Mark 5
5:1 அவர்கள் கடலைக் கடந்து, கதரேனருடைய பிரதேசத்திற்குப் போனார்கள்.
5:2 இயேசு படகைவிட்டு இறங்கியவுடன் தீய ஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்தான்.
5:3 அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது.
5:4 ஏனெனில் அவனுடைய கையையும் காலையும் சங்கிலியினால் கட்டிப் போட்டாலும், அவன் சங்கிலிகளை அறுத்து தனது கால்களிலுள்ள விலங்குகளை உடைத்து விடுவான். அவனைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாதிருந்தது.
5:5 அவன் கல்லறைகளிலும் குன்றுகளிலும் இரவு பகலாய் கூச்சலிட்டுக் கொண்டும், தன்னைத் தானே கூரிய கற்களினால் காயப்படுத்திக் கொண்டும் இருப்பான்.
5:6 அவன் இயேசுவை தூரத்தில் கண்டபோது ஓடிப் போய் அவருக்கு முன்பாக விழுந்து,
5:7 உரத்த குரலில் சத்தமிட்டு, “இயேசுவே, அதி உன்னதமான இறைவனின் மகனே, என்னிடமிருந்து உமக்கு என்ன வேண்டும்? என்னைத் துன்புறுத்த மாட்டீர் என இறைவன் மேல் ஆணையிடும்!” என்றான்.
5:8 ஏனெனில் இயேசு அவனிடம், “தீய ஆவியே, இவனைவிட்டு வெளியேறு!” என்று சொல்லியிருந்தார்.
5:9 அப்போது இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவன், “என் பெயர் லேகியோன். ஏனெனில், நாங்கள் அநேகராயிருக்கிறோம்” என்று பதிலளித்தான்.
5:10 மேலும், அந்தப் பகுதியைவிட்டு தங்களை அனுப்ப வேண்டாம் என்று திரும்பத் திரும்ப அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.
5:11 அங்கே அருகேயிருந்த மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தபடியால்,
5:12 பேய்கள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பும்; நாங்கள் அவைகளுக்குள்ளே புகுந்துகொள்ள அனுமதி கொடும்” என்று கெஞ்சிக் கேட்டன.
5:13 அவர் அவைகளுக்கு அனுமதி கொடுத்தார். அந்தத் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன; அந்தப் பன்றிக் கூட்டத்தில் இருந்த சுமார் இரண்டாயிரம் பன்றிகள் மலைச்சரிவினூடாக கீழே விரைந்து ஓடி, ஏரியில் விழுந்து மூழ்கின.
5:14 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப் போய், பட்டணத்திலும் நாட்டுப் புறத்திலும் இருந்தவர்களிடம் இதை அறிவித்தார்கள். நடந்தது என்ன என்பதைப் பார்ப்பதற்கு, மக்கள் அங்கே போனார்கள்.
5:15 அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, லேகியோன் என்னும் பேய்கள் பிடித்திருந்தவன் உடை உடுத்தி, மனத்தெளிவுடன் இருப்பதைக் கண்டார்கள்; அதனால் அவர்கள் பயமடைந்தார்கள்.
5:16 நடந்ததைக் கண்டவர்கள், பேய் பிடித்தவனுக்கும் பன்றிகளுக்கும் நிகழ்ந்ததைப்பற்றி அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள்.
5:17 அப்போது அந்த மக்கள் இயேசுவை அந்தப் பிரதேசத்தை விட்டுப் போய்விடும்படி கெஞ்சிக் கேட்கத் தொடங்கினார்கள்.
5:18 இயேசு படகில் ஏறியபோது, பேய் பிடித்திருந்தவன் அவருடன் இருக்க விரும்பி கெஞ்சிக் கேட்டான்.
5:19 இயேசு அவனைத் தன்னுடன் வர அனுமதிக்காமல், “நீ உன் வீட்டிற்குப் போய், கர்த்தர் உனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதையும் அவர் உனக்குக் காண்பித்த இரக்கத்தையும் அவர்களுக்குச் சொல்” என்றார்.
5:20 அவன் புறப்பட்டுப் போய், இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்று தெக்கப்போலி பட்டணங்கள் எங்கும் சொல்லத் தொடங்கினான். அவர்கள் எல்லோரும் வியப்படைந்தார்கள்.
5:21 இயேசு திரும்பவும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்கு வந்தார். அவர் கடற்கரையில் இருக்கும்போது, மக்கள் பெருங்கூட்டமாய் அவரைச் சுற்றித் திரண்டு வந்தார்கள்.
