1 Corinthians 2
2:1 பிரியமானவர்களே, நான் உங்களிடத்தில் வந்து, இறைவனைப் பற்றிய சாட்சியை உங்களுக்குப் பிரசித்தப்படுத்தியபோது, பேச்சுத் திறனுடனோ அல்லது மனித ஞானத்துடனோ வரவில்லை.
2:2 ஏனெனில் நான் உங்களோடு இருந்தபோது சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறெதையும் அறியாதிருக்க உறுதி கொண்டிருந்தேன்.
2:3 நான் உங்களிடத்தில் பலவீனத்தோடும், பயத்தோடும், மிகுந்த நடுக்கத்தோடும் வந்தபோது
2:4 என் செய்தியும் என் பிரசங்கமும், ஞானமும் நாவன்மை உள்ள வார்த்தைகளாகவும் இருக்காமல் ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்துவனவாக இருந்தன.
2:5 ஏனென்றால் உங்கள் விசுவாசம் மனித ஞானத்தில் தங்கியிருக்காமல் இறைவனின் வல்லமையிலே தங்கியிருக்கும்படியாகவே அப்படிச் செய்தேன்.
2:6 நாங்கள் அறிவிப்பது இந்த யுகத்தின் ஞானமோ அல்லது இந்த யுகத்தை ஆளுகின்ற அழிந்து போகின்றவர்களின் ஞானமோ அல்ல. மாறாக முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில் மெய்ஞானத்தின் செய்தியை அறிவிக்கிறோம்.
2:7 மறைபொருளானதும் ஒளித்து வைக்கப்பட்டதுமான இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றும் முன்பே நமது மகிமைக்கென நியமித்தார்.
2:8 யுகத்தை ஆளுகின்ற ஒருவரும் இதைப் புரிந்துகொள்ளவில்லை. புரிந்து கொண்டிருந்தால், மகிமையின் ஆண்டவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்களே.
2:9 ஆனால் எழுதியிருக்கின்றபடி: “தம்மை நேசிக்கிறவர்களுக்கு இறைவன் ஆயத்தமாக்கி வைத்திருப்பவைகளை எந்தக் கண்ணும் காணவுமில்லை, எந்தக் காதும் கேட்கவுமில்லை, எந்த ஒரு மனமும் கற்பனை செய்யவுமில்லை.”
2:10 இறைவன் தமது பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் இவைகளை நமக்கு வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்கிறார்; இறைவனுக்குரிய ஆழங்களையும் ஆராய்கிறார்.
2:11 ஒரு மனிதனுக்குள் இருக்கும் அவனுடைய ஆவியைத் தவிர அவனுடைய சிந்தனைகளை யாரால் அறிய முடியும்? அதேபோல் இறைவனின் ஆவியானவரைத் தவிர, ஒருவரும் இறைவனின் சிந்தனைகளை அறிய மாட்டார்கள்.
2:12 நாம் உலகத்தின் ஆவியைப் பெற்றுக்கொள்ளாமல் இறைவன் நமக்கு உரித்தாகக் கொடுத்தவற்றை புரிந்துகொள்ளும்படி, இறைவனிடத்திலிருந்து வந்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறோம்.
2:13 ஆகவே நாங்கள் மனித ஞானம் கற்பித்த வார்த்தைகளினால் பேசாமல் ஆவியானவர் கற்பித்த வார்த்தைகளினால் பேசி, ஆவிக்குரிய உண்மைகளை ஆவிக்குரியவற்றோடு ஒன்றிணைத்துக் காட்டுகிறோம்.
2:14 பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிராத மனிதன், இறைவனின் ஆவியானவரிடமிருந்து வரும் காரியங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவனுக்கு முட்டாள்தனமாகத் தோன்றும். அவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில், அவை ஆவிக்குரிய ரீதியாகவே நிதானித்து அறியப்படுகின்றன.
2:15 ஆனால் ஆவிக்குரிய மனிதன் எல்லாவற்றையும் ஆராய்ந்து புரிந்துகொள்கின்றான். அவனையோ மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
2:16 ஏனெனில் வேதவசனம் சொல்கின்றபடி, “கர்த்தருக்கு அறிவுறுத்தும் அளவுக்கு, அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” ஆனால் நாமோ கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாய் இருக்கின்றோம்.