Library · ta

Revelation 21

21:1 பின்பு நான், “ஒரு புதிய வானத்தையும், ஒரு புதிய பூமியையும்” கண்டேன். ஏனெனில் முன்பு இருந்த வானமும் முன்பு இருந்த பூமியும் இல்லாமல் போயின. அங்கே கடலும் இல்லாமல் போனது. 21:2 அப்போது, புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் இறைவனிடமிருந்து பரலோகத்தை விட்டு கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அது தனது கணவனுக்காக அழகாய் அலங்கரிக்கப்பட்ட ஒரு மணமகளைப் போல் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 21:3 அப்போது அரியணையில் இருந்து ஒரு உரத்த குரல்: “இறைவன் தங்குகின்ற இடம் இப்போது மனிதருடன் இருக்கின்றது. அவர்களோடு அவர் குடியிருப்பார். அவர்கள் அவருடைய மக்களாயிருப்பார்கள். இறைவன் தாமே அவர்களுடன் இருந்து அவர்களுடைய இறைவனாயிருப்பார். 21:4 ‘அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் அவர் துடைப்பார். இனிமேல் மரணம் இருக்காது.’ புலம்பலோ, அழுகையோ, வேதனையோ இருக்காது. ஏனெனில், முன்பு இருந்த முறைமைகள் இல்லாமல் போயின” என்று சொல்வதைக் கேட்டேன். 21:5 அரியணையில் அமர்ந்திருந்தவர், “இதோ நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்!” என்று சொன்னார். மேலும் அவர், “இதை எழுதி வை. ஏனெனில், இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் உண்மையானவையுமாய் இருக்கின்றன” என்றார். 21:6 பின்பு, அவர் என்னிடம் சொன்னதாவது: “அது செய்து முடிந்தாயிற்று! நானே அல்பாவும் ஒமேகாவும், தொடக்கமும் முடிவுமாய் இருக்கின்றேன். தாகமாய் இருக்கின்றவனுக்கு வாழ்வு தரும் தண்ணீரூற்றிலிருந்து இலவசமாக அருந்தக் கொடுப்பேன். 21:7 வெற்றி பெறுகின்றவர்கள் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்வார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாயிருப்பார்கள். 21:8 ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர்கள், பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகின்றவர்கள், மந்திரவித்தைகளில் ஈடுபடுகின்றவர்கள், சிலைகளை வணங்குகின்றவர்கள், சகல பொய்யர்கள் ஆகிய இவர்கள் அனைவருக்கும் கந்தகம் எரிகின்ற நெருப்பு ஏரியே உரிய பங்காக அமையும். இதுவே இரண்டாவது மரணம்.” 21:9 அப்போது, கடைசி ஏழு வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களை வைத்திருந்த ஏழு இறைதூதர்களில் ஒருவன் என்னிடம் வந்து, “வா, நான் உனக்கு ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப் போகும் மணமகளைக் காட்டுகிறேன்” என்றான். 21:10 அப்போது, ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் என்னை ஒரு பெரிய உயர்ந்த மலைக்கு அந்த இறைதூதன் கொண்டு சென்றான். அவன் எனக்கு பரிசுத்த நகரமாகிய எருசலேம், இறைவனிடமிருந்து பரலோகத்தை விட்டு கீழே வந்துகொண்டிருந்ததைக் காண்பித்தான். 21:11 அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. விலையுயர்ந்த மாணிக்கக் கல்லின் பிரகாசத்தைப் போலவும், படிகைக் கல்லைப் போலவும், பளிங்குக் கல்லைப் போலவும் அது மின்னியது. 