Revelation 20
20:1 பின்பு பரலோகத்திலிருந்து ஒரு இறைதூதன் இறங்கி வருவதைக் கண்டேன். அவன் பாதாளத்தின் சாவியையும், கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான்.
20:2 அவன் பழங்காலத்துப் பாம்பை, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அந்த இராட்சதப் பாம்பைத் துரத்திப் பிடித்து, அதை ஆயிரம் வருடங்களுக்குக் கட்டி வைத்தான்.
20:3 அந்த ஆயிரம் வருடங்கள் முடியும் வரை மக்களை அவன் இனியும் ஏமாற்றாதபடி, அவனைப் பாதாளக்குழிக்குள் தள்ளி பூட்டியடைத்து, அதன்மீது முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்த பின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
20:4 நியாயத்தீர்ப்பு வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் அமர்ந்திருந்த அரியணைகளைக் கண்டேன். அதன்பின்பு, இயேசுவுக்காக சாட்சி கொடுத்ததற்காகவும், இறைவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டதற்காகவும் தலை துண்டிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆத்துமாக்களையும் கண்டேன். இவர்கள் அந்த மிருகத்தையோ அதன் உருவச் சிலையையோ வணங்காதவர்கள்; தங்கள் நெற்றியிலோ அல்லது தங்கள் கைகளிலோ அவனுடைய அடையாளத்தைப் பெறாதவர்கள். இவர்கள் உயிர் பெற்று எழுந்து, கிறிஸ்துவுடனே ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்தார்கள்.
20:5 மரணித்த மற்றவர்களோ அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரை உயிர் பெற்று எழுந்திருக்கவில்லை. இதுவே முதலாவது உயிர்த்தெழுதல்.
20:6 முதலாவது உயிர்த்தெழுதலில் பங்கு பெறுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமுள்ளவர்களுமாய் இருக்கின்றார்கள். இவர்கள் மீது இரண்டாம் மரணத்திற்கு வல்லமை இல்லை. இவர்கள் இறைவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய மதகுருக்களாக இருந்து கிறிஸ்துவோடு ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்வார்கள்.
20:7 அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்போது சாத்தான் தன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான்.
20:8 அவன் பூமியின் நான்கு பக்கங்களிலும் இருக்கின்ற கோகு மற்றும் மாகோகு தேச மக்களை ஏமாற்றுவதற்காகவும், யுத்தத்திற்காக அவர்களை ஒன்றுதிரட்டி சேர்ப்பதற்காகவும் புறப்பட்டுப் போவான். எண்ணிக்கையில் அவர்கள் கடற்கரை மணலைப் போல் இருப்பார்கள்.
20:9 அவர்கள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் கடந்து அணிவகுத்து வந்து, இறைவனுடைய மக்களின் முகாமையும், அவர் அன்பாயிருக்கின்ற நகரத்தையும் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால், வானத்திலிருந்து நெருப்பு வந்து அவர்களைச் சுட்டெரித்துவிட்டது.
20:10 அவர்களை ஏமாற்றிய பிசாசானவன், கந்தகம் எரிகின்ற நெருப்பு ஏரியில் தள்ளி வீசப்பட்டான். அங்கேதான் அந்த மிருகமும் போலி இறைவாக்கினனும் வீசப்பட்டிருந்தார்கள். அவர்கள் இரவும் பகலும் என்றென்றும் அங்கே வேதனை அனுபவிப்பார்கள்.
20:11 பின்பு, பெரிய வெண்மையான அரியணையையும் அதில் அமர்ந்திருக்கின்றவரையும் கண்டேன். அவரது முன்னிலையில் பூமியும் வானமும் விலகியோடி, அவை இடமின்றிப் போயின.
20:12 பின்பு நான், மரணித்த பெரியோர்களும் சிறியோர்களும் அந்த அரியணைக்கு முன்பாக நிற்பதைக் கண்டேன். அப்போது புத்தகங்கள் திறக்கப்பட்டன. வாழ்வின் புத்தகம் என்ற இன்னொரு புத்தகமும் திறக்கப்பட்டது. அந்த புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தபடி, இறந்தவர்கள் தாங்கள் செய்த செயல்களுக்கேற்ப நியாயத்தீர்ப்பு பெற்றார்கள்.
20:13 கடலில் இறந்தவர்களை கடல் ஒப்படைத்தது. மரணமும் பாதாளமும் அவைகளுக்குள் இருந்த இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களுக்கேற்ப நியாயத்தீர்ப்பு பெற்றார்கள்.
20:14 பின்பு, மரணமும் பாதாளமும் நெருப்பு ஏரியில் தள்ளி வீசப்பட்டன. இந்த நெருப்பு ஏரியே இரண்டாவது மரணம்.
20:15 எவரது பெயர் வாழ்வின் புத்தகத்திலே எழுதப்படவில்லையோ, அவர் நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டார்.