந்தாலும், ஒரே உடலாகின்றோம். நாம் உடலின் பல்வேறு அங்கங்களாக இருந்து, ஒருவருக்கு ஒருவர் சொந்தமாயிருக்கிறோம். 12:6 நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின்படியே நாம் வித்தியாசமான வரங்களைப் பெற்றவர்களாய் இருக்கின்றபடியால், இறைவாக்கு உரைப்பதற்கு ஒருவன் வரம் பெற்றிருந்தால், அவன் தன்னுடைய விசுவாசத்தின் அளவுக்கு ஏற்றபடியே அதைப் பயன்படுத்தட்டும். 12:7 அப்படியே சேவை செய்கின்றவன் சேவை செய்வதிலும், போதிக்கின்றவன் போதிப்பதிலும், 12:8 உற்சாகப்படுத்துகின்றவன் உற்சாகப்படுத்துவதிலும் நிலைத்திருக்கட்டும்; மற்றவர்களுடைய தேவைகளுக்குக் கொடுத்து உதவுகின்றவன் தாராளமாய் கொடுக்கட்டும்; தலைமைத்துவத்தில் இருப்பவன் ஆர்வத்துடன் நிர்வாகத்தைச் செய்யட்டும்; இரக்கம் காண்பிப்பவன் அதை முகமலர்ச்சியுடன் செய்யட்டும். 12:9 உங்கள் அன்பு உண்மையானதாய் இருக்க வேண்டும். தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொள்ளுங்கள். 12:10 ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள். ஒவ்வொருவரும் உங்களைவிட மற்றவர்களை உயர்வானவர்களாகக் கனம் பண்ணி நடவுங்கள். 12:11 ஆர்வம் குன்ற இடங்கொடாமல் ஆவியில் அனல் கொண்டவர்களாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். 12:12 எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியாய் இருங்கள், துன்பங்களில் பொறுமையாய் இருங்கள், மன்றாடுவதில் உறுதியாய்த் தரித்திருங்கள். 12:13 தேவையிலிருக்கின்ற இறைவனுடைய மக்களுடன் உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள், உபசரிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 12:14 உங்களைத் துன்புறுத்துகின்றவர்களை ஆசீர்வதியுங்கள். அவர்களைச் சபியாதிருங்கள். 12:15 மகிழ்ச்சியாய் இருக்கின்றவர்களுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; அழுகின்றவர்களுடனே அழுங்கள். 12:16 ஒருவரோடு ஒருவர் ஒரே மனதுள்ளவர்களாய் வாழுங்கள். பெருமைகொள்ளாமல், தாழ்ந்தவர்களுடனும் நட்புறவு கொள்ளுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனப் பெருமிதம் கொள்ளாதிருங்கள். 12:17 யாராவது உங்களுக்குத் தீமை செய்தால், அதற்குப் பதிலாக, நீங்களும் தீமை செய்ய வேண்டாம். எல்லா மனிதருடைய பார்வையிலும் சரியானதையே செய்யும்படி கவனமாயிருங்கள். 12:18 இயலுமானால் உங்களால் முடிந்தவரை எல்லோருடனும் சமாதானமாய் இருங்கள். 12:19 என் அன்பானவர்களே, பழிக்குப் பழிவாங்காமல் இறைவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடங்கொடுங்கள். ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதில் செய்வேன் என்று கர்த்தர் சொல்கின்றார்” என்று எழுதியிருக்கின்றதே. 12:20 எனவே, “உங்கள் பகைவன் பசியாயிருந்தால், அவனுக்கு உணவு கொடுங்கள்; தாகமாயிருந்தால், அவனுக்கு அருந்தக் கொடுங்கள். இவ்விதம் செய்வதனால் நீங்கள் அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பீர்கள்.” 12:21 தீமை உங்களை ஆக்கிரமிக்க இடங்கொடாமல் தீமையை நன்மையினால் ஆக்கிரமியுங்கள்.