1 Timothy 4
4:1 பரிசுத்த ஆவியானவர் தெளிவாகச் சொல்வது இதுவே: கடைசிக் காலங்களில் சிலர் விசுவாசத்தைக் கைவிட்டு வஞ்சிக்கும் ஆவிகளையும் பிசாசுகளின் போதனைகளையும் பின்பற்றுவார்கள்.
4:2 இப்படியான போதனைகள், வேடதாரிகளான பொய்யர்களின் வழியாகவே வருகின்றன. அவர்களுடைய மனசாட்சிகளோ சூடுபட்டு மரத்துப் போனவை.
4:3 திருமணம் செய்யக் கூடாதென்றும், குறிப்பிட்ட சில வகை உணவை உண்ணக் கூடாதென்றும் அவர்கள் சொல்வார்கள். ஆனால் விசுவாசிக்கின்றவர்களும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி சொல்லி உண்பதற்காகவே இறைவன் அவற்றைப் படைத்திருக்கிறார்.
4:4 ஏனெனில் இறைவன் படைத்த எல்லாம் நல்லவையே, நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டால் எதையும் ஒதுக்க வேண்டியதில்லை.
4:5 ஏனென்றால், இறைவனுடைய வார்த்தையினாலும் மன்றாடுதலினாலும் அது பரிசுத்தமாக்கப்படுகிறது.
4:6 இக்காரியங்களை சகோதர சகோதரிகளுக்கு அறியச் செய்தால் கிறிஸ்து இயேசுவின் நல்லதொரு ஊழியனாயிருப்பாய். விசுவாசத்தின் வார்த்தைகளிலும், நீ கைக்கொண்ட நல்ல போதனைகளிலும் ஊட்டம் பெற்றவனாக இருப்பாய்.
4:7 இறைபக்தியில்லாதவர்களின் கட்டுக்கதைகளிலும், கிழவிகளின் கட்டுக்கதைகளிலும் நீ சம்பந்தம் கொள்ளாதே. அதற்குப் பதிலாக இறைபக்தியில் உன்னைப் பயிற்றுவித்துக் கொள்.
4:8 உடற்பயிற்சி ஓரளவு பயன் தரும். ஆனால் இறைபக்தி எல்லாவிதத்திலும் பயனுள்ளது. அது தற்கால வாழ்வுக்கும், வருங்கால வாழ்வுக்கும் பயன் தரும் என்ற வாக்குறுதியைக் கொண்டுள்ளது.
4:9 இது நம்பத்தகுந்ததும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுமான கூற்று.
4:10 இதற்காகவே நாம் கடினமாகப் பாடுபட்டு முயற்சி செய்கின்றோம். ஏனெனில் எல்லா மனிதர்களுக்கும், விசேடமாக விசுவாசிகளுக்கு இரட்சகராயிருக்கின்ற வாழும் இறைவனில் நாம் நமது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறோம்.
4:11 இந்தக் காரியங்களை நீ கட்டளையிட்டும், போதித்தும் கொண்டிரு.
4:12 நீ வாலிபனாய் இருப்பதால், யாரும் உன்னைத் தாழ்வாக எண்ண இடம் கொடாதே. அத்துடன் உன் பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய வாழ்விலும் விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.
4:13 நான் வரும் வரைக்கும் திருச்சபையில் வேதவசனங்கள் வாசிப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும், போதிப்பதிலும் கவனமாக ஈடுபட்டுக் கொண்டிரு.
4:14 மூப்பர் குழுவினர் உன்மேல் தங்கள் கைகளை வைத்தபோது, இறைவாக்கின் மூலமாக உனக்குக் கொடுக்கப்பட்ட வரத்தை அலட்சியம் செய்யாதே.
4:15 இந்தக் காரியங்களில் கவனத்தைச் செலுத்து; அவைகளுக்கு உன்னை முழுமையாக ஒப்புக் கொடு. அப்போது உன்னுடைய முன்னேற்றத்தை எல்லோரும் தெளிவாகக் கண்டுகொள்வார்கள்.
4:16 உன் வாழ்க்கை முறையைக் குறித்தும், உபதேசத்தைக் குறித்தும் அதிக கவனம் செலுத்து. அவைகளில் நிலைத்திரு, அப்படியிருந்தால் உன்னையும், நீ சொல்வதைக் கேட்கின்றவர்களையும் மீட்டுக்கொள்வாய்.