2 Timothy 4
4:1 இறைவனின் முன்னிலையிலும், உயிரோடிருக்கின்றவர்களையும் இறந்தவர்களையும் நியாயம் தீர்க்கவிருக்கும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் அவரது வருகையையும் அவருடைய அரசையும் முன்னிட்டு நான் உனக்கு ஆணையிட்டுக் கூறுவதாவது:
4:2 வார்த்தையைப் பிரசங்கம் பண்ணு. வாய்ப்பு உள்ள காலத்திலும் சரி, இல்லாத காலத்திலும் சரி; அதற்கு ஆயத்தமாய் இரு. தவறை உணர்த்து, கண்டனம் செய், ஊக்கப்படுத்து. இதை மிகுந்த பொறுமையுடன், கவனமான அறிவுறுத்தலின் ஊடாகச் செய்.
4:3 ஏனெனில் மக்கள் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளாத காலம் வரும். அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் ஆசைகளுக்கிணங்க தங்களுடைய காதுகளுக்கு இதமானவற்றைச் சொல்கின்ற அநேக ஆசிரியர்களைத் தங்களுக்கென்று சேர்த்துக்கொள்வார்கள்.
4:4 அவர்கள் சத்தியத்தை கேட்பதிலிருந்து விலகி, கட்டுக்கதைகளையே காதுகொடுத்துக் கேட்பார்கள்.
4:5 ஆனால் நீயோ எல்லா சூழ்நிலைகளிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு. கஷ்டங்களைத் தாங்கிக்கொள். நற்செய்தி ஊழியனுக்குரிய பணியைச் செய். உனது ஊழியத்தின் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்று.
4:6 ஏனெனில் நான் ஒரு பானபலி போன்று ஊற்றப்படுவதானது ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்துவிட்டது.
4:7 போராட்டத்தை நான் நன்றாகப் போராடினேன். ஓட்டத்தை ஓடி முடித்தேன். நான் விசுவாசத்தை பேணிக் காத்துக்கொண்டேன்.
4:8 இப்போது நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நீதிபதியாகிய ஆண்டவர், தாம் திரும்பி வரும் நாளில் அதை எனக்குப் பரிசாகத் தருவார். எனக்கு மட்டுமன்றி, அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற எல்லோருக்கும் தருவார்.
4:9 விரைவில் என்னிடம் வருவதற்கு உன்னால் முடிந்தளவு முயற்சி செய்.
4:10 ஏனெனில் தேமா இந்த உலகத்தின்மீது ஆசை வைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்குச் சென்று விட்டான். கிரேஸ்கே கலாத்தியாவுக்கும், தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டார்கள்.
4:11 லூக்கா மட்டுமே என்னுடன் இருக்கின்றான். மாற்குவையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு வா. ஏனெனில் அவன் ஊழியத்தில் எனக்கு உதவியாயிருப்பான்.
4:12 தீகிக்குவை நான் எபேசுவிற்கு அனுப்பியிருக்கிறேன்.
4:13 துரோவாவில் இருக்கின்ற கார்புவிடம் நான் விட்டுவந்த எனது மேலாடையையும், அத்துடன் என் புத்தகச் சுருள்களையும், முக்கியமாக தோற் சுருள்களையும் நீ வரும்போது எடுத்துக்கொண்டு வா.
4:14 உலோகத் தொழிலாளியான அலெக்சாந்தர் எனக்கு மிகவும் கெடுதல் செய்தான். அவனுடைய செயல்களுக்கான பிரதிபலனை கர்த்தர் அவனுக்குக் கொடுப்பார்.
4:15 நீயும் அவனைக் குறித்து எச்சரிக்கையாயிரு. ஏனெனில் நமது செய்தியை அவன் கடுமையாக எதிர்த்தான்.
4:16 எனது முதல் வழக்கு விசாரணையின்போது எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. எல்லோரும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். அது அவர்களுக்கு எதிரான குற்றமாய் கணக்கிடப்படாதிருப்பதாக.
4:17 ஆனால் கர்த்தர் என் அருகில் நின்று எனக்குப் பலத்தைக் கொடுத்தார். அதனால் என் மூலமாக செய்தி முழுமையாக அறிவிக்கப்படவும், யூதரல்லாத மக்களும் அதைக் கேட்கக் கூடியதாகவும் இருந்தது. சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன்.
4:18 ஆம், கர்த்தர் என்னை தீயவனின் தாக்குதல்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்து, தமது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பார். அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
4:19 பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போரின் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துதல்களைச் சொல்.
4:20 எரஸ்து கொரிந்துவில் தங்கிவிட்டான். துரோபீமு வியாதியாய் இருந்ததால் நான் அவனை மிலேத்துவில் விட்டுவந்தேன்.
4:21 குளிர் காலத்துக்கு முன்பு இங்கு வந்து சேர முடிந்தளவு முயற்சி செய். ஐபூலூவும், புதேஞ்சும், லீனூவும், கலவுதியாளும், மற்ற எல்லா சகோதரர்களும் உனக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கின்றார்கள்.
4:22 கர்த்தர் உன்னோடு இருப்பாராக. கிருபை உன்னோடு இருப்பதாக.