Library · ta

1 John 1

1:1 ஆரம்பத்தில் இருந்த வாழ்வு தரும் வார்த்தையை நாங்கள் கேட்டோம், எங்கள் கண்களால் கண்டோம், உற்றுப் பார்த்தோம், எங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தோம், 1:2 அந்த வாழ்வு வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கண்டு, அதைக் குறித்து சாட்சியளித்து, பிதாவோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்பட்டதுமான அந்த நித்திய வாழ்வை உங்களுக்கு அறிவிக்கிறோம். 1:3 எங்களுடைய ஐக்கியம், பிதாவோடும் அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கின்றபடியால், நீங்களும் எங்களுடன் ஐக்கியம் வைத்துக்கொள்வதற்காக நாங்கள் கண்டதையும் கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறோம். 1:4 அத்தோடு நமது மனமகிழ்ச்சி முழுநிறைவடையும்படி இவைகளை எழுதுகின்றோம். 1:5 இறைவன் ஒளியாய் இருக்கின்றார். அவரில் சிறிதேனும் இருள் இல்லை என்பதே நாங்கள் அவரிடமிருந்து கேட்டதும், உங்களுக்கு அறிவிக்கின்ற செய்தியுமாயிருக்கிறது. 1:6 எனவே நாம் இறைவனுடன் ஐக்கியமாய் இருக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு இருளிலே நடந்தால், உண்மையின்படி வாழ்கின்றவர்களாக இராமல் பொய் சொல்கின்றவர்களாக இருப்போம். 1:7 ஆனால், இறைவன் ஒளியில் இருப்பதைப் போல, நாமும் ஒளியிலே நடந்தால் நம்மிடையே ஐக்கியம் இருக்கும். இறைவனின் மகனாகிய இயேசுவின் இரத்தம் பாவம் அனைத்திலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கும். 1:8 நாம் பாவமற்றவர்கள் என்று சொல்வோமேயானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். நமக்குள் உண்மை இல்லை. 1:9 நம்முடைய பாவங்களை நாம் ஏற்றுக்கொண்டு இறைவனிடம் அறிக்கையிட்டால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையுள்ளவரும் நீதியுள்ளவருமாக இருக்கின்றார். 1:10 நாம் பாவம் செய்யவில்லை என்று சொல்வோமேயானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறோம். அவருடைய வார்த்தை நமக்குள் இல்லை.