Library · ta

Colossians 3

3:1 நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உயிருடன் எழுப்பப்பட்டிருக்கின்றபடியால், பரலோக காரியங்களையே விரும்பித் தேடுங்கள். அங்கே கிறிஸ்து, இறைவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். 3:2 உலகத்துக்குரிய காரியங்களில் அன்றி, பரலோகத்துக்குரிய காரியங்களில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள். 3:3 ஏனெனில் நீங்கள் இறந்துவிட்டீர்கள், இப்பொழுதோ உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவுடன் இறைவனில் மறைந்திருக்கிறது. 3:4 உங்கள் வாழ்வாய் இருக்கின்ற கிறிஸ்து தோன்றும்போது, நீங்களும் அவருடனேகூட மகிமையில் தோன்றுவீர்கள். 3:5 ஆகவே, உலக இயல்புக்குச் சொந்தமான பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தமான நடத்தை, காம வேட்கைகள், தீய ஆசைகள், விக்கிரக வழிபாடாகிய பேராசை ஆகிய அனைத்தையும் சாகடித்து விடுங்கள். 3:6 இவைகளின் காரணமாகவே, இறைவனுடைய கோபத் தண்டனை வரப் போகின்றது. 3:7 முன்னர் வாழ்ந்த வாழ்வில், நீங்களும் அவ்விதமாகவே நடந்துகொண்டீர்கள். 3:8 ஆனால் இப்பொழுதோ கடும் கோபம், சினம், கேடு செய்யும் எண்ணம், அவதூறு பேசுதல் ஆகிய நடத்தைகளை உங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்றி விடுங்கள். ஆபாசப் பேச்சு உங்கள் உதடுகளிலிருந்து வெளிவரக் கூடாது. 3:9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் பழைய மனித சுபாவத்தையும், அதன் செயல்களையும் உங்களிடமிருந்து களைந்துவிட்டு, 3:10 புதிதாக்கப்பட்ட மனிதனின் சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள். அந்த சுபாவமானது படைத்தவருடைய சாயலில், அவரைப்பற்றிய அறிவினால் புதிதாக்கப்படுகிறது. 3:11 இந்தப் புதிதாக்கப்பட்ட நிலையில் கிரேக்கர், யூதர் என்றோ விருத்தசேதனம் பெற்றவர், பெறாதவர் என்றோ பிறஇனத்தவர் என்றோ பண்பாடற்றவர் என்றோ அடிமை, சுதந்திரக் குடிமகன் என்றோ எந்த வேறுபாடும் இல்லை. கிறிஸ்துவே இவர்கள் எல்லோரிலும் எல்லாமுமாய் இருக்கின்றார். 3:12 ஆகவே இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மக்களும், பரிசுத்தமுள்ளவர்களும், அவரது அன்புக்குரியவர்களுமாய் இருக்கின்ற நீங்கள் இரக்கம், தயவு, தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகிய குணங்களை அணிந்துகொள்ளுங்கள். 3:13 ஒருவரோடு ஒருவர் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். யாராவது ஒருவருக்கு எதிராக இன்னொருவருக்கு ஏதாவது ஒரு மனக்குறை இருக்குமானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; கர்த்தர் உங்களை மன்னித்தது போல, நீங்களும் மன்னியுங்கள். 3:14 இந்த நற்குணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பை அணிந்துகொள்ளுங்கள். இதுவே அனைத்தையும் ஒரு பூரண ஒருமைப்பாட்டில் இணைக்கிறது. 3:15 கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளுகை செய்யட்டும். ஏனெனில் இந்தச் சமாதானத்துக்காகவே நீங்கள் ஒரே உடலின் அங்கங்களாய் இருக்க அழைக்கப்பட்டீர்கள். எனவே நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள். 3:16 கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் நிறைவாய் குடியிருக்கட்டும். நீங்கள் சகல ஞானத்தோடு சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, அறிவுரை கூறி உங்கள் இருதயங்களில் இறைவனை நன்றியுடன் பாடுங்கள். 3:17 நீங்கள் எதைப் பேசினாலும் எதைச் செய்தாலும் ஆண்டவர் இயேசுவின் பெயரிலேயே எல்லாவற்றையும் செய்து, அவர் ஊடாக பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். 3:18 மனைவியரே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதுவே கர்த்தரை அறிந்தவர்களுக்குப் பொருத்தமானது. 3:19 கணவர்களே, உங்கள் மனைவியிடம் அன்பாய் இருங்கள். அவர்களுடன் கடுமையாய் நடந்துகொள்ளாதிருங்கள். 3:20 பிள்ளைகளே! உங்கள் பெற்றோருக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஏனெனில், இது கர்த்தரைப் பிரியப்படுத்துகின்றது. 3:21 தந்தையரே! உங்கள் பிள்ளைகளுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால், அவர்கள் சோர்ந்து போவார்கள். 3:22 அடிமைகளே, உலகத்தில் இருக்கின்ற உங்கள் எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக, அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும் கீழ்ப்படிகின்றவர்களாய் இராமல், கர்த்தரில் பயபக்தியுள்ளவர்களாய் உண்மையான இருதயத்தோடு எப்போதும் கீழ்ப்படியுங்கள். 3:23 நீங்கள் எதைச் செய்தாலும் அதை மனிதர்களுக்காகச் செய்யாமல் கர்த்தருக்காகவே செய்கின்றீர்கள் என முழு மனதோடு செய்யுங்கள். 3:24 அதற்குரிய வெகுமதியாக கர்த்தரிடமிருந்து உரிமைச் சொத்தைப் பெற்றுக்கொள்வீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்துவாகிய ஆண்டவருக்கே நீங்கள் பணி செய்கின்றீர்கள். 3:25 ஏனெனில் தவறு செய்கின்றவன் தான் செய்கின்ற தவறுக்கான தண்டனையைப் பெறுவான். இறைவனின் நியாயத்தீர்ப்பில் பக்கச்சார்பு காட்டப்படவே மாட்டாது.