21:12 அந்த நகரத்திற்கு உயர்ந்த பெரிய மதிலும், பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. அந்த வாசல்களில் பன்னிரண்டு இறைதூதர்கள் நின்றார்கள். அந்த வாசல்களில் இஸ்ரயேல் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. 21:13 அதன் மூன்று வாசல்கள் கிழக்கிலும், மூன்று வாசல்கள் வடக்கிலும், மூன்று வாசல்கள் தெற்கிலும், மூன்று வாசல்கள் மேற்கிலுமாக அமைந்திருந்தன. 21:14 அந்த நகரத்தின் மதிலானது பன்னிரண்டு அத்திவாரங்களின் மேல் கட்டப்பட்டிருந்தது. அவைகளின் மீது ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. 21:15 என்னுடன் பேசிய இறைதூதன், அந்த நகரத்தையும் அதன் வாசல்களையும் அதன் மதில்களையும் அளப்பதற்கு தங்கத்தினாலான ஒரு அளவுகோலை வைத்திருந்தான். 21:16 அந்த நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் நீளமும் அகலமும் ஒரே அளவாயிருந்தன. அவன் அந்த கோலினால் நகரத்தை அளந்தான். அது 2,200 கிலோ மீட்டர் நீளமாய் இருந்தது, அவ்வாறே அதன் அகலமும் உயரமும் அதே அளவுடையதாக இருந்தன. 21:17 அவன் அந்த நகரத்தின் மதிலையும் அளந்தான். மனிதர் பயன்படுத்தும் அளவீட்டின்படி அது சுமார் 65 மீட்டர் அளவுடையதாக இருந்தது. அதுவே இறைதூதனின் அளவீடாகவும் இருந்தது. 21:18 அந்த மதில் படிகைக் கல்லால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரம் கண்ணாடி போன்ற தூய்மையான தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது. 21:19 அந்த நகரத்து மதில்களின் அத்திவாரங்கள் எல்லாவித மாணிக்கக் கற்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதலாவது அத்திவாரம் படிகைக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கக்கல், நான்காவது மரகதக்கல், 21:20 ஐந்தாவது கோமேதகக்கல், ஆறாவது பதுமராகக்கல், ஏழாவது சுவர்ணரத்தினக்கல், எட்டாவது படிகைப் பச்சைக்கல், ஒன்பதாவது புஷ்பராகக்கல், பத்தாவது வைடூரியக்கல், பதினோராவது இந்திர நீலக்கல், பன்னிரண்டாவது சுகந்திக்கல் என்பதாக இருந்தன. 21:21 அதன் பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் தனியொரு முத்தைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரத்தின் பெரிய வீதி தெளிவான கண்ணாடியைப் போன்ற சுத்தத் தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது. 21:22 அந்த நகரத்தில், நான் ஆலயத்தைக் காணவில்லை. ஏனெனில், எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அந்த நகரத்தின் ஆலயம். 21:23 அந்த நகரத்தில் ஒளி கொடுக்க சூரியனோ சந்திரனோ அவசியமில்லை. ஏனெனில், இறைவனுடைய மகிமையே அதற்கு ஒளி கொடுக்கின்றது. ஆட்டுக்குட்டியானவரே அதன் விளக்கு. 21:24 மக்கள் இனங்கள் அதன் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் அரசர்கள் தங்கள் மகிமையை நகரத்தினுள் கொண்டுசெல்வார்கள். 21:25 அந்த நகரத்தின் வாசல்கள் ஒருநாளும் மூடப்படுவதில்லை. ஏனெனில் அங்கே இரவு இல்லை. 21:26 உலக மக்களின் மகிமையும் புகழ்ச்சியும் அதற்குள் கொண்டு செல்லப்படும். 21:27 அசுத்தமான எதுவும் அதற்குள் ஒருபோதும் நுழையாது. வெட்கக்கேடானவற்றைச் செய்கின்றவனோ ஏமாற்றுகின்றவனோ அதற்குள் செல்ல மாட்டான். ஆனால், ஆட்டுக்குட்டியானவருடைய வாழ்வின் புத்தகத்தில் தங்களின் பெயர்கள் எழுதப்பட்டவர்கள் மட்டுமே அதற்குள் செல்வார்கள்.