Library · ta

2 Timothy 3

3:1 ஆனாலும் கடைசி நாட்களில் மிகப் பயங்கரமான காலங்கள் வரவிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள். 3:2 ஏனென்றால், மக்கள் தங்களில் மாத்திரமே அன்பு காட்டுகின்றவர்களாகவும், பண ஆசை உள்ளவர்களாகவும், அகந்தை உள்ளவர்களாகவும், பெருமை உள்ளவர்களாகவும், பழித்துப் பேசுகின்றவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி கெட்டவர்களாகவும், பரிசுத்தம் இல்லாதவர்களாகவும், 3:3 அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்கும் தன்மை அற்றவர்களாகவும், அவதூறு பேசுகின்றவர்களாகவும், சுயகட்டுப்பாடு இல்லாதவர்களாகவும், கொடூரமானவர்களாகவும், நன்மையை விரும்பாதவர்களாகவும், 3:4 துரோகிகளாகவும், முன்யோசனை அற்றவர்களாகவும், தலைக்கனம் பிடித்தவர்களாகவும், இறைவனை நேசிக்காமல் சிற்றின்பங்களை விரும்புகின்றவர்களாகவும், 3:5 தோற்றத்தில் இறைபக்தி உள்ளவர்களைப் போல் காட்டிக்கொண்டாலும் அதன் வல்லமையை மறுதலிக்கின்றவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகியிரு. 3:6 இப்படிப்பட்டவர்களே வீடுகளுக்குள் நுழைந்து மனவுறுதியில் பலவீனமான பெண்களைத் தம் வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்கள் பாவங்களால் நிறைந்தவர்களும், பலவித தகாத ஆசைகளினால் அலைக்கழிக்கப் படுகின்றவர்களுமாய் இருக்கின்றார்கள். 3:7 இவர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கின்றார்கள், ஆனால் ஒருபோதும் சத்தியத்தைத் திருத்தமாக அறிந்துகொள்ள இயலாதவர்கள். 3:8 யந்நே, யம்பிரே என்பவர்கள் மோசேயை எதிர்த்து நின்றது போல, இந்த மனிதர்களும் சத்தியத்தை எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீர்கெட்ட மனமுடையவர்கள். விசுவாசத்தைப் பொறுத்தவரையில் புறக்கணிக்கப்பட்டவர்கள். 3:9 ஆனாலும் இவர்களால் இப்படி அதிக தூரம் போக முடியாது. ஏனெனில் அந்த இருவருக்கும் நடந்தது போல, இவர்களுடைய முட்டாள்தனமும் எல்லோருக்கும் வெளிப்படும். 3:10 ஆனால் நீயோ எனது போதனைகளையும், நடத்தையையும், வாழ்வின் நோக்கத்தையும், விசுவாசத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத் தன்மையையும் அறிந்திருக்கிறாய். 3:11 அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய இடங்களில் எனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களையும் பாடுகளையும், அதை நான் எப்படிச் சகித்தேன் என்பதையும் அறிந்திருக்கிறாய். ஆனால் அவை எல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் என்னை விடுவித்தார். 3:12 உண்மையில், கிறிஸ்து இயேசுவில் இணைக்கப்பட்டவர்களாய் இறைபக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகின்ற அனைவரும் துன்புறுத்தப்படுவார்கள். 3:13 அதேவேளை தீய மனிதர்களும் வஞ்சகர்களும் மென்மேலும் கேடான நிலையடைவார்கள். அவர்கள் ஏமாற்றுகின்றவர்களாகவும், ஏமாற்றப்படுபவர்களாகவும் இருப்பார்கள். 3:14 நீயோ கற்று, உறுதியாக நம்புகின்றவைகளைத் தொடர்ந்து கடைப்பிடி. ஏனெனில் நீ யாரிடமிருந்து அவற்றைக் கற்றுக்கொண்டாய் என்பதையும் அறிவாய், 3:15 எப்படி, உன் குழந்தைப் பருவத்திலிருந்தே பரிசுத்த வேதவசனங்களை நீ அறிந்து வைத்திருக்கின்றாய் என்பதுவும் உனக்குத் தெரியும். அவை கிறிஸ்து இயேசுவின்மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமாக மீட்பைப் பெற்றுக்கொள்வதற்கு உன்னை ஞானமுள்ளவனாக்குகிறது. 3:16 வேதவசனங்கள் அனைத்தும் இறைவனின் உயிர் மூச்சினால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை கற்றுக் கொடுப்பதற்கும், கண்டிப்பதற்கும், தவறை திருத்துவதற்கும், நீதியாய் வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளவையாய் இருக்கின்றன. 3:17 அதனூடாக, இறைவனுடைய ஊழியன் எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்வதற்கு முழுமையான ஆயத்தத்தைப் பெற்றுக்கொள்கின்றான்.