Library · ta

1 John 3

3:1 நாம் இறைவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்படுவதற்காக, பிதா நம்மீது வைத்த பேரன்பு எவ்வளவு பெரியது என்று பாருங்கள். அப்படியே நாம் அவரின் பிள்ளைகளாயிருக்கிறோம். உலகம் அவரை அறியாதிருப்பதால் நம்மையும் அறியாதிருக்கிறது. 3:2 அன்பானவர்களே, இப்போது நாம் இறைவனுடைய பிள்ளைகளாய் இருக்கின்றோம். இனிமேல் எப்படி இருப்போம் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் வெளிப்படும்போது நாம் அவரைப் போலவே இருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவர் இருக்கின்றபடியே நாம் அவரைக் காண்போம். 3:3 அவரில் இவ்விதமான நம்பிக்கையுடைய ஒவ்வொருவனும், கிறிஸ்து தூய்மையாய் இருப்பது போலவே தன்னையும் தூய்மையாக்கிக்கொள்கின்றான். 3:4 பாவம் செய்கின்ற எவரும் நீதிச்சட்டத்தை மீறுகிறார்கள். நீதிச்சட்டத்தை மீறுவதே பாவம். 3:5 ஆனால், நம்முடைய பாவங்களை நீக்கும்படி கிறிஸ்து வந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவரிலோ, ஒரு பாவமும் இல்லை. 3:6 ஆகவே கிறிஸ்துவில் வாழ்பவன் தொடர்ந்து பாவம் செய்வதில்லை. தொடர்ந்து பாவம் செய்கின்ற எவனும் கிறிஸ்துவைக் கண்டதும் இல்லை, அவரை அறிந்ததும் இல்லை. 3:7 அன்பான பிள்ளைகளே, ஒருவரும் உங்களை ஏமாற்றி வழிவிலகச் செய்வதற்கு இடங்கொடுக்க வேண்டாம். நீதியானதைச் செய்கின்றவன், கிறிஸ்து நீதியுள்ளவராய் இருப்பதைப் போல அவனும் நீதியுள்ளவனாய் இருக்கின்றான். 3:8 ஆனால் பாவம் செய்கின்றவனோ, பிசாசுக்குரியவனாக இருக்கின்றான். ஏனெனில், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்கின்றான். பிசாசின் செய்கைகளை அழிக்கவே இறைவனின் மகன் தோன்றினார். 3:9 இறைவனால் பிறந்த எவனும், தொடர்ச்சியாக பாவம் செய்ய மாட்டான். ஏனெனில் இறைவனுடைய வித்து அவனுக்குள் இருக்கின்றது. அவன் இறைவனால் பிறந்திருப்பதனால் தொடர்ச்சியாக பாவம் செய்ய முடியாது. 3:10 இவ்விதமாக, இறைவனுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும் அறிந்துகொள்கின்றோம். நீதியைச் செய்யாத எவரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல; தமது சகோதரனில் அன்பு செலுத்தாத எவரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல. 3:11 நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருக்க வேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தியாய் இருக்கின்றது. 3:12 காயீனைப் போல் இருக்க வேண்டாம். அவன் தீயவனுக்குரியவனாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்தான். அவன் ஏன் தன் சகோதரனைக் கொலை செய்தான்? ஏனெனில் தனது செயல்கள் தீமையாய் இருந்தபடியினாலும், தனது சகோதரனுடைய செயல்கள் நீதியாய் இருந்தபடியினாலுமே அவன் அப்படிச் செய்தான். 3:13 எனக்கு பிரியமானவர்களே, உலகம் உங்களை வெறுத்தால், அதைக் குறித்து நீங்கள் வியப்படையாதீர்கள். 3:14 நாம் சகோதரரில் அன்பாயிருக்கின்றபடியால், மரணத்தைக் கடந்து வாழ்வுக்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். அன்பில்லாதோர் எவருமே மரணத்தில்தான் நிலைத்திருக்கிறார்கள். 3:15 தனது சகோதரனையோ சகோதரியையோ வெறுக்கின்ற எவனும் கொலைகாரனாய் இருக்கின்றான். அவனுக்குள் நித்திய வாழ்வு இல்லை என்பதை அறிந்திருக்கிறீர்கள். 3:16 அன்பு என்ன என்பதை, இயேசு கிறிஸ்து தமது உயிரை நமக்காகக் கொடுத்ததனால் நாம் அறிந்திருக்கிறோம். நாமும் நமது சகோதர உறவுகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 3:17 வசதி படைத்த ஒருவன், தனது சகோதர உறவுகள் தேவையோடு இருப்பதைக் கண்டும், அவன் தனது இருதயத்தை அவர்களுக்காக திறக்காது போனால், இறைவனின் அன்பு அவனில் நிலைகொள்வது எப்படி? 3:18 அன்பான பிள்ளைகளே, வெறும் வார்த்தையினாலும் பேச்சினாலும் மட்டுமல்லாமல், நமது செயலினாலும் உண்மையினாலும் அன்பு காட்டுவோமாக. 3:19 இப்படியாக நாம் உண்மைக்கு உரியவர்கள் என்று அறிந்து, இறைவன் முன்னிலையில் எமது இருதயங்களை நிலைப்படுத்திக்கொள்ளலாம். 3:20 ஏனெனில், நம்முடைய இருதயங்களே நம்மைக் குற்றவாளியாக தீர்க்கும்போதெல்லாம், இறைவன் நமது இருதயத்தைப் பார்க்கிலும் பெரியவராயிருந்து எல்லாவற்றையும் அறிவார். 3:21 அன்பானவர்களே, நம்முடைய இருதயங்கள் நம்மைக் குற்றவாளிகளாய் தீர்க்காதிருந்தால் நாம் இறைவனுக்கு முன்பாக தைரியம் கொண்டிருந்து, 3:22 அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றதனாலும், அவருக்கு பிரியமானவைகளைச் செய்கின்றதனாலும் நாம் கேட்கின்ற எதையும் அவரிடத்தில் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்வோம். 3:23 தமது மகனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் விசுவாசமாய் இருக்க வேண்டும் என்பதும், அவர் கட்டளையிட்டபடி ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருக்க வேண்டும் என்பதுமே அவருடைய கட்டளையாயிருக்கின்றது. 3:24 இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றவர்கள் அவரில் நிலைத்திருக்கிறார்கள். அவரும் அவர்களில் நிலைத்திருக்கிறார். இவ்விதமாக இறைவன் நமக்குள் நிலைத்திருக்கிறார் என்பதை அவர் நமக்குத் தந்த பரிசுத்த ஆவியானவரின் மூலமாக அறிந்திருக்கிறோம்.