1 Timothy 5
5:1 வயதில் மூத்தவர்களைக் கடுமையாகக் கண்டிக்காதே, அவர்களை உன் தந்தையைப் போல் மதித்து வேண்டுகோள் விடு. வாலிபர்களை உனது சகோதரர்களைப் போல் நடத்தி,
5:2 வயதில் மூத்த பெண்களைத் தாயாரைப் போலவும், இளம் பெண்களைச் சகோதரிகளைப் போலவும் எண்ணி தூய்மையாய் நடந்துகொள்.
5:3 உண்மையாகவே தேவையோடு இருக்கும் விதவைகளுக்கு வேண்டிய ஆதரவைக் கொடு.
5:4 ஆனால் எந்த விதவைக்காவது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தால், அவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதன் மூலமாக இறைபக்தியை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்ளட்டும். இப்படியாகத் தங்கள் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யட்டும். ஏனெனில் இதுவே இறைவனைப் பிரியப்படுத்தும் செயல்.
5:5 உண்மையாகவே ஆதரவு இன்றி தனித்து கைவிடப்பட்ட ஒரு விதவை, தனது எதிர்பார்ப்பை இறைவனிலே வைத்து இரவும் பகலும் மன்றாடி, அவரிடமே உதவியை நாடி நிற்பாள்.
5:6 ஆனால் உலகத்தின் இன்ப வாழ்வை விரும்புகின்ற விதவையோ, உயிரோடிருந்தாலும் நடைப்பிணமாகவே இருப்பாள்.
5:7 எவர் மீதும் குற்றம் சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு.
5:8 தன் உறவினர்களுக்கு, குறிப்பாக தனது குடும்பத்தவர்களுக்கு உதவி செய்யாத ஒருவன் தன்னுடைய விசுவாசத்தையே மறுதலிக்கின்றவனாகவும், விசுவாசமற்ற ஒருவனைவிட மோசமானவனாகவும் இருக்கின்றான்.
5:9 விதவைகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றவர்கள் அறுபது வயதிற்கு மேற்பட்டவராயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருக்க வேண்டும்.
5:10 அத்துடன் தனது நற்செயல்களினால், அதாவது பிள்ளைகளை வளர்த்தெடுத்தல், உபசரிக்கும் பண்பு, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுதல், கஷ்டத்தில் இருக்கின்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற எல்லாவிதமான நற்செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தி நற்பெயர் பெற்றவராய் இருக்க வேண்டும்.
5:11 இந்தப் பட்டியலில் இளம் விதவைகளை பதிவுசெய்து கொள்ளாதே. ஏனெனில் அவர்கள் உணர்ச்சிவசப்பட்ட ஆசைகளால் கிறிஸ்துவிடமிருந்து பிரிக்கப்படும்போது, மறுமணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.
5:12 இப்படியாக முதலில் கொடுத்த வாக்குறுதியை மீறுவதனால், அவர்கள் தங்களுக்கே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்கள்.
5:13 அதைவிட அவர்கள் சோம்பேறிகளாகி வீடுவீடாகத் திரிவதற்குப் பழகிக்கொள்வார்கள். சோம்பேறிகளாக மட்டுமல்ல, மற்றவர்களைக் குறித்து வீண் பேச்சு பேசுகின்றவர்களாகவும், மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடுகின்றவர்களாகவும் இருந்து, வீணான காரியங்களைப் பேசித் திரிவார்கள்.
5:14 எனவே இளம் விதவைகளுக்கு நான் கொடுக்கும் ஆலோசனை, அவர்கள் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று, தங்களுடைய குடும்பத்தை நடத்த வேண்டும். எதிரியானவன் அவமதித்துப் பேசுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.
5:15 ஏனெனில் சிலர் ஏற்கெனவே வழிதவறி, சாத்தானைப் பின்பற்றிச் சென்று விட்டார்கள்.
5:16 விசுவாசியான ஒரு பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருப்பார்களானால், அவர்களை அப்பெண்ணே பராமரிக்க வேண்டும். அந்தப் பாரத்தை திருச்சபையின் மேல் சுமத்தக் கூடாது. அப்போதுதான் உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபையால் உதவி செய்ய முடியும்.
5:17 திருச்சபையை நல்லவிதத்தில் நடத்துகின்ற மூப்பர்களை, விசேடமாக பிரசங்கம் பண்ணுவதிலும் போதிப்பதிலும் ஈடுபடும் மூப்பர்களை இரட்டிப்பான மதிப்பிற்குத் தகுதியானவர்களாக எண்ண வேண்டும்.
5:18 ஏனெனில், “தானியக் கதிரைக் கதிரடிக்கும் எருதின் வாயைக் கட்ட வேண்டாம்” என்றும், “வேலை செய்பவன் தன் கூலியைப் பெற உரிமையுள்ளவன்” என்றும் வேதவசனம் சொல்கின்றது.
5:19 மூப்பர் ஒருவருக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டை, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாதே.
5:20 பாவம் செய்கின்ற மூப்பர்கள், எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொள்ளப்பட வேண்டும். அப்போது அது மற்றவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தும்.
5:21 இறைவனுக்கும், கிறிஸ்து இயேசுவுக்கும், தெரிவு செய்யப்பட்ட இறைதூதர்களுக்கும் முன்னிலையில் நான் உனக்குக் கட்டளையிடுவதாவது: இந்த அறிவுறுத்தல்களைப் பாரபட்சமோ பக்கச்சார்போ இல்லாமல் கைக்கொள்.
5:22 அவசரப்பட்டு எவர் மீதும் கைகளை வைத்து விடாதே. மற்றவர்களுடைய பாவங்களில் பங்குகொள்ளாதே. உன்னைத் தூய்மை உள்ளவனாய் காத்துக்கொள்.
5:23 தொடர்ந்து தண்ணீரை மட்டும் குடிக்காமல் உனது வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படுகின்ற சுகவீனங்களுக்காகவும் கொஞ்சம் திராட்சை ரசத்தையும் அருந்து.
5:24 சிலருடைய பாவங்கள் வெளிப்படையாய் தெரிவதால், அவை நியாயத்தீர்ப்பிற்கு முதலில் வந்து சேருகின்றன. மற்றவர்களுடைய பாவங்களோ பின்னரே தெரிய வரும்.
5:25 அதேபோல, நல்ல செயல்களும் வெளிப்படையாய் தெரிய வரும், அப்படி வெளிப்படாதவைகள் தொடர்ந்தும் மறைந்திருக்க மாட்டாது.