1 Timothy 1
1:1 நமது மீட்பராகிய இறைவனும், நமது நல்ல எதிர்பார்ப்பின் காரணரான கிறிஸ்து இயேசுவும் கட்டளையிட்டபடி கிறிஸ்து இயேசுவுக்கு அப்போஸ்தலனாய் இருக்கின்ற பவுல்,
1:2 விசுவாசத்தில் எனக்கு உண்மையான பிள்ளையாக இருக்கின்ற தீமோத்தேயுவுக்கு எழுதுகின்றதாவது: பிதாவாகிய இறைவனிடமிருந்தும், நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் கிடைப்பதாக.
1:3 நான் மக்கெதோனியாவுக்குப் போனபோது உன்னிடம் வற்புறுத்தி வேண்டிக்கொண்டது போல, நீ எபேசுவிலே தங்கியிருந்தவாறு உண்மைக்குப் புறம்பான கோட்பாடுகளைக் கற்றுக் கொடுக்காதபடி அங்கே உள்ள சிலருக்கு கட்டளையிடு.
1:4 கட்டுக்கதைகளிலும், முடிவில்லாத வம்ச வரலாறுகளிலும் ஈடுபடுவதைவிட்டு விடும்படி அவர்களுக்குக் கட்டளையிடு. இவை வாக்குவாதங்களுக்கு வழிவகுக்குமே அல்லாமல், விசுவாசத்தினால் நடைபெறும் இறைவனின் திட்டத்தை முன்கொண்டு நடத்த வழிவகுக்காது.
1:5 அன்பே இந்தக் கட்டளையின் நோக்கம். அந்த அன்பானது தூய்மையான இருதயத்திலிருந்தும், நல்ல மனசாட்சியிலிருந்தும், உண்மையான விசுவாசத்திலிருந்துமே வெளிவருகின்றது.
1:6 சிலர் இவற்றைவிட்டு விலகி வீண் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
1:7 அவர்கள் நீதிச்சட்ட ஆசிரியர்களாய் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் தாங்கள் எதைப் பற்றிப் பேசுகின்றோம் என்பதையும் தாங்கள் நிச்சயத்தோடு வலியுறுத்துவது என்னவென்றும் அறியாமல் இருக்கின்றார்கள்.
1:8 நீதிச்சட்டம் நல்லது என்பதை நாம் அறிவோம். ஆனால் அதை ஒருவன் முறைப்படி பயன்படுத்த வேண்டும்.
1:9 நீதிச்சட்டம் நீதிமான்களுக்காக இயற்றப்படவில்லை. சட்டத்தை மீறுபவர்கள், கலகக்காரர்கள், இறைவனை மறுதலிப்பவர்கள், பாவிகள், பரிசுத்தம் இல்லாதவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள், தங்கள் தந்தையை தாயைக் கொலை செய்பவர்கள், கொலைகாரர்கள்,
1:10 தகாத உறவில் ஈடுபடுகின்றவர்கள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றவர்கள், அடிமை வியாபாரம் செய்கின்றவர்கள், பொய் பேசுகின்றவர்கள், பொய்ச் சத்தியம் செய்கின்றவர்கள் ஆகிய இவர்களுக்காகவும், நலமான கோட்பாட்டிற்கு எதிரான அனைத்து செயல்களுக்காகவுமே இயற்றப்பட்டிருக்கிறது.
1:11 இந்த நலமான கோட்பாடானது, புகழ்ச்சிக்குரிய இறைவன் என்னிடம் ஒப்படைத்துள்ள மகிமையான நற்செய்திக்கு ஒத்ததாக இருக்கின்றது.
1:12 என்னைப் பலப்படுத்திய எனது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் அவர் என்னை உண்மையுள்ளவன் என்று கருதி, அவரது பணியில் என்னை நியமித்தார்.
1:13 முன்னொரு காலத்தில் நான் அவரை நிந்திக்கின்றவனாகவும், துன்புறுத்துகின்றவனாகவும், வன்முறைக்காரனாகவும் இருந்தேன். ஆனாலும் எனக்கு இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் எனது அறியாமையினாலும் அவிசுவாசத்தினாலுமே நான் அப்படி நடந்துகொண்டேன்.
1:14 நமது கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தோடும், அன்புடனும் சேர்த்து என்மீது நிறைவாக ஊற்றப்பட்டது.
1:15 நம்பத்தகுந்ததும், முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுமான கூற்று இது: பாவிகளை மீட்பதற்காகவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அந்தப் பாவிகளில் மிக மோசமான பாவி நானே.
1:16 ஆனாலும், என்மீது இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் நித்திய வாழ்வைப் பெறுவதற்கு கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைக்கப் போகின்றவர்களுக்கு, நான் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே மிக மோசமான பாவியாகிய என்மீது அவர் அளவற்ற பொறுமையைக் காண்பித்தார்.
1:17 நித்திய அரசரும், அழிவில்லாதவரும், கண்ணுக்குப் புலப்படாதவருமான ஒரேயொருவரான இறைவனுக்கே கனம், மகிமை என்பன என்றென்றும் உரித்தாகட்டும். ஆமென்.
1:18 மகன் தீமோத்தேயு, முன்பு உன்னைப்பற்றிக் கூறப்பட்ட இறைவாக்கின்படியே நான் உனக்கு இந்த அறிவுறுத்தலைக் கொடுக்கின்றேன். இவற்றை நீ கைக்கொள்வதனால், நல்ல போராட்டத்தையும்,
1:19 விசுவாசத்தையும், நல்ல மனசாட்சியையும் பற்றிப்பிடித்துக் கொண்டு உறுதியுடன் போராடுவாய். சிலர் இவற்றை நிராகரித்ததால், பாறையில் மோதிய கப்பலைப் போல் தங்கள் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள்.
1:20 இமெநேயும், அலெக்சாந்தரும் அப்படிப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள். அவர்களை நான் சாத்தானிடம் கையளித்திருக்கிறேன். இறைவனைப்பற்றி நிந்தித்து பேசாதிருக்க அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.