Library · ta

2 Timothy 2

2:1 ஆகையால் என் மகனே, கிறிஸ்து இயேசுவில் இருக்கும் கிருபையின் மூலமாக நீ பலமடைவாயாக. 2:2 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடம் கேட்டறிந்தவற்றை போதிக்கத் திறமையுடைய நம்பத்தகுந்த மனிதரிடத்தில் ஒப்படைத்து விடு. அவர்கள் அதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள். 2:3 கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனாகத் துன்பங்களில் பங்கெடுத்துக்கொள். 2:4 போர்வீரனாகப் பணி செய்யும் எவனும், வேறெந்த விவகாரங்களிலும் ஈடுபட மாட்டான். ஏனெனில் தனது அதிகாரியைப் பிரியப்படுத்துவதே அவனது நோக்கமாயிருக்கும். 2:5 அதேபோல விளையாட்டுகளில் போட்டியிடும் எந்த வீரனாயினும் விதிமுறைகளைக் கைக்கொள்ளாவிட்டால் வெற்றிக் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டான். 2:6 கடினமாய் உழைக்கும் விவசாயியே விளைச்சலின் பங்கைப் பெறுவதற்கு முதல் தகுதியுடையவன். 2:7 நான் சொல்வதைச் சிந்தித்துப் பார், ஏனெனில் இவை எல்லாவற்றைக் குறித்தும் அறிந்துகொள்ள கர்த்தர் உனக்கு புரிந்துணர்வைத் தருவாராக. 2:8 இயேசு கிறிஸ்துவை நினைவில் வைத்திரு. அவரே மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவர், தாவீதின் சந்ததியில் வந்தவர். இதுவே நான் பிரசங்கிக்கும் நற்செய்தி. 2:9 இதற்காகவே நான் ஒரு குற்றவாளியைப் போல் விலங்கினால் பிணைக்கப்பட்டு துன்பம் அனுபவித்து வருகின்றேன். ஆனால் இறைவனின் வார்த்தையோ விலங்கினால் கட்டப்படவில்லை. 2:10 ஆகவே தெரிவு செய்யப்பட்டவர்கள், கிறிஸ்து இயேசுவின் மூலமாக கிடைக்கின்ற மீட்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் சகித்து வருகின்றேன். 2:11 இது நம்பத்தகுந்த கூற்று: அவரோடு நாம் இறந்துவிட்டால், அவரோடு நாம் வாழ்ந்திருப்போம். 2:12 துன்பங்களை நாம் சகிப்போமானால், அவருடன் நாம் ஆட்சியும் செய்வோம். கிறிஸ்துவை நாம் மறுதலிப்போமானால், அவரும் நம்மை மறுதலித்து விடுவார். 2:13 நாம் அவருக்கு உண்மை அற்றவர்களாய்ப் போனாலும், அவர் நமக்கு உண்மையுள்ளவராகவே இருக்கின்றார். ஏனெனில், அவர் தமது நிலையிலிருந்து தம்மை மாற்றிக்கொள்வதில்லை. 2:14 இதையெல்லாம் அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இரு. வார்த்தைகளைக் குறித்து வாக்குவாதம் செய்ய வேண்டாமென இறைவனுக்கு முன்பாக அவர்களை எச்சரிக்கை செய். அப்படிப்பட்ட வாக்குவாதங்கள் கேட்கின்றவர்களைப் பாழாக்குமே அன்றி, அதனால் வேறு எவ்விதப் பயனும் இல்லை. 2:15 நீயோ வெட்கப்படாத ஒரு வேலையாளாக, சத்திய வார்த்தையைச் சரியாகக் கையாளுகின்றவனாக, இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவனாக அவருக்கு முன்பாக நிற்பதற்கு உன்னால் முடிந்தளவு முயற்சி செய். 2:16 இறைபக்தியில்லாத வீண் பேச்சைவிட்டு விலகு. ஏனெனில் அது மென்மேலும் இறைவனை மறுதலிப்பதற்கே மக்களை வழிநடத்தும். 2:17 அவர்களின் போதனை சதையழுகல் நோயைப் போல பரவும். இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள். 2:18 அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகிச் சென்று விட்டார்கள். உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது எனச் சொல்லி சிலரது விசுவாசத்தைச் சீரழித்து வருகின்றார்கள். 2:19 அப்படியிருந்தும் இறைவனின் உறுதியான அத்திவாரம் நிலைத்து நிற்கிறது: “தமக்குச் சொந்தமானவர்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்” என்றும், “கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற ஒவ்வொருவரும், அநீதியான செயல்களிலிருந்து கட்டாயம் விலகவேண்டும்” என்றும் அதில் முத்திரையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 2:20 ஒரு பெரிய வீட்டில் தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் மட்டுமல்லாமல் மரப் பாத்திரங்களும் மண் பாத்திரங்களும் இருக்கின்றன. அவற்றில் சில உயர்வான நோக்கங்களுக்காகவும், சில தாழ்வான உபயோகத்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. 2:21 எவராவது தாழ்வானவைகளிலிருந்து முழுவதும் சுத்திகரிக்கப்பட்டிருந்தால், அவர் உயர்வான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பாத்திரமாக இருப்பார். அவர் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்கு உகந்தவராகவும், எந்த நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாக்கப்பட்டவராகவும் இருப்பார். 2:22 வாலிபப் பருவத்தின் தீய ஆசைகளைவிட்டு விலகி ஓடு. சுத்த இதயத்தோடு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகின்றவர்களுடன் சேர்ந்து நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடித் தேடு. 2:23 முட்டாள்தனமானதும், அறிவற்றதுமான விவாதங்களில் கலந்துகொள்ளாதே. ஏனெனில் அவை சண்டைகளையே ஏற்படுத்தும் என்பது உனக்குத் தெரியும். 2:24 கர்த்தரின் ஊழியன் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. ஆனால், எல்லோரிடமும் அவன் தயவுள்ளவனாகவும், போதிக்கும் திறமையுள்ளவனாகவும், தீமையைச் சகிக்கின்றவனாகவும் இருக்க வேண்டும். 2:25 இறைவன் ஒருவேளை அவர்களுக்கு மனந்திரும்புதலைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன், எதிர்க்கின்றவர்களைக் கனிவுடன் அறிவுறுத்த வேண்டும். இந்த மனந்திரும்புதல் சத்தியத்தின் அறிவுக்கு வழிநடத்தி, 2:26 அது அவர்களைத் தெளிந்த புத்தியுள்ளவர்களாக்கும். அப்போது, தனது திட்டத்தைச் செய்ய, பிசாசினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்ற அவர்கள் கண்ணிப் பொறியிலிருந்து தப்பித்துக்கொள்வார்கள்.