1 Corinthians 1
1:1 இறைவனின் விருப்பப்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாய் இருக்கும்படி அழைக்கப்பட்ட பவுலும், நமது சகோதரனாகிய சொஸ்தெனேயும்,
1:2 கொரிந்துவில் இருக்கும் இறைவனுடைய திருச்சபைக்கும், கிறிஸ்து இயேசுவுடன் இணைக்கப்பட்டதால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் எங்களுக்கும் ஆண்டவராய் இருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி எல்லா இடங்களிலிருந்தும் ஒன்றிணைந்து ஆராதிக்கின்ற அனைவருக்கும் எழுதுவதாவது:
1:3 நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
1:4 கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்பதால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்போதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
1:5 நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவிதத்திலும், எல்லாப் பேச்சிலும், எல்லா அறிவிலும், எவ்வகையிலும் நிறைவானவர்களாக விளங்குகிறீர்கள்.
1:6 அதன் காரணமாக, கிறிஸ்துவைப் பற்றிய எங்களுடைய சாட்சியை இறைவன் உங்களில் உறுதிப்படுத்தியுள்ளார்.
1:7 ஆகவே, நீங்கள் எந்த ஆவிக்குரிய வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
1:8 அதனால் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரை நீங்கள் குற்றம் சாட்டப்படாதவர்களாய் இருக்கும்படி, அவர் இறுதி வரை உங்களை உறுதியானவர்களாகக் காத்துக்கொள்வார்.
1:9 தமது மகனும் நமது ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர்.
1:10 பிரியமானவர்களே, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்வதாவது: நீங்கள் பேச்சிலும் சிந்தையிலும் உடன்பட்டிருந்து, உங்கள் மத்தியில் பிரிவினைகள் இல்லாமல் ஒரேவிதமாக சிந்தித்து தீர்மானிக்கின்றவர்களாக இருங்கள்.
1:11 பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உள்ளதாக குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள்.
1:12 நான் கூறுவது என்னவென்றால் உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறான். இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறான். இன்னொருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறான். இன்னொருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறான்.
1:13 கிறிஸ்து பிரிவுற்றிருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
1:14 கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் எவருக்கேனும் நான் ஞானஸ்நானம் கொடுக்காதபடியால் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
1:15 ஆகவே, என் பெயரால் ஞானஸ்நானம் பெற்றதாக உங்களில் ஒருவரேனும் சொல்ல முடியாது.
1:16 ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தது உண்மை. அதைவிட, வேறு யாருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை
1:17 கிறிஸ்து என்னை ஞானஸ்நானம் கொடுப்பதற்கல்ல, நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். அத்தோடு கிறிஸ்துவின் சிலுவை மரணம் வல்லமையற்று போகாதவாறு மனித ஞானத்தை வெளிப்படுத்தும் சொற்பொழிவு ஆற்றுகின்ற வார்த்தைகளின்றி பிரசங்கிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார்.
1:18 அழிவின் பாதையில் போகின்றவர்களுக்கு சிலுவையின் செய்தியானது முட்டாள்தனமாகத் தோன்றுகின்றது. ஆனால் இரட்சிக்கப்படுகின்ற நமக்கோ அது இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது.
1:19 ஆகவே, “நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து, அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்” என்று எழுதப்பட்டிருக்கின்றது.
1:20 ஞானி எங்கே? தத்துவ ஆசிரியன் எங்கே? இந்த யுகத்தைச் சேர்ந்த வாதிடும் அறிஞன் எங்கே? உலக ஞானத்தை இறைவன் மடைமையாக மாற்றவில்லையோ?
1:21 இறைவனின் ஞானமான திட்டத்தின்படி ஞானத்தால் உலகம் இறைவனை அறிய முடியாததாயிருக்கையில், முட்டாள்தனமாகத் தோன்றுகின்ற எமது பிரசங்கத்தைக்கொண்டு, அதனூடாக விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை மீட்க இறைவன் விருப்பம் கொண்டார்.
1:22 யூதர்கள் அற்புத அடையாளங்களை கேட்கின்றார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்.
1:23 ஆனால் நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். இது யூதருக்குத் தடைக்கல்லாகவும் யூதரல்லாதவருக்கு முட்டாள்தனமானதாயும் இருக்கின்றது.
1:24 ஆனால், யூதரிலும் கிரேக்கரிலுமிருந்து அழைக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்துவே இறைவனின் வல்லமையும் இறைவனின் ஞானமுமாய் இருக்கின்றார்.
1:25 ஏனெனில் இறைவனின் அறிவீனம் மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பலவீனம் மனித பலத்திலும் மிகுந்த பலமுள்ளதாயிருக்கிறது.
1:26 பிரியமானவர்களே, நீங்கள் அழைக்கப்பட்டபோது எப்படி இருந்தீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனித மதிப்பீட்டின்படி உங்களில் ஞானிகள் அநேகரில்லை; செல்வாக்குடையவர்கள் அநேகரில்லை; உயர்குடிப் பிறந்தவர்கள் அநேகரில்லை.
1:27 ஆனால் இறைவனோ, ஞானிகளை வெட்கித் தலைகுனியச் செய்யும்படி உலகின் முட்டாள்தனமானவைகளைத் தெரிவு செய்தார்; பலமுள்ளவர்களை வெட்கத்துக்குள்ளாக்கும்படி உலகின் பலவீனமானவைகளைத் தெரிவு செய்தார்.
1:28 இந்த உலகம் மதிப்புள்ளதாகக் கருதுபவற்றை பயனற்றவையாக்க, இந்த உலகத்தால் முக்கியமற்றதென எண்ணப்பட்ட, ஏளனத்துக்குரியதும் ஒன்றும் இல்லாததுமானவற்றை இறைவன் தெரிவு செய்தார்.
1:29 இப்படியாக ஒருவரும் இறைவனின் பிரசன்னத்தில் பெருமை பாராட்ட இடம் இல்லாமல் செய்தார்.
1:30 இறைவனாலேயே நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்றீர்கள். அவரே இறைவனிடமிருந்து நமக்காக வந்த ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமாக இருக்கின்றார்.
1:31 ஆகவே எழுதியிருக்கின்றபடி, “பெருமை பாராட்ட விரும்புகின்றவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”