Library · ta

1 John 4

4:1 அன்பானவர்களே, பல போலி இறைவாக்கினர்கள் உலகமெங்கும் பரவியிருக்கின்றபடியால் நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் இறைவனிடம் இருந்து வந்தனவா என்று அவைகளைச் சோதித்துப் பாருங்கள். 4:2 இறைவனுடைய ஆவியை நீங்கள் இவ்விதமாக அறிந்துகொள்ள முடியும்: மனித உடலில் வந்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொரு ஆவியும், இறைவனிடமிருந்து வந்திருக்கிறது. 4:3 மனித உடலில் வந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு ஆவியும் இறைவனிடமிருந்து வரவில்லை. இப்படியாக வரும் என்று நீங்கள் கேள்விப்பட்ட போலி கிறிஸ்துவின் ஆவி இதுவே, அது இப்பொழுதே உலகத்தில் இருக்கின்றது. 4:4 அன்பான பிள்ளைகளே, உலகத்தில் இருக்கின்றவனைவிட உங்களில் இருக்கின்றவர் பெரியவராய் இருக்கின்றார். அதனால், இறைவனுக்கு உரியவர்களாகிய நீங்கள் அந்த போலி இறைவாக்கினர்களை வெற்றி கொண்டீர்கள். 4:5 அவர்கள் உலகத்திற்கு உரியவர்கள். ஆகவே அவர்கள் உலக நோக்கத்தின்படி பேசுகின்றார்கள். உலகமும் அவர்கள் சொல்வதைக் கேட்கின்றது. 4:6 நாம் இறைவனுக்கு உரியவர்கள். இறைவனை அறிந்தவர்கள் நாம் சொல்வதைக் கேட்கின்றார்கள். இறைவனை அறியாதவர்கள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை. இவ்விதமாக, சத்திய ஆவியையும் தவறான ஆவியையும் நாம் அறிந்திருக்கிறோம். 4:7 அன்பானவர்களே, நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருப்போமாக. ஏனெனில் அன்பு இறைவனிடமிருந்து வருகின்றது. அன்பாயிருக்கின்ற ஒவ்வொருவரும் இறைவனால் பிறந்து, இறைவனை அறிந்திருக்கிறார்கள். 4:8 அன்பில்லாதோர் இறைவனை அறியாதிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் அன்பாகவே இருக்கின்றார். 4:9 நாம் அவர் மூலமாக வாழ்வடையும்படி அவரது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அனுப்பியதால், அவர் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. 4:10 நாம் இறைவனை அன்பு செய்தோம் என்பதல்ல, அவர் நம்மில் அன்பு காட்டி, நம்முடைய பாவநிவாரண பலியாகத் தமது மகனை அனுப்பியதே அன்பு. 4:11 அன்பானவர்களே, இறைவன் நம்மீது இந்தளவு அன்பாயிருந்தபடியால், நாமும் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருக்கக் கடமைப்பட்டவர்கள். 4:12 ஒருவரும் ஒருபோதும் இறைவனைக் கண்டதில்லை. நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருந்தால், இறைவன் நமக்குள் நிலைகொண்டிருக்கிறார். அவருடைய அன்பும் நம்மில் முழுநிறைவாகின்றது. 4:13 அவர் தமது ஆவியை நமக்குக் கொடுத்திருக்கின்றதனால் நாம் அவரில் வாழ்கின்றோம் என்றும், அவர் நம்மில் வாழ்கின்றார் என்றும் நாம் அறிந்திருக்கின்றோம். 4:14 பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதைக் கண்டு அதற்கு நாம் சாட்சி அளிக்கின்றோம். 4:15 யாராவது இயேசுவை இறைவனுடைய மகன் என்று ஏற்றுக்கொண்டால் இறைவன் அவனில் வாழ்கிறார், அவனும் இறைவனில் வாழ்கின்றான். 4:16 இவ்விதமாய், இறைவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை நாம் அறிந்திருக்கிறோம், அதை நம்புகின்றோம். இறைவன் அன்பாகவே இருக்கின்றார். அன்பில் வாழ்கின்றவன், இறைவனில் வாழ்கின்றான், இறைவனும் அவனில் வாழ்கின்றார். 4:17 இவ்விதமாய், இந்த உலகத்தில் நாம் இயேசுவைப்போல இருக்கின்றபடியால், நியாயத்தீர்ப்பு நாளில் மனவுறுதியாயிருக்கும்படி, அன்பு நமக்குள் முழுநிறைவடைகிறது. 4:18 அன்பில் பயமில்லை. முழுநிறைவான அன்பு பயத்தை வெளியேற்றும். தண்டனைத்தீர்ப்பை குறித்தே பயமுண்டாகும். எனவே பயப்படுகின்றவன் அன்பில் முழுநிறைவானவன் அல்ல. 4:19 அவர் முதலில் அன்பாய் இருந்ததனாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம். 4:20 “நான் இறைவனில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகின்ற ஒருவன் தனது சகோதரனை வெறுத்தால் அவன் பொய்யன். ஏனெனில், தான் காண்கின்ற தன் சகோதரனில் அன்பாயிராத ஒருவன், காணாத இறைவனில் அன்பாயிருக்க முடியாது. 4:21 இதனால், இறைவனிடத்தில் அன்பாயிருக்கின்றவன் தன் சகோதரரிடத்திலும் அன்பாயிருக்க வேண்டும் என்ற கட்டளையை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.