Library · ta

Colossians 2

2:1 உங்களுக்காகவும் லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கின்றவர்களுக்காகவும் இன்னும் என்னை நேரில் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவு போராடுகிறேன் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என நான் விரும்புகிறேன். 2:2 அவர்கள் உள்ளத்தில் ஊக்கம் அடைந்து, அன்பினால் ஐக்கியப்பட்டு, அதனால் இறைவனுடைய மறைபொருளை உறுதியாகப் புரிந்துகொள்வதன் முழு நிறைவை பெறவேண்டும் என்பதே எனது நோக்கம். இறைவனுடைய அந்த மறைபொருள் கிறிஸ்துவே. 2:3 ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் அவருக்குள்ளே மறைந்திருக்கின்றன. 2:4 சரியானவை போல் தோன்றும் தவறான வாதங்களால் எவரும் உங்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கின்றேன். 2:5 உடலால் நான் உங்களோடு இல்லையென்றாலும், ஆவியில் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் ஒழுங்குடன் இணைந்து நின்று கிறிஸ்துவில் வைத்திருக்கும் விசுவாசத்தில் உறுதியுடன் வேரூன்றி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். 2:6 எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் ஆண்டவராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரோடு தொடர்ந்து ஒன்றுபட்டு வாழுங்கள். 2:7 நீங்கள் அவரில் வேரூன்றி, கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும், உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டபடியே விசுவாசத்தில் பலப்படுகின்றவர்களாகவும், நன்றியால் நிரம்பி வழிகின்ற மக்களாகவும் வாழுங்கள். 2:8 எவரும் உங்களை தங்கள் வெறுமையான ஏமாற்றுப் பேச்சுக்களிலும் மனித தத்துவ ஞானங்களிலும் சிக்க வைத்து கட்டுப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலகைக் கட்டுப்படுத்தும் ஆவிக்குரிய சக்திகளிலும் தங்கியுள்ளனவே அன்றி, கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. 2:9 ஏனெனில், இறைதன்மையின் முழுநிறைவும், உடல் உருவில் கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது. 2:10 ஆகவே, நீங்களும் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவர்களாய் இருக்கின்றீர்கள். அவரே எல்லா வல்லமைகளுக்கும் அதிகாரங்களுக்கும் மேலான தலைவராய் இருக்கின்றார். 2:11 நீங்களும் கிறிஸ்துவில் விருத்தசேதனத்தைப் பெற்றிருக்கிறீர்கள், இதனால் உங்கள் பாவ மனித இயல்பு களையப்பட்டது. இந்த விருத்தசேதனம் மனிதருடைய கைகளினால் செய்யப்படாமல் கிறிஸ்துவினால் உருவான விருத்தசேதனம் ஆகும். 2:12 ஞானஸ்நானத்திலே நீங்கள் அவருடன் அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடத்தில் இருந்து கிறிஸ்துவை உயிருடன் எழுப்பிய இறைவனுடைய வல்லமையில் நீங்கள் வைத்த விசுவாசத்தின் மூலமாக, அவருடனேகூட எழுப்பப்பட்டும் இருக்கின்றீர்கள். 2:13 உங்கள் மீறுதல்களிலும், பாவ இயல்பைக் களைகின்ற விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளாமையிலும் நீங்கள் இறந்தவர்களாக இருந்தீர்கள். அப்போது இறைவன் நம்முடைய எல்லா மீறுதல்களையும் மன்னித்து, உங்களைக் கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். 2:14 நமக்கு விரோதமாய் எழுதப்பட்டிருந்ததான கட்டளைகளைக் கொண்ட குற்றப் பத்திரத்தை நீக்கி, அதைச் சிலுவையில் ஆணியடித்து இல்லாதொழித்து விட்டார். 2:15 அவர், ஆளும் வல்லமைகளிடமிருந்தும் அதிகாரங்களிடமிருந்தும் அவற்றின் வல்லமைகளைக் களைந்து, சிலுவையினால் அவற்றின் மேல் வெற்றிகொண்டு அவற்றைப் பகிரங்கக் காட்சிப் பொருளாக்கினார். 2:16 எனவே நீங்கள் உண்பது மற்றும் அருந்துவது குறித்தோ பண்டிகைகள், அமாவாசை நாட்கள், ஓய்வுநாட்கள் குறித்தோ எவரும் உங்களை நியாயம் தீர்க்க இடமளிக்க வேண்டாம். 2:17 அந்த விதிமுறைகள் எல்லாம் வர இருந்த காரியங்களின் வெறும் நிழல் மட்டுமே. அவற்றின் உண்மை அர்த்தம் கிறிஸ்துவில் காணப்படுகின்றது. 2:18 பொய்யான தாழ்மையிலும், வானவர்களை ஆராதனை செய்வதிலும் மகிழ்கின்றவர்களால் நீங்கள் பெறவிருக்கும் உங்கள் வெகுமதியை இழந்து விடாதிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவன், தான் கண்ட தரிசனங்களைக் குறித்து அதிகமாய் விபரித்துச் சொல்கின்றான். ஆவிக்குரிய தன்மையற்ற அவனுடைய மனம், வீணான சிந்தனைகளில் பெருமைகொள்கிறது. 2:19 தலையாகிய கிறிஸ்துவிலிருந்து தொடர்பை அவன் இழந்துவிட்டான். கிறிஸ்துவினாலேயே முழு உடலும், மூட்டுக்களினாலும் தசை நார்களினாலும் ஒன்றிணைக்கப்பட்டு ஊட்டம் பெற்று, இறைவன் வளரச் செய்கின்றபடி அது வளர்ச்சி அடைகிறது. 2:20 கிறிஸ்துவுடனேகூட நீங்கள் இந்த உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மரணித்தவர்களாய் இருக்கின்றீர்கள். அப்படியானால், அதற்கு உட்பட்டவர்கள் போல் இன்னும் ஏன் அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகின்றீர்கள்? 2:21 “பயன்படுத்தாதே! இவற்றை சுவைக்காதே! தொடாதே!” என்று அவைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஏன்? 2:22 இவை பயன்படுத்தப்பட்டு காலப்போக்கில் ஒழிந்து போகின்றவைகளைக் குறித்ததான கட்டளைகள். ஏனெனில் இவை மனிதருடைய கட்டளைகளையும் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. 2:23 அவர்களின் இந்தக் கட்டளைகள், தாங்களே தங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட வழிபாட்டையும் பொய்யான தாழ்மையையும் உடல் ஒடுக்குதல்களையும் பொறுத்தவரையில், ஞானமானவை போல் காணப்படுவது உண்மையே. ஆனால் உடல் ஆசைகளை அடக்கி ஆளுவதற்கு இவை பயன்படாது.