5:22 அப்போது யூத ஜெபஆலயத் தலைவர்களுள் ஒருவனான யவீரு என்ற பெயருடையவன் அங்கு வந்தான். அவன் இயேசுவைக் கண்டு அவருடைய பாதத்தில் விழுந்து,
5:23 அவரிடம், “எனது சிறிய மகள் மரணத் தறுவாயில் இருக்கின்றாள். தயவுசெய்து நீர் வந்து, உமது கைகளை அவள் மீது வைப்பீராக. அப்போது அவள் குணமடைந்து பிழைத்துக்கொள்வாள்” என்று சொல்லி மிகவும் கெஞ்சி மன்றாடிக் கேட்டான்.
5:24 அதனால் இயேசு அவனுடன் சென்றார். அப்போது, மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக்கொண்டு பின்னால் சென்றது.
5:25 பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் அங்கே இருந்தாள்.
5:26 அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவழித்து முடித்தும் குணமடையவில்லை. அவளுடைய நிலைமை மேலும் மோசமடைந்திருந்தது.
5:27 அவள் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டபோது அவருக்குப் பின்னாக மக்கள் கூட்டத்திற்குள் வந்து அவருடைய மேலாடையைத் தொட்டாள்.
5:28 ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டாலே குணமடைவேன்” என்று அவள் எண்ணியிருந்தாள்.
5:29 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; தன்னுடைய வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள்.
5:30 இயேசு தன்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை உடனே அறிந்து மக்கள் கூட்டத்தாரிடம் திரும்பி, “எனது உடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.
5:31 அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “மக்கள் உம்மைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருப்பதைக் காண்கின்றீரே. அப்படியிருக்க, ‘என்னைத் தொட்டது யார்’ என்று நீர் எப்படிக் கேட்கலாம்?” என்றார்கள்.
5:32 ஆனாலும் இயேசு, தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிலும் பார்த்தார்.
5:33 அப்போது தனக்கு நடந்திருந்ததை அறிந்திருந்த அந்தப் பெண் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள்; அவள் பயத்துடன் நடுங்கியபடி உண்மை முழுவதையும் அவருக்குச் சொன்னாள்.
5:34 அவர் அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது. சமாதானத்துடனே போ. உன் வேதனை நீங்கி குணமடை” என்றார்.
5:35 இயேசு தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கையில், ஜெபஆலயத் தலைவனின் வீட்டிலிருந்து சிலர் வந்து அவனிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். ஏன் இனிமேலும் போதகருக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டும்?” என்றார்கள்.
5:36 அவர்கள் சொன்னதை இயேசு பொருட்படுத்தாமல் ஜெபஆலயத் தலைவனிடம், “பயப்படாதே, நம்பிக்கையாயிரு” என்றார்.
5:37 பின்பு அவர், பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர வேறு எவரையும் தம்முடன் வர அனுமதிக்கவில்லை.
5:38 அவர்கள் ஜெபஆலயத் தலைவனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு மக்கள் அழுவதனாலும் சத்தமிட்டுப் புலம்புவதனாலும் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை இயேசு கண்டார்.
5:39 அவர் உள்ளே போனதும் அவர்களிடம், “ஏன் இப்படிச் சத்தமிட்டு புலம்புகிறீர்கள்? பிள்ளை மரணமடையவில்லை, தூங்குகிறாள்” என்றார்.
5:40 அவர்களோ அவரைப் பார்த்து ஏளனமாக சிரித்தார்கள். அவர் அவர்கள் எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு, அந்தப் பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தன்னுடன் இருந்த சீடர்களையும் அழைத்துக்கொண்டு பிள்ளை இருந்த இடத்திற்குச் சென்றார்.
5:41 அவர் அவளுடைய கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூமி” என்றார். அதற்கு, “சிறு பெண்ணே, நான் உனக்குச் சொல்கின்றேன், உயிரோடு எழுந்திரு” என்பது அர்த்தமாகும்.
5:42 அந்தச் சிறு பெண் உடனே எழுந்து நடந்ததைப் பார்த்ததும் அவர்கள் மிகவும் வியப்படைந்தார்கள். அவளுக்கு பன்னிரண்டு வயது.
5:43 அங்கு நடந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று, அவர் கண்டிப்பாக உத்தரவிட்டார். பின்பு அந்த சிறு பெண்ணுக்கு உண்பதற்கு ஏதாவது கொடுக்கும்படி அவர்களிடம் சொன்னார்.