Library · ta

1 Timothy 2

2:1 நான் உங்களிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்வதாவது; முதன்மையாக எல்லா மக்களுக்காகவும் வேண்டுதல் செய்யுங்கள், மன்றாடுங்கள், பரிந்து பேசுங்கள், நன்றி செலுத்துங்கள். 2:2 அரசர்களுக்காகவும் அதிகாரத்தில் உள்ள அனைவருக்காகவும் மன்றாடுங்கள். அப்பொழுதே நாம் இறைபக்தியும் பரிசுத்தமும் உள்ளவர்களாய் சமாதானமும் அமைதியுமான வாழ்க்கை வாழ முடியும். 2:3 இதுவே சரியானதும், நமது இரட்சகராகிய இறைவனுக்குப் பிரியமானதுமாய் இருக்கின்றது. 2:4 எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதும், சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பெற்று உணர வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம். 2:5 ஏனெனில் இறைவன் ஒருவரே, இறைவனுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கும் நடுவரும் ஒருவரே. அவரே மனிதனாக வந்த கிறிஸ்து இயேசு. 2:6 எல்லா மனிதர்களையும் மீட்பதற்கு ஈடான ஒன்றாக அவர் தன்னையே கொடுத்தார். இதுவே குறித்த காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட சான்றாக இருக்கின்றது. 2:7 இதற்காகவே நான் போதிக்கின்றவனாகவும், அப்போஸ்தலனாகவும், அத்துடன் யூதரல்லாதவருக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் கற்றுக் கொடுக்கின்றவனாகவும் நியமிக்கப்பட்டேன். நான் சொல்வது உண்மை, பொய் சொல்லவில்லை. 2:8 எனவே ஆண்கள் கோபம் கொள்ளாதவர்களாகவும், வாக்குவாதம் செய்யாதவர்களாகவும் பரிசுத்த கைகளை உயர்த்தி எல்லா இடங்களிலும் மன்றாட வேண்டும் என்பதே என் விருப்பம். 2:9 அதேபோல பெண்கள் அடக்கமானதும், ஒழுக்கம் மற்றும் தகுதியானதுமான ஆடைகளையே அணிய வேண்டும் என்று விரும்புகிறேன். விதவிதமான சிகை அலங்காரத்தினாலோ, தங்கத்தினாலோ, முத்துக்களினாலோ, விலையுயர்ந்த ஆடைகளினாலோ தங்களை அலங்கரித்து அழகுபடுத்தாமல், 2:10 இறைவனை ஆராதிக்கின்ற பெண்களுக்குத் தகுந்தபடி, நற்செயல்களால் தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும். 2:11 பெண்ணானவள் அமைதியாகவும், மிகுந்த பணிவுடனும் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 2:12 போதிக்கவோ, ஆண்களுக்குமேல் அதிகாரம் செலுத்தவோ பெண்ணுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன். அவள் அமைதியாயிருக்க வேண்டும். 2:13 ஏனெனில் ஆதாமே முதலில் உருவாக்கப்பட்டான். அதற்குப் பின்பே ஏவாள் உருவாக்கப்பட்டாள். 2:14 மேலும் ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு பாவத்திற்கு ஆளானாள். 2:15 ஆனாலும் விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் பெண்ணானவள் நிலைத்திருந்தால் பிரசவத்தின் ஊடாக மீட்கப்படுவாள்.