1 John 2
2:1 என் அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்கும்படி இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். யாராவது பாவம் செய்தால், நீதியுள்ளவரான இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுகின்றவராக இருக்கின்றார்.
2:2 நம்முடைய பாவங்களுக்காக மட்டுமல்ல, முழு உலகத்தினதும் பாவங்களுக்கான பாவநிவாரண பலி அவரே.
2:3 அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
2:4 “இறைவனை நான் அறிந்திருக்கிறேன்” என்று ஒருவன் சொல்லியும், இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவன் பொய்யன். சத்தியம் அவனுக்குள் இல்லை.
2:5 ஆனால் யாராவது அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால், இறைவனின் அன்பு அவனில் உண்மையிலேயே நிறைவு பெறுகிறது. இவ்விதமாக நாம் இறைவனில் இருக்கின்றோம் என்பதை அறிந்துகொள்கின்றோம்.
2:6 ஒருவன் தான் இறைவனில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டால் இயேசுவைப் போலவே தானும் நடக்க வேண்டும்.
2:7 அன்பானவர்களே, நான் உங்களுக்கு புதிய கட்டளையை அன்றி உங்களுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த பழைய கட்டளையையே எழுதுகிறேன். நீங்கள் ஏற்கெனவே கேட்ட உண்மை வார்த்தையே அந்தக் கட்டளை.
2:8 அதேநேரம், ஒரு புதிய கட்டளையையும் உங்களுக்கு எழுதுகிறேன். இருள் அகன்று போகின்றது, மெய்யான ஒளி பிரகாசிக்கிறது, அது அவரிலும் உங்களிலும் காணப்படும் உண்மையாயிருக்கிறது.
2:9 ஒளியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் யாராவது தன் சகோதரனை வெறுத்தால், அவன் இன்னும் இருளில் இருக்கின்றான்.
2:10 தன் சகோதரனை நேசிக்கின்ற ஒருவனோ ஒளியில் இருக்கின்றான். மற்றவரை தடுக்கி விழச் செய்யும் எதுவும் அவனிடம் இல்லை.
2:11 ஆனால் தன் சகோதரனை வெறுக்கின்றவன் எவனோ, அவன் இருளுக்குள் இருந்து, இருளிலே நடக்கின்றான். இருள் அவனது கண்களை குருடாக்கியபடியால், தான் போகுமிடத்தை அறியாதிருக்கிறான்.
2:12 அன்பான பிள்ளைகளே, அவருடைய பெயரின் பொருட்டு உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
2:13 தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கின்றவரை நீங்கள் அறிந்திருக்கின்றபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, தீயவனை நீங்கள் வெற்றி கொண்டிருக்கின்றபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
2:14 அன்பான பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கின்றபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கின்றவரை நீங்கள் அறிந்திருக்கின்றபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, நீங்கள் பலம் உள்ளவர்களாகவும், இறைவனுடைய வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருப்பதாலும், நீங்கள் தீயவனை வெற்றிகொண்டிருப்பதாலும், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
2:15 உலகத்திலும் உலகத்திலுள்ள எவற்றிலும் அன்பு செலுத்த வேண்டாம். யாராவது உலகத்தில் அன்பு செலுத்தினால், அவனில் பிதாவின் அன்பு இல்லை.
2:16 ஏனெனில் உலகத்தில் உள்ளவைகளான மனித இயல்பின் ஆசைகள், கண்களின் ஆசை, வாழ்வின் பெருமை ஆகிய அனைத்தும் பிதாவிடமிருந்து வருவதில்லை, உலகத்திலிருந்தே வருகின்றன.
2:17 உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் மறைந்து போகின்றன. ஆனால் இறைவனுடைய விருப்பத்தைச் செய்கின்றவனோ என்றென்றும் வாழ்வான்.
2:18 அன்பான பிள்ளைகளே, இது கடைசி மணிநேரமாய் இருக்கின்றது. போலி கிறிஸ்து வருவான் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றபடி, போலி கிறிஸ்துக்கள் பலர் இப்பொழுதே வந்திருக்கிறார்கள். இதனால் இதுவே கடைசி மணி நேரம் என்று நாம் அறிந்துகொள்கின்றோம்.
2:19 நம்மைவிட்டு அவர்கள் பிரிந்து போனார்கள். ஆனால், அவர்கள் நம்முடையவர்கள் அல்ல. அவர்கள் நம்முடையவர்களாய் இருந்திருந்தால் நம்மோடு இருந்திருப்பார்கள். அவர்கள் பிரிந்து சென்றமை அவர்களில் எவருமே நம்முடையவர்கள் அல்ல என்பதைக் காண்பித்துவிட்டது.
2:20 ஆனால் நீங்கள் எல்லோரும் பரிசுத்தமானவரிடமிருந்து அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டவர்களாகவும் உண்மையை அறிந்துகொண்டவர்களாகவும் இருக்கின்றீர்கள்.
2:21 உங்களுக்கு உண்மை தெரியாது என்பதற்காக அல்ல, நீங்கள் அதை அறிந்திருப்பதனாலும், எந்தவொரு பொய்யும் உண்மையிலிருந்து வருவதில்லை என்பதாலுமே இதை நான் எழுதுகின்றேன்.
2:22 இயேசுவே, மனிதனாக வந்த கிறிஸ்து என்பதை மறுதலிப்பவனே அல்லாமல், வேறு யார் பொய்யன்? பிதாவையும் அவருடைய மகனையும் மறுதலிக்கின்றவனே போலி கிறிஸ்துவாயிருக்கிறான்.
2:23 மகனை மறுதலிக்கின்ற எவனும் பிதாவினுடையவன் அல்ல, மகனை அறிக்கையிடுகின்றவன் எவனோ அவனுடன் பிதா இருக்கின்றார்.
2:24 எனவே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்தவை உங்களில் நிலைத்திருக்கட்டும். அப்படியிருந்தால், நீங்கள் கிறிஸ்துவிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
2:25 அவர் நமக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கின்ற நித்திய வாழ்வு இதுவே.
2:26 உங்களை ஏமாற்றி வழிவிலகப் பண்ணுகின்றவர்களை மனதிற்கொண்டே இவற்றை உங்களுக்கு எழுதுகிறேன்.
2:27 நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கின்றபடியால் யாரும் உங்களுக்கு போதிக்க வேண்டிய அவசியம் இல்லை; அந்த அபிஷேகம் உங்களுக்கு எல்லாவற்றையும் போதிக்கிறது. அது உண்மையாயிருக்கிறது, போலியானது அல்ல. அது உங்களுக்கு போதித்தபடியே அவரில் நிலைத்திருங்கள்.
2:28 இப்போதும் அன்பான பிள்ளைகளே, மீண்டும் அவர் தமது வருகையில் தோன்றும்போது நாம் மனவுறுதியுடனும் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கும்படி அவரில் நீங்கள் நிலைத்திருங்கள்.
2:29 இறைவன் நீதியுள்ளவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீதியாய் நடக்கின்ற ஒவ்வொருவனும் அவரால் பிறந்திருக்கின்றான் என்பதை அறிவீர்கள